Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மரங்கள் நடும் பிரச்சாரம்: அப்பா-மகன் அசத்தல் முயற்சி!

முகேஷ் குவத்ரா, அவரது மகன் நிர்பய் குவத்ரா இருவரும் தொடங்கியுள்ள `ஸ்மைல் ட்ரீ’ முயற்சி பருவநிலை மாறுபாட்டை எதிர்த்து மரங்கள் நடுவதையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையையும் ஊக்குவிக்கிறது

மரங்கள் நடும் பிரச்சாரம்: அப்பா-மகன் அசத்தல் முயற்சி!

Thursday January 06, 2022 , 3 min Read

2012ம் ஆண்டு நிர்பய் குவத்ரா டெல்லியில் உள்ள மாடர்ன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு 10 வயதிருக்கும். மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி மரங்கள் நடும் முயற்சியைத் தொடங்கவேண்டும் என்று இவருக்குத் தோன்றியது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த விரும்பினார்.

இவரது விருப்பம் வெறும் கனவாக இருந்துவிடவில்லை. 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி டெல்லி லோதி கார்டனில் 'SMILING TREE GO GREEN WALK’ என்கிற பிராஜெக்டைத் தொடங்கினார்.

1

இதில் பலர் ஆர்வமாகப் பங்கேற்றுள்ளனர். சிறு வயதில் நிர்பய் இத்தகைய முயற்சியை மேற்கொண்டதைக் கண்டு பார்ப்போர் வியந்து போனார்கள் என்கிறார் நிர்பயின் அப்பா முகேஷ் குவத்ரா.

அதன் பிறகு நிர்பய் படிப்பில் கவனம் செலுத்த, முகேஷ் இந்த முயற்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

Smiling Tree உறுப்பினர்கள் ஒரு மரத்தை தத்தெடுத்துக்கொள்ளவேண்டும். அதாவது ஒவ்வொரு தனிநபரும் ஒரு மரத்தை நட்டு அதைப் பராமரிக்கவேண்டும்.

மரம் நடும் முயற்சியைப் பலர் மேற்கொள்கின்றனர். ஆனால் மரத்தை நட்ட பிறகு அது முறையாகப் பராமரிக்கப்படுவதை பெரும்பாலானோர் உறுதி செய்வதில்லை. ஆனால், ‘ஸ்மைல் ட்ரீ’ அப்படியல்ல. இந்த முயற்சியின்கீழ் நடப்படும் ஒவ்வொரு மரமும் பராமரிக்கப்படுகின்றன.

மேலும், பிளாஸ்டிக் மாசுபாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்நிறுவனம் 2018-ம் ஆண்டு புதுடெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் பிளாஸ்டிக்கிற்கு எதிரான பிரச்சாரம் ஒன்றை ஏற்பாடு செய்தது.

புதுமையான திட்டங்கள்

’ஸ்மைலிங் ட்ரீ’ இதுவரை நூற்றுக்கணக்கான மரம் நடும் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள டெல்லி பல்கலைக்கழகம், ராம்ஜாஸ் கல்லூரி, ஸ்ரீராம் காலேஜ் ஆஃப் காமெர்ஸ், பாரகம்பா ரோட் பகுதியில் உள்ள மாடர்ன் பள்ளி, சாணக்யபுரியில் உள்ள பிரிட்டிஷ் ஸ்கூல், டெல்லியின் மதர் தெரஸா நிர்மல் ஹ்ருதய் செண்டர், ரோஹினியில் எல்டர்ஸ் ஹோம் சொசைட்டி, ஹரி நகர் லீலாவந்தி சரஸ்வதி ஸ்கூல், டிஸ்ட்ரிக்ட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷன் அண்ட் ட்ரெயினிங் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் ’நமாமி கங்கே’ திட்டத்திற்காக இந்நிறுவனம் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளது. இவைதவிர டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரம் நடும் முயற்சிகளுக்காகவும் செடிகளைப் பரிசளிக்கும் முயற்சிகளுக்காகவும் கரூர் வைஸ்யா வங்கி, ரோட்டரி கிளப், மாருதி சுசுகியின் பிளாடினம் மோட்டோகார்ப் போன்றவற்றுடன் இணைந்துள்ளது.

2

முகேஷ் குவத்ரா

முன்னணி பள்ளிகள் ஏற்பாடு செய்யும் மாநாடுகளில் ’ஸ்மைலிங் ட்ரீ’ பல ஆண்டுகளாக மரங்கள் நடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த பசுமையான முயற்சியில் அமெரிக்கா, யூகே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்சு, இத்தாலி, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, ஃபிலிப்பைன்ஸ், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

“சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். பருவநிலை மாற்றம், காடு அழிப்பு, இயற்கை வளங்களின் முறையற்ற பயன்பாடு, பிளாஸ்டிக் பயன்பாடு, வாயு வெளியேற்றம் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு பூமியை பசுமையான இடமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்,” என்கிறார் முகேஷ்.

சுற்றுச்சூழல் மற்றும் கிரிக்கெட் கொண்டாட்டம்

ஸ்மைல் ட்ரீ பல்வேறு புதுமையான லேண்ட்ஸ்கேப் மற்றும் வெர்டிக்கல் கார்டன் உருவாக்கியுள்ளது. அதில் ஒன்று ‘ஹால் ஆஃப் ஃபேம்’. இது இந்திய கிரிக்கெட்டைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

“பசுமையான நிலப்பரப்பில் மிகப்பெரிய அளவில் இருக்கும் மூன்று கிரிக்கெட் பேட், பால், ஸ்டம்ப், மூவண்ண கற்கள், பின்னணியில் கையுறைகள், சுற்றிலும் பூக்கள் மற்றும் செடிகள் என காட்சியளிக்கும். இந்திய கிரிக்கெட் சாதனைகள் இங்கு பறைசாற்றப்பட்டிருக்கும்,” என முகேஷ் விவரித்தார்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான முகேஷ், தன் வீட்டில் மாடித்தோட்டம் வைத்திருக்கிறார். கிரிக்கெட்டின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரை கௌரவிக்கும் விதமாக இதை அமைத்துள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

3

இங்கு பல விதமான தனித்துவமான செடிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இங்குள்ள வெர்டிக்கல் கார்டனில் கிட்டத்தட்ட நூறு பிளாஸ்டிக் பாட்டில்கள் பிளாண்டராக மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன.

“சர்வதேச அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் சச்சின் 100 முறை சதம் அடித்திருப்பதால் ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு சதத்தை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன,” என்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்த பாட்டில்களில் சதமடித்த அந்தந்த போட்டியின் விவரங்கள் ஒரு ஸ்டிக்கரில் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஊக்குவிக்கப்படுகிறது

கடந்த பத்தாண்டுகளில் டெல்லி என்சிஆர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘ஸ்மைல் ட்ரீ’ மூன்று லட்சங்களுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளதாக முகேஷ் தெரிவிக்கிறார். இருப்பினும் மரங்களைத் தத்தெடுத்துக்கொள்ளவும் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கவும் மக்களை ஊக்குவிப்பது சவாலான செயல் என்கிறார்.

தற்சமயம் ‘ஸ்மைல் ட்ரீ’ முகேஷின் சொந்த நிதியைக் கொண்டு மட்டுமே செயல்பட்டு வருகிறது. முகேஷின் நண்பர்கள், உறவினர்கள் என ஏழு பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகின்றனர். ஸ்மைல் ட்ரீ செயல்பாடுகளை விரிவுபடுத்த, வரும் நாட்களில் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளனர்.

ஸ்மைல் ட்ரீ, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றி குழந்தைகளுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்பதும் விவசாயிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்பதும் ஸ்மைல் ட்ரீ செயல்பாடுகளின் முக்கிய நோக்கம்.

ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா