முழு ஊரடங்கில் சாலையோர மக்களுக்கு உணவு: ஐடி நண்பர்களின் அன்னதான அறப்பணி!
திருப்பூர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த அருண்பால், பிரவீஷ் எனற இரு ஐடி ஊழியர்கள் ஈரோடு பெருந்துறை பகுதியில் அன்னம்புஷ்பம் பவுண்டேஷன் தொடங்கி, சாலையோரத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த பெருந்தொற்று காலத்தில் தாங்களே உணவு சமைத்து எடுத்துச் சென்று விநியோகித்து வருகின்றனர்.
ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்க, அனைவரும் வீட்டில் இருந்தே வேலை பார்த்து, உண்டு, உறங்கி, தனித்திருக்கும்போது, சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு யார் உணவு அளிப்பார்கள் என இரு ஐடி ஊழியர்கள் யோசித்து வாரம் இருமுறை ஆயிரக்கணக்கான சாலையோர மக்களுக்கு அருசுவை உணவை சமைத்து விநியோகித்து வருகின்றனர்.
திருப்பூர், ஈரோடு பகுதியைச் சேர்ந்தவர்கள் அருண்பால் (28), பிரவீஷ் (26). சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர்களான இருவரும் ஈரோடு பெருந்துறை பகுதியில் அன்னம்புஷ்பம் பவுண்டேஷன் என்ற டிரஸ்டைத் தொடங்கி, சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு தாங்களே சமைத்து எடுத்துச் சென்று விநியோகித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் இருவரும் நம்மிடம் தெரிவித்ததாவது, "நாங்கள் இருவரும் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறோம். எங்களில் யாருக்காவது பிறந்தநாள் என்றால் அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருவோம். இது எங்கள் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்து வந்தது.
ஆனால் அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளின் முகங்களில் எப்போதும் ஓர் சோகம் இழையோடி இருப்பதைக் காண முடிந்தது. இதையடுத்து அடுத்தடுத்து வந்த விஷேச நாள்களில் எங்கள் குழுவில் யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் என ஏதாவது ஓர் நல்ல நாள் என்றால் நாங்கள் உணவோடு சேர்த்து நோட்டு, புத்தகங்கள், உடைகள் என ஏதேனும் ஓர் பரிசையும் சேர்த்து foodationkit ஆக அளித்தோம்.
இந்த பரிசுடன் கூடிய உணவு அந்த குழந்தைகளின் முகத்தில் ஓர் மகிழ்ச்சியை அளித்ததைப் பார்த்தோம். பின்பு இதையே ஓர் பணியாக தொடர்ச்சியாக செய்யத் தொடங்கினோம் என்கின்றனர்.
இவர்கள் இருவர் மட்டுமன்றி, இவர்களுடன் பணிபுரியும் நண்பர்கள் என அனைவரையும் இவர்கள் இப்பணியில் இணைத்துள்ளனர். இவர்களில் யாருக்காவது பிறந்த நாள், திருமண நாள் என்றால் ஏதேனும் உணவகத்தில் உணவை ஆர்டர் செய்யாமல் இவர்களே சொந்தமாக வீட்டில் தயாரித்து, அந்த உணவுடன் ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுக்குத் தேவையான ஏதேனும் ஓர் பரிசுப் பொருளையும் சேர்த்து பேக்கிங் செய்து foodationkit ஆக வழங்கி வந்துள்ளனர்.
இவர்கள் இதுவரை சென்னை, கோவை, ஈரோடு பகுதிகளில் உள்ள 70க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றக் குழந்தைகளுக்கு உணவுடன் பரிசுப் பொருள்களை சேர்த்து வழங்கியுள்ளனர்.
அப்போதுதான் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று தமிழகத்தையும் தாக்கத் தொடங்கிய நேரம். ஊரடங்கு தொடங்கியதால், அனைவரும் அவரவர் சொந்த ஊர்களுக்குச் சென்று வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டிய கட்டாயம். எனவே அருண், பிரவீஷ் தங்கள் ஊருக்குத் திரும்பி வீட்டில் இருந்து பணிபுரியத் தொடங்கினர்.
வீட்டில் இருந்து பணிபுரியும்போதுதான் சாலையோரத்தில் வசிக்கும் வீடற்றவர்கள் இந்த முழு ஊரடங்கு நேரத்தில் உணவுக்கு என்ன செய்வார்கள் எனத் தோன்றியுள்ளது. இதையடுத்து இருவரும் இணைந்து தங்கள் வீட்டிலேயே உணவை சமைத்து தங்கள் இருப்பிடத்தில் இருந்து சுமார் 20 கி.மீட்டர் சுற்றளவில் உள்ள சாலையோரவாசிகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி வந்துள்ளனர். இதுவே இவர்களின் அன்னம்புஷ்பம் பவுண்டேஷனின் தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.
நாங்கள் இருவரும் இவ்வாறு உணவு சமைத்து நூற்றுக்கணக்கானவர்களுக்கு வழங்கி வருவதைப் பார்த்த பிரவீஷின் தாத்தாவும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியுமான O.K.சண்முகம் (75), தனது காலஞ்சென்ற மனைவி புஷ்பராணியுடன் அவர் வாழ்ந்து வந்த அவரது சொந்த வீட்டை எங்கள் சேவைப் பணிக்காக வழங்கினார். அந்த வீட்டிலேயே நாங்கள் community kitchen உருவாக்கி, உணவு சமைத்து விநியோகிக்கத் தொடங்கினோம்.
மேலும், அருகில் உள்ள கூலி வேலை செய்து, ஊரடங்கால் வேலையின்றி தவித்து வந்த 4 பேரை நாங்கள் உதவியாளராக பணிக்குச் சேர்த்துக் கொண்டு, community kitchen இல் உணவு தயாரிக்கும் பணியை விரிவுபடுத்தினோம். இக்குழுவில் ஓர் மாற்றுத் திறனாளியும் பங்கேற்றோர். எங்களின் இந்த உணவு விநியோகச் சேவை 4 நபர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
தொடக்கத்தில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு மட்டுமே உணவு வழங்கி வந்த நாங்கள் தற்போது, வாரமிரு முறை ஆயிரக்கணக்கானவர்களுக்கு (ஈரோடு, திருப்பூர், பெருந்துறை) தேடி சென்று உணவு வழங்கி வருகிறோம். எங்களின் இப்பணிக்கு இன்ஸ்பிரேஷனாகவும், வழிகாட்டியாகவும் NO FOOD WASTE இன் நிறுவனர் பத்மநாபன், LMES பவுண்டேஷன் நிறுவனர் பிரேம்ஆனந்த சேதுராஜன் மற்றும் மாற்றம் பவுண்டேஷன் இணை நிறுவனர் உதயசங்கர் ஆகியோர் இருந்தனர் எனத் தெரிவிக்கின்றனர்.
O.K. சண்முகம் வழிகாட்டுதலின்பேரில், அவர் வழங்கிய வீட்டிலேயே அன்னம்புஷ்பம் என்ற பெயரில் ஓர் டிரஸ்ட்டைத் தொடங்கியுள்ளனர். இதில் பிரவீஷ் நிறுவனராகவும், அருண்பால், O.K. சண்முகம் ஆகியோர் இணை நிறுவனர்களாக உள்ளனர்.
இந்த கொரோனா ஊரங்கு நேரத்தில் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்குவதோடு, நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாராக இருந்தாலும், இவர்களிடம் தங்களின் வீட்டு விஷேசங்களுக்கு ஆதரவற்றோர் இல்லத்துக்கு உணவு வழங்க வேண்டும் எனக் கூறினால் உடனே அவர்களிடம் சம்மதம் தெரிவித்து, அவர்கள் தெரிவிக்கும் மெனுவை அவர்கள் விரும்பும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு ஓர் கிப்ட் உடன் foodationkit வழங்கி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
ஏதோ வீட்டு விஷேசத்துக்கு ஆதரவற்றோர் இல்லத்துக்கு உணவு வழங்கினோம்ன்னு இருக்கக் கூடாதுன்னுதான், நாங்களே பார்த்து பார்த்து நல்ல ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க தரமான உணவுகளை சுவையாக சமைத்து, ஓர் பரிசுடன் சேர்த்து பரிமாறுகிறோம். அப்போதுதான் வழங்கியவரின் மனதும் குளிரும், பெற்றவரின் மனதும் நிறையும் என்கின்றனர் இந்த நண்பர்கள்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவற்றோர்களுக்கு உணவுடன் பரிசு foodationkit வழங்கியுள்ள இவர்கள் இருவரும், இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலையோர மக்களுக்கு இந்த ஊரடங்கு நேரத்தில் உணவு வழங்கியுள்ளனர். மேலும், உணவுப் பொட்டலங்களை வழங்குவதோடு நில்லாமல் அவர்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கி அவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
தங்களின் இச்சேவைப் பணிக்கு பண உதவி, பொருளுதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளும் இவர்கள், எதிர்காலத்தில் தமிழகம் முழுவதும் யார் வீட்டில் என்ன விஷேசம் என்றாலும், எங்களைத் தொடர்பு கொண்டால்போதும், என்ற நிலையை உருவாக்கி, எங்களது சேவையை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தவேண்டும் என்பதே எங்களின் தற்போதைய லட்சியமாகும்.
மேலும், இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் சாலையோர வாசிகளுக்கு யாரேனும் உணவளிக்க விரும்பினாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கின்றனர் அருண்பால் மற்றும் பிரவீஷ்.
இவர்கள் மூலம் ஆதரவற்றோர் இல்லங்களுக்கோ அல்லது சாலையோரவாசிகளுக்கோ உணவளிக்க விரும்புபவர்கள் இவர்களை, 70924 92407, 97510 00397 என்ற செல்போன் எண்களிலோ, infodesk.annampushpam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 372, அன்னம்புஷ்பம் பவுண்டேஷன், சீரி OKS புஷ்பராணி தாயார் மெமோரியல் ஹோம், வள்ளலார் தெரு, ஐயப்பன் நகர், பெருந்துறை, ஈரோடு என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.