Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்!

சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில் ஜவுளித் துறை உலகில் மூன்றாவது இடத்திலுள்ளது. சூழலுக்கு ஏற்படும் மாசுப்பாட்டை குறைக்க எருக்கன் செடியின் தண்டிலிருந்து பெறப்படும் இழைகளை கொண்டு ‘Weganool’ எனும் சைவ கம்பளிகளை தயாரித்து சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் தொழில்முனைவர் கெளரி சங்கர்.

எருக்கன் செடியிலிருந்து உருவாகும் 'இயற்கை கம்பளி' - ஜவுளி உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழக தொழில்முனைவர்!

Thursday November 07, 2024 , 4 min Read

சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில் ஜவுளித் துறை உலகின் மூன்றாவது இடத்திலுள்ளது. துணிகளின் உற்பத்தி அதன் மூலாதாரம், ஆலைக்கழிவுகள் என ஜவுளித் துறை ஏற்படுத்தும் மாசுப்பாட்டை குறைக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளது. அதற்கான பெரும் பங்காக எருக்கன் செடியின் தண்டிலிருந்து பெறப்படும் இழைகளை கொண்டு ‘Weganool’ எனும் சைவ கம்பளிகளை தயாரித்துள்ளார் கெளரி சங்கர்.

தமிழ்நாட்டின் ஆரோவில்லுக்கு அருகில் உள்ள குயிலாபாளையத்தில், Faborg எனும் நிறுவனத்தை தொடங்கி, சைவ கம்பளிகளையும், அதன் தயாரிப்பு செயல்முறையில் துணைத்தயாரிப்பாக இயற்கையான பூச்சிக்கொல்லிகளையும் தயாரித்து சுற்றுசூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைத்து அரும்பணியாற்றியுள்ளார்.

Faborg

எருக்கன் செடியிலிருந்து உற்பத்தியாகும் 'சைவ கம்பளி'

Faborg-கை நோக்கிய ஷங்கரின் இந்தப் பயணமானது ஜவுளி மற்றும் விவசாயத்தின் மீதான இரட்டை ஆர்வத்துடன் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவுளி சமூகத்தை பின்னணியாகக் கொண்டவர் சங்கர். ஜவுளிகளுக்கு மத்தியில் வளர்ந்த அவர், துணி சாயமிடுதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்கூடாகக் கண்டார். அதனால், அப்போதிருந்தே அவருக்கு சுற்றுசூழல் சார்ந்த கவலையுண்டு.

அதன் விளைவால், ஜவுளித் துறையால் சூழலுக்கு ஏற்படும் தீங்கினை குறைக்க, அவரது சொந்த வணிகத்தை கைவிட்டு, நிலையான மாற்றத்தை ஏற்படுத்த பேஷன் ஹவுஸுடன் பணிபுரிய தொடங்கினார்.

"எங்களது சமூகம் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஜவுளி உற்பத்தியில் ஈடுப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளால் இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் சேதம் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. நமது நீர்நிலைகள் அச்சமூட்டும் விகிதத்தில் மாசுபடுகின்றன. என்னுடைய ஆர்வமெல்லாம் ஜவுளி மீதிருக்க, குடும்பம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. பண்ணையில் எல்லா வேலைகளையும் பார்த்து வளர்ந்தேன்," என்று சங்கர் சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.

ஜவுளி மற்றும் விவசாய பின்னணி அவருக்கு ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தை அளித்தது. இந்த இரண்டு துறைகளையும் ஒன்றிணைத்து நிலையான ஒன்றை உருவாக்க துாண்டியது. அதன் நீட்சியாய், ஜவுளி உலகில் முக்கியமான துணிவகையான கம்பளிக்கு மாற்றை கலோட்ரோபிஸ் எனும் எருக்குச்செடியிலிருந்து உருவாக்கினார்.

"பொதுவாக எருக்கன் செடியானது ஒரு காட்டுப் புதர் செடியாகக் கருதப்படுகிறது. ஆனால், இவை பருத்தியை போன்று பயிரிடுவதற்கு அதிக அளவு நீர் மற்றும் வளங்கள் தேவைப்படாது. கலோட்ரோபிஸ் வறண்ட, தரிசு நிலங்களிலும் அதிக கவனிப்புமின்றி தானாகவே செழித்து வளரும். அதன் தண்டுகள் மற்றும் காய்களை ஆண்டு முழுவதும் அறுவடை செய்யலாம். பல நன்மைகள் உள்ளன," என்கிறார் சங்கர்.

ஜவுளி உலகில் கலோட்ரோபிஸிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இழைகள் கம்பளிக்கு மாற்றாகும் சக்தி வாய்ந்தவை. செம்மறி போன்ற விலங்குகளின் தோல்களை பயன்படுத்தி கம்பளிகள் தயாரிக்கப்படுவதால், விலங்கு ஆர்வலர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது.

எருக்கன் தண்டிலிருந்து பெறப்படும் சைவ கம்பளி அல்லது வீகன்வூல் கொடுமையற்றது மட்டுமல்ல, வெப்பம் மற்றும் நீடித்த தன்மையையும் வழங்குகிறது. இது தாவர அடிப்படையிலான விருப்பங்களைத் தேடும் நுகர்வோருக்கு ஒரு கவர்ச்சிகரமான மாற்றாக அமைகிறது.

Faborg இ-டெயில் மூலம் அதன் தயாரிப்புகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளது. இது நிலையான ஃபேஷனில் பணிபுரியும் நிறுவனங்களுடன் கூட்டாண்மை கொண்டுள்ளது. மேலும், Faborg-ன் மற்றொரு தயாரிப்பான இயற்கை பூச்சிக்கொல்லிகள் நேரடியாக விவசாயிகளுக்கும் மற்றும் ஃபாபோர்க் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

தற்போது, இந்த வீகன்வூல் ஒரு மீட்டருக்கு ரூ.1,500 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது அதிகமானத் தொகை என்பதை ஒப்புக்கொள்ளும் சங்கர், அதிகமான மக்கள் கலோட்ரோபிஸ் பயிரிடத் தொடங்குவதால் விலையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

சுற்றுசூழலுக்கு நன்மை... தொழில் உலகில் புதுமை...

ஜவுளிக்கு அப்பால், ஃபாபோர்க்கின் புதுமையான அணுகுமுறை விவசாயம்வரை நீட்டித்துள்ளது. ஃபைபர் உருவாக்க செயல்முறையில் துணைத்தயாரிப்பாக மிகவும் பயனுள்ள பூச்சி விரட்டியை உருவாக்குகிறது. இது ஏற்கனவே உள்ளூர் விவசாயிகளிடையே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நாங்கள் இதை பல இடங்களில் சோதித்தோம். இப்போது, ​​விவசாயிகளுக்கு சுமார் 120 மெட்ரிக் டன் பூச்சிக்கொல்லியை விற்பனைச் செய்துள்ளோம். இந்த இயற்கையான மாற்று, தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும். இதன்மூலம், இயற்கை விவசாயத்தை அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் ஆக்குகிறது. விவசாயிகள் தங்கள் வாழ்க்கையில் மீண்டும் ரசாயனங்களுக்குத் திரும்ப வேண்டியதில்லை. பயிர்களைப் பாதுகாக்க உதவுவது மட்டுமல்லாமல், நிலையான எதிர்காலத்தையும் உருவாக்குகிறது," என்றார்.

சுற்றுசூழலுக்கு நன்மை, தொழில் உலகில் புதுமை என வெற்றிகள் இருந்தபோதிலும், சங்கரின் பாதை சவால்கள் இல்லாமல் இல்லை. நிறுவனத்தை பதிவு செய்வதில் தொடங்கி அரசாங்க விதிமுறைகளை வழிநடத்துதல் வரை பல தடைகளை கடந்துவந்துள்ளார்.

Faborg
"இந்த நிறுவனத்தை பதிவு செய்ய விரும்பிய முதல் நாளிலிருந்தே சவால்கள் தொடங்கின. இது விவசாய நிறுவனமா? இல்லை ஜவுளி நிறுவன யூனிட்டா? என்ற குழப்பத்துக்கு மத்தியில் ஏற்கனவே பூச்சிக்கொல்லி தொழிலின்கீழும் வருகிறது என்பதால், நிறுவனத்தை பதிவு செய்வதில் அதிக சிரமங்களை சந்தித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

ஃபாபோர்க்கின் மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று ஒரு மூடிய-லூப் அமைப்பில் செயல்படுவது. அதாவது, ஒரு தயாரிப்பின் செயல்முறையிலிருந்து பெறப்படும் கழிவுகள் மற்றொறு தயாரிப்பிற்கான உள்ளீடாக மாறுகிறது.

Weganool தயாரிப்பில் பயன்படுத்தப்படும் திரவமானது பூச்சி விரட்டியாக மறுஉருவாக்கம் செய்யப்படுகிறது. இந்த திரவம் ஃபைபர் திட்டத்திற்கு உதவுகிறது, ஃபைபர் திரவத்திற்கு உதவுகிறது. இதன்மூலம் முழு செயல்பாடும் கழிவுகள் இல்லாததாக ஆகுகிறது.

"விவசாயிகள் ஒரு நெல் போகத்திற்கு சுமார் 3,000 ரூபாய் மதிப்புள்ள ரசாயனங்களை பயன்படுத்தி பெறும் அதே பலனை எங்கள் தயாரிப்பில் 90 ரூபாய் மட்டும் செலவழித்தே பெற முடியும். இக்குறைந்த செலவினம், விவசாய சமூகத்தின் பொருளாதார நன்மைக்கு வழிவகுக்கிறது. உண்மையில், கழிவுகளை விற்று பணம் சம்பாதிக்கும் முதல் ஜவுளி நிறுவனம் நாங்கள் என்று கூறுவேன்," என்று பெருமையுடன் பகிர்ந்தார் சங்கர்.

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயியான வி.எம்.சாம்குமார், ஆறு ஆண்டுகளாக இயற்கை முறையில் சாகுபடி செய்ய முயற்சித்து வருகிறார். இந்திய பாரம்பரிய திரவ உரமான பயோ பொட்டாசியம், ஜீவாமிருதம் உள்ளிட்ட இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பெற ஆண்டுக்கு ரூ.3 லட்சம் செலவழித்து வந்தார்.

இன்று, அவருக்கு ஒரு ஜாடி (26 லிட்டர்) ஆர்கா பூச்சிக்கொல்லி தேவைப்படுகிறது. இது புளிக்கவைக்கப்பட்ட கலோட்ரோபிஸ் சாற்றில் இருந்து ஆண்டு முழுவதும் தயாரிக்கப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை.

"நான் இப்போது வருடத்திற்கு 25,000 ரூபாய் மட்டுமே செலவிடுகிறேன், அறுவடையும் குறைந்தது 20% அதிகரித்துள்ளது," என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் சாம்குமார்.

சங்கரின் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு, சுற்றுச்சூழலுக்கான ஆழ்ந்த அக்கறை மற்றும் வழக்கமான விவசாய மற்றும் தொழில்துறை நடைமுறைகளால் ஏற்படும் சேதங்களை சரிசெய்யும் நோக்கத்தினால் வேரூன்றியுள்ளது.

சுற்றுச்சூழலை பெரிதும் மாசுப்படுத்துவதில் ஜவுளித் தொழில் உலகின் மூன்றாவது இடத்திலுள்ளது. சுற்றுச்சூழல் நச்சுகளுடன் தொடர்புடைய நோயான லூபஸுடனான அவரது தாயின் போராட்டம், தூய்மையான, அதிக பொறுப்பான வழியைக் கண்டுபிடிப்பதற்கான அவரது உறுதிப்பாட்டை மேலும் தூண்டியுள்ளது.

ஆங்கிலத்தில்: சரண்யா, தமிழில்: ஜெயஸ்ரீ