Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கலாச்சாரத்தை பறைசாற்றும் பாரம்பரிய புடவைகளை கைத்தறி மூலம் மீட்டெடுக்கும் சென்னை தம்பதி!

சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார், வர்ஷா தம்பதி தென்னிந்திய கலாச்சாரத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக House of Tuhil என்கிற நிறுவனத்தைத் தொடங்கி கைத்தறி புடவைகளை சொந்த தறியில் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

கலாச்சாரத்தை பறைசாற்றும் பாரம்பரிய புடவைகளை கைத்தறி மூலம் மீட்டெடுக்கும் சென்னை தம்பதி!

Monday May 16, 2022 , 6 min Read

வளர்ச்சி என்கிற பெயரில் நாம் அதிவேகமாக முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த வளர்ச்சியில் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் அதற்கான விலையையும் நாம் கொடுக்கத் தவறவில்லை.

உதாரணத்திற்கு நம் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற உணவு வகைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், இன்று துரித உணவு சாப்பிட்டு, நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது. அதிக பணமும் பொருளும் ஈட்டமுடிகிறது. ஆனால், அதற்கு நாம் கொடுத்துள்ள விலை மிகவும் பெரியது.

ஆம்! நம் ஆரோக்கியத்தை அடமானம் வைத்துவிட்டே இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தியிருக்கிறோம்.

இதுவரை நாம் இதைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. ஆனால், இன்று அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பலர், சற்றே நிதானித்து இதை சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அந்த சிந்தனையின் வெளிப்பாடாகவே பாரம்பரிய வாழ்க்கைமுறையை பல வகைகளில் மீட்டு எடுப்பதாகும். இதன் வளர்ச்சி அதிவேகமாக முன்னோக்கி இருந்தாலும், அதன் மீட்சி அத்தனை வேகத்தில் இல்லை. என்றாலும் அதற்கான முயற்சிகள் நடந்து வருவது திருப்தியளிக்கிறது.

ரசாயனங்களும் நச்சுப்பொருட்களும் நாம் உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் நிறைந்திருக்கின்றன. இன்றைய நவீன உலகில் எத்தனையோ பிராண்டுகள் மக்களை மூளைச்சலவை செய்து ரசாயனங்களை திணிக்கின்றன. இந்த இரைச்சல்களுக்கு மத்தியில் சிலர் சத்தமில்லாமல் பாரம்பரியத்தை மீட்டு வருகின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைந்திருப்பதால் பாரம்பரியத்தை மறந்துவிடவேண்டிய அவசியமில்லை. பாரம்பரிய வாழ்க்கைமுறையை மீட்டெடுப்பதற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதை நிரூபித்து வருகின்றனர் ஜெயக்குமார், வர்ஷா தம்பதி.

house of tuhil

சென்னையைச் சேர்ந்த ஜெயக்குமார், வர்ஷா தம்பதி தென்னிந்திய கலாச்சாரத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக House of Tuhil என்கிற நிறுவனத்தைத் தொடங்கி கைத்தறி புடவைகளை சொந்தத் தறியில் தயாரித்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

ஜெயக்குமார் கலா‌ஷேத்ரா ஃபவுண்டேஷன் முன்னாள் மாணவர். அங்குதான் கர்நாடக சங்கீதம் பயின்றுள்ளார். அங்கு படித்தபோது கலை சம்பந்தப்பட்ட அனைத்து பிரிவுகளையும் பற்றித் தெரிந்துகொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

“2006-2014 காலகட்டத்துல கலா‌ஷேத்ராலயே வேலை செய்ய ஆரம்பிச்சேன். ரிசர்ச் & டாக்குமெண்டேஷன்ல வேலை பார்த்தேன். தென்னிந்திய கலாச்சாரத்தை பத்தின வரலாறுல ஒரு மிகப்பெரிய ஈடுபாடு ஏற்பட்டுது,” என்கிறார் ஜெயக்குமார்.

ஜெயக்குமார் வரலாறு, தமிழ் இலக்கியம் இரண்டிலும் முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்துள்ளார். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தென்னிந்திய கலாச்சாரம் தொடர்பான வரலாறு பற்றி ஆய்வு செய்து வந்துள்ளார்.

”கலா‌ஷேத்ரால இசை, நடனம் இதெல்லாம் பயிற்சி கொடுக்கறது மட்டுமில்லாம அங்க ஒரு நெசவு ஆலையும் இருக்கு. கலா‌ஷேத்ரா நிறுவனர் ருக்மிணி தேவி கலாச்சாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கற ஒரு ஆர்வலர். 1940-கள்ல கலாஷேத்ரா ஆரம்பிச்சாங்க. இது வளர, வளர அவங்களோட நாட்டிய, நாடகங்களுக்குத் தேவையான காஸ்ட்யூமை அவங்களே பண்ணனும்னு விரும்பினாங்க. அப்படிதான் அங்க கைத்தறி நெசவு மையம் ஆரம்பிச்சாங்க,” என விவரிக்கிறார்.

கலா‌ஷேத்ராவில் கைவினைஞர்கள் கண்டறியப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றளவும் அங்கு கைத்தறி ஆடைகள் தயாரிக்கப்பட்டு வருவதை ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார்.

இப்படி ஜெயக்குமாருக்கு கைத்தறி மீது ஆர்வம் பிறந்தது. கைத்தறி பற்றி அவர் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தபோதும் அதை வணிகமாக்குவது பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை.

2019ம் ஆண்டு ஜெயக்குமார், வர்ஷாவை திருமணம் செய்துகொண்டார். வர்ஷா பரதநாட்டியக் கலைஞர். எம்பிஏ முடித்துள்ளார். அவருக்கும் கைத்தறி மீது ஈடுபாடு இருந்தது. திருமணம் நிச்சயமானதிலிருந்து இருவரும் கைத்தறி பற்றியே அதிக நேரம் பேசியிருக்கிறார்கள்.

“ரெண்டு பேருக்குமே கைத்தறி வகைகள்ல ஆர்வம் அதிகம். எப்பவும் கைத்தறி பத்தியே பேசுவோம். இதையே பிசினஸ் ஆக்கலாம்னு எங்க ரெண்டு பேருக்கும் தோணுச்சு,” என்று வணிகத்தின் ஆரம்பப்புள்ளியை விவரிக்கிறார்.

2019-ம் ஆண்டில் இதுபற்றி பேச்சுவார்த்தை நடந்தாலும்கூட 2020-ம் ஆண்டிலேயே இவர்கள் தொழில் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

”நான் கல்ச்சர் டிராவல் கம்பெனி நடத்திகிட்டிருக்கேன். அதுமட்டுமில்லாம பத்து வருஷமா ஒரு என்ஜிஓ நடத்திகிட்டிருக்கேன். தென்னிந்திய கலை, கலாச்சாரம், வரலாறு இதைபத்தியெல்லாம் மாணவர்கள், குறிப்பா கிராமப்புற மாணவர்களுக்கு வரணும்னு விழிப்புணர்வு ஏற்படுத்தறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவில் சார்ந்த கலைஞர்களுக்கு நிதியுதவு செய்ய விரும்பினோம். அதுக்காக நிதி திரட்டினோம்,” என்றார்.

இந்த சமயத்தில் வர்ஷா கைத்தறி நெசவாளர்கள், டிசைனர்கள் போன்றோருடன் கலந்துரையாடி வந்துள்ளார்.

“பாரம்பரிய புடவைங்களை நாமளே டிசைன் பண்ணணும்னு முடிவு பண்ணோம். மறுவிற்பனை செய்யக்கூடாதுன்னு ரொம்ப தெளிவாவே இருந்தோம். சொந்தமா தறி அமைச்சு, டிசைன் பண்ணி, தயாரிச்சு கொடுக்கணும். இதுதான் எங்களோட நோக்கமா இருந்துது,” என்கிறார்.

வணிக நோக்குடன் ஒருபுறம் செயல்பட்டாலும் மற்றொருபுறம் கைவினைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்து வருகின்றனர் ஜெயக்குமார்-வர்ஷா தம்பதி.

1

வணிகத்தின் தொடக்கத்தைப் பற்றி ஜெயக்குமார் விவரித்துக்கொண்டிருக்கையில் வர்ஷா தொடர்ந்தார்.

“நான் கெமிக்கல் என்ஜினியரிங் படிச்சேன். சின்ன வயசுலேர்ந்தே பரதம் கத்துக்க ஆரம்பிச்சேன். அதனால் புடவைன்றது எனக்கு ரொம்பவே நெருக்கமா இருக்கற விஷயம். டான்ஸ் கிளாஸ்ல எப்பவும் புடவைங்களை பத்தின பேச்சு இருக்கும். 2012-2014 ஆண்டுகள்ல எம்பிஏ படிச்சேன். கலை, கலாச்சரம் தொடர்பாதான் வணிகத்துல ஈடுபடணும்னு நினைச்சிட்டிருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் அதுக்கு வடிவம் கிடைச்சுது. ரெண்டு பேருக்குமே கலை, கலாச்சாரத்துல ஆர்வம் இருந்தது,” என்கிறார்.

இருவரும் சந்தையில் இருக்கும் வாய்ப்புகளை ஆராயத் தொடங்கினார்கள். புடவை சந்தையில் பலர் செயல்படும் நிலையில் தனித்துவமாக செயல்பட விரும்பினார்கள். ஆனால் என்ன செய்வது? எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும்? இதெல்லாம் அவர்கள்முன் எழுந்த கேள்விகள்.

“நிறைய ஆய்வு செஞ்சோம். டெக்ஸ்டைல் டிசைனர்களை சந்திச்சு பேசினோம். நெசவாளர்களை சந்திச்சு பேசினோம். கோவிட் சமயத்துல இவங்ககூடலாம் பேசும்போது அவங்க சந்திக்கற பிரச்சனைகளை எங்ககிட்ட பகிர்ந்துகிட்டாங்க,” என்கிறார்.

“நாங்க எதுவுமே புதுசா பண்ணலை. பழைய காலத்து டிசைன். பழைய காலத்து கலர். இதையெல்லாம் திருப்பி கொண்டு வர்றோம். கடந்த சில வருஷங்களாவே நாம பயன்படுத்தற கலர்கள் மாறிடுச்சு. பழைய காலத்துல இருந்த நிறங்களையும் டிசைன்களையும் எப்படி திரும்ப கொண்டு வரலாம்னு யோசிச்சோம். அப்படித்தான் ’ஹவுஸ் ஆஃப் துகில்’ (House of Tuhil) ஆரம்பிச்சுது,” என்கிறார் வர்ஷா.

சில ஆண்டுகள் செலவிட்டு விரிவாக ஆய்வு செய்தனர். துறைசார் நிபுணர்களை சந்தித்து அவர்கள் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி கேட்டறிந்துள்ளனர். பின்னர் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ’ஹவுஸ் ஆஃப் துகில்’ நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

துகில் புடவைகள்

பட்டுப்புடவை, காட்டன், சில்க் காட்டன், கூரைப்புடவை எனப்படும் கூரைநாடு புடவை போன்றவற்றுடன் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். காஞ்சி பட்டு, ஆரணி பட்டு போன்ற புடவைகள் தற்போது வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

“ஆரணி, காஞ்சிபுரம், பொள்ளாச்சி மாதிரியான இடங்கள்ல நாங்களே சொந்தமா தறி அமைக்கறோம். அங்க இருக்கற நெசவாளரை சம்பளத்துக்கு நியமிச்சிருக்கோம். டிசைனரை நியமிச்சிருக்கோம். எல்லாரும் உக்காந்து கலர் காம்பினேஷன் பத்தியும் நெசவு வேலை பத்தியும் கலந்து பேசி முடிவு பண்ணுவோம்,” என்கிறார் ஜெயக்குமார்.
“கோபுரம், ருத்திராட்சம் மாதிரியான பழமையான மோடிஃப் கொண்டு வரணும்னு ஆசைப்படறோம். மாடர்ன் அழகுதான் இல்லைன்னு சொல்லலை. ஆனா பழசை விட்டுடக்கூடாதுன்னு நினைக்கறோம். பாரம்பரிய வண்ணங்கள், டிசைன் இதுதான் எங்களோட தனித்துவமான அம்சம்,” என்கின்றனர் இந்நிறுவனர்கள்.

கைகளால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கென ஒரு தனிப்பட்ட மதிப்பு இருப்பதை சுட்டிக்காட்டினார் ஜெயக்குமார்.

2

”என்னதான் மிஷன்ல தயாரிச்சாலும் கைகளால் செய்யற பொருட்களுக்கு அதுக்கு உரிய மதிப்பு, அழகு, ஜீவன் இருக்குன்னு நான் நம்பறேன். நிஜமான ஒரு இசைக்கருவியை கைகள்ல தொட்டு வாசிக்கறதுக்கும் கம்ப்யூட்டர்ல வாசிக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கதானே செய்யும்?” என்று கேள்வியெழுப்புகிறார் ஜெயக்குமார்.

அதேபோல், ஒரு நெசவாளர் ஒரு பட்டுப்புடவை நெய்யறதுக்கு 5-7 நாட்கள் ஆகும். ஆனால் இயந்திரங்கள் கொண்டு தயாரிக்கும்போது ஒரே நாளில் 4 புடவைகள் தயாரிக்கமுடியும்.

”கைகளால் தயாரிக்கும்போது அதுக்கே உரிய அவகாசம் தேவைப்படும். இதைப் பத்தி மக்களுக்கு எடுத்து சொல்லணும். இந்த பொறுப்புணர்வு தயாரிப்பாளர்களுக்கு இருக்கணும். இதை விவரமா சொல்லும்போது நிச்சயம் மக்கள் புரிஞ்சுப்பாங்க. தரமான தயாரிப்பைக் கொடுத்துட்டு அதைப் பத்தின விழிப்புணர்வும் ஏற்படுத்திட்டா கட்டாயம் வாங்குவாங்க,” என்கிறார்.

கைத்தறிக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது என்கின்றனர்.

“எங்ககிட்ட புடவை வாங்கினா வெறும் புடவையை மட்டும் பையில் போட்டு கொடுக்கறதில்லை. அந்தப் புடவையைப் பத்தின ஒரு சின்ன குறிப்பு எழுதி கைகளால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக பைகள்ல போட்டு கொடுக்கறோம். இதனால வாடிக்கையாளர்களுக்கு நல்ல அனுபவமும் மன நிறைவும் கிடைக்கும்னு நம்பறோம்,” என்கிறார்.

வாடிக்கையாளர்கள் தங்கள் அம்மா, பாட்டி போன்றோரின் புடவைகளைக் காட்டி அதேபோல் வேண்டும் என்று கேட்கிறார்கள். அவர்களின் தனித்தேவைகளையும் இந்நிறுவனம் பூர்த்தி செய்கிறது. இதுபோன்ற ஆர்டர்கள் அதிகம் வர ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றில் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் வலைதளம் தொடங்க இருக்கின்றனர்.

3

சவால்கள்

வணிக முயற்சி தொடங்கப்பட்டு சில மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில், பெரிய சவால்கள் எதையும் இதுவரை சந்திக்கவில்லை என்கின்றனர்.

வாடிக்கையாளர்கள் சிலர் ஒரு குறிப்பிட்ட டிசைன் உடனே 2-3 நாட்களில் கிடைக்குமா என கேட்பதுண்டு. இப்படிப்பட்ட சூழலை சமாளிப்பது சற்று சவாலானது.

“நாங்க பாரம்பரியத்தை மீட்டு கொண்டு வர்றோம். அப்ப இருந்த கலர் காம்பினேஷன் இப்ப அதிகம் கிடைக்கறதில்லை. உடனே கிடைக்காது. அவகாசம் தேவைப்படும்,” என விவரிக்கிறார் வர்ஷா.

மக்களுக்கு கைத்தறி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் சற்று சவாலாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

நெசவாளர்களுடனான உறவு

பகட்டான, ஜரிகைகளுடன்கூடிய, பிரம்மாண்ட புடவைகளை நெய்து பழகிப்போன நெசவாளர்கள் இவர்களது எளிமையான புடவை வகைகளை நெசவு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

“எங்களோட தேவைகளை நாங்க ரொம்ப தெளிவா நெசவாளர்கள்கிட்ட சொல்லிடுவோம். என்ன டிசைன், என்ன கலர் வேணும்னு சொல்லிடுவோம். அதனால் எங்களுக்குள்ள நல்ல சுமுகமான உறவு நீடிக்குது,” என்கின்றனர்.

“அன்னம், தாமரை, மயில், கிளி, மாங்காய் மாதிரியான டிசைன்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கறோம். இப்படி இயற்கையான விஷயங்கள்லேர்ந்து இன்ஸ்பையர் ஆகி பண்றோம்,” என்கின்றனர்.

வருங்காலத் திட்டங்கள்

”வருங்காலத்துல நேச்சுரல் டை கொண்டு வரணும்னு ஆசை இருக்கு. அஜந்தா ஓவியங்கள் தொடங்கி சமீப காலம் வரைக்கும் இருந்த நிறங்களெல்லாம் இயற்கையான, நேச்சுரல் மினரல்ஸ்லேர்ந்துதான் எடுக்கப்பட்டு வந்துது. பழைய கலர்களைப் பார்க்கும்போது இதை அந்த காலத்துல செஞ்ச மாதிரியே இயற்கையான முறையில் கொண்டு வரமுடியுமான்னு முயற்சி செய்ய விரும்பறோம்,” என்கிறார்.

தர்மாவரம், போச்சம்பள்ளி, வேங்கடகிரி உள்ளிட்ட தென்னிந்தியாவின் பிறபகுதிகளில் இருக்கும் பிரபல புடவைகளை பாரம்பரிய நிறம் மற்றும் வடிவமைப்புகளில் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர்.

silk cotton

புடவை மட்டுமில்லாத வீட்டு அலங்காரத் துணிகள் உள்ளிட்ட மற்ற தயாரிப்புகளை இணைத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்தினாலும் துணிகள் கைத்தறியாக மட்டுமே இருக்கவேண்டும் என்பதிலும் நிறங்கள் பாரம்பரிய நிறங்களாகவே இருக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கின்றனர்.

தற்போது ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் நிலையில் வருங்காலத்தில் ஆஃப்லைன் ஸ்டோர் அமைக்கவும் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

”அது வெறும் பாயிண்ட் ஆஃப் பர்சேஸா மட்டும் இருக்கக்கூடாது. தகவல் மையம் மாதிரி அமைக்கலாம்னு யோசனை பண்ணிட்டிருக்கோம். தென்னிந்திய கலை, கலாச்சாரம் பத்தியெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கலாம். அதுமட்டுமில்லாம நெசவு வேலைகள்ல என்ன பிராசஸ் நடக்குதுன்னு மக்கள் பார்த்து தெரிஞ்சுக்கலாம். அவங்களும் முயற்சி செஞ்சு பார்க்கலாம். இப்படிப்பபட்ட ஒரு நிறைவான, சிறந்த அனுபவத்தை கொடுக்கவும் விரும்பறோம்,” என்கிறார் வர்ஷா.