மாற்றுத் திறனாளிகள் நலன்களுக்கான ‘விழுதுகள்’ மையம்: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக நீண்டகால உடல்நலம் தொடர்பான மறுவாழ்வு சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிறப்புக் கல்வி, ஆப்டோமெட்ரி, ஆடியோலஜி & பேச்சு சிகிச்சை, பிசியோதெரபி, தொழில்சார் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை ஆகியவற்றின் மறுவாழ்வு வல்லுநர்கள் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரப்படுகிறது.
சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் ‘விழுதுகள்’ என்னும் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான சுகாதாரம் தொடர்பான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக உலக வங்கியின் உதவியுடனான TN RIGHTS திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.
TN RIGHTS திட்டமானது, மாற்றுத்திறனாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த மற்றும் அணுகக்கூடிய சேவைகளை அவர்களது வீடுகளிலோ அல்லது மறுவாழ்வுக்கான பிரத்யேக மையங்களில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காகவே மாநிலம் முழுதும் 273 விழுதுகள் மையங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
இதையடுத்து, இன்று சென்னையின் சோளிங்கநல்லூரில் உள்ள கண்ணகி நகரில் முதல் விழுதுகள் மையத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இந்த மையத்தினால் பயனடைவார்கள்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக நீண்டகால உடல்நலம் தொடர்பான மறுவாழ்வு சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிறப்புக் கல்வி, ஆப்டோமெட்ரி, ஆடியோலஜி & பேச்சு சிகிச்சை, பிசியோதெரபி, தொழில்சார் சிகிச்சை மற்றும் உளவியல் ஆலோசனை ஆகியவற்றின் மறுவாழ்வு வல்லுநர்கள் ஒரே கூரையின் கீழ் கொண்டுவரப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை.
சேவைகளைப் பெற விரும்புவோர் TN RIGHTS திட்டத்தின் சமூக மறுவாழ்வுப் பணியாளர்களை அணுக வேண்டும். இந்த மையம் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
தனியுரிமையைப் பாதுகாக்கும் அதே வேளையில், பாதுகாப்பை உறுதி செய்யும் கண்காணிப்பு கேமராக்கள் இந்த மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. மையத்தின் அனைத்து கழிவறைகளிலும் ஒலி எழுப்பும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த மையத்தை உண்மையிலேயே வேறுபடுத்துவது என்னவெனில், IoT தொழில்நுட்பமே. இது ஒரு ஸ்டார்ட்அப் மூலம் தமிழ்நாட்டிலே முழுமையாக உருவாக்கப்பட்டதாகும் - இது அநேகமாக இந்தியாவில் முதல் முறையாகும் - இது அவசரகால சூழ்நிலைகளை தொலைதூரத்தில் கண்டறிவதில் நிகழ்நேர உடனடி உதவியை அளிக்க ஏதுவாக உள்ளது.
திறப்பு விழாவின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உரையாடி, அவர்களின் நலனுக்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
தொடக்க விழாவில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் அரசுச் செயலாளர் சிகி தாமஸ் வைத்தியன் ஐஏஎஸ், மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையர் ஆர்.சுதன், ஐ.ஏ.எஸ் (ஓய்வு), மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் எம்.லட்சுமி, ஐஏஎஸ் மற்றும் எஸ்.பிரபாகர், ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.