விவசாயி ஆன பெண் பொறியாளர்! கிராமத்தையே மாற்றிய வியக்க வைக்கும் கதை!
ஸ்மிரிகா சந்த்ரகரின் வித்தியாசம் என்னவெனில் பாரம்பரிய விவசாய முறைகளை நவீன மற்றும் லாபகரமான உயரத்திற்கு உயர்த்தி, ஒரு முன்னோடி விவசாயியாக மாறியதுதான்.
சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்முதியா என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஸ்மிரிகா சந்த்ரகர் என்ற பெண்மணி தன் பொறியியல் படிப்புடன் எம்.பி.ஏ பட்டதாரியுமாவார். இவர் விவசாயத்தில் ஒரு தனிப்பெரும் முத்திரைப் பதித்து கிராமத்தையே மாற்றியுள்ளார்.
அதாவது, கார்ப்பரேட் வாழ்க்கையையே துறந்து குடும்பத்தின் விவசாய நிலங்களை பயிர் செய்வது என்று முடிவெடுத்தது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனையோ பேர் கார்ப்பரேட் வாழ்க்கையைத் துறந்து விவசாயத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம், ஆனால் ஸ்மிரிகா சந்த்ரகரின் வித்தியாசம் என்னவெனில் பாரம்பரிய விவசாய முறைகளை நவீன மற்றும் லாபகரமான உயரத்திற்கு உயர்த்தி, ஒரு முன்னோடி விவசாயியாக மாறுவதற்கான இவரது விடா முயற்சிதான்.
இதோடு கிராமத்தில் செல்வாக்குடன் வாழ்ந்து பிறகு நோய்வாய்ப்பட்டதால் முடங்கிய தன் தந்தை துர்கேஷ்குமார் சந்த்ரகரையும் காப்பாற்ற வேண்டிய இரட்டை நிர்பந்தம் இவரது முன்னேற்றத்தையோ லட்சியத்தையோ எந்த விதத்திலும் இடையூறு செய்யவிலை என்பதும் ஸ்மிரிகா சந்த்ரகர் வாழ்க்கையின் வித்தியாசமாகும்.
பரந்த விவசாய நிலங்களை நிர்வகிப்பதற்கான பொறுப்பை ஸ்மிரிகா ஏற்றுக்கொண்டார். இந்த மாற்றம் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஸ்ம்ரிகா; விவசாயத்தில் ஒரு முற்போக்கான அணுகுமுறையை அறிமுகப்படுத்தினார், வழக்கமான வேளாண் முறைகளிலிருந்து விலகிச் சென்றார்.
துல்லியமான திட்டமிடல், நிபுணர் ஆலோசனைகளுடன் , அவர் 19 ஏக்கர் பரப்பளவை தாரா கிரிஷி பண்ணையாக மாற்றினார், நவீன தொழில்நுட்பங்களை செயல்படுத்தி பாரம்பரிய பயிர்களுக்கு பதிலாக பாகற்காய், வெள்ளரி, சுண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் தக்காளி போன்ற உயர் மதிப்புள்ள காய்கறிகளை பயிரிட்டார்.
இவரது கடின உழைப்பின் பலனாக அவரது தாரா கிரிஷி பண்ணையில் இப்போது தினசரி சுமார் 12 டன் தக்காளியும் 8 முதல் 9 டன் கத்தரியும் விளைகின்றன. இந்த விளைச்சல்கள் உள்ளூர் சந்தைகளுக்கு மட்டுமல்ல, ஆந்திர பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், கொல்கத்தா, டெல்லி, கோரக்பூர், பனாரஸ் மற்றும் ஹைதராபாத் போன்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
ஸ்ம்ரிகாவின் வெற்றி நிதி ஆதாயங்களுக்கு அப்பாற்பட்டது. அவரது வருடாந்திர விற்பனை மூன்று ஆண்டுகளுக்குள் ரூ. 1 கோடியைத் தாண்டியது, இதோடு மட்டுமல்லாமல், கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்கி செழிப்பைத் தந்துள்ளது.
விடாமுயற்சி மற்றும் நவீன விவசாய நடைமுறைகளின் மாற்றும் சக்திக்கு ஸ்ம்ரிகா சந்திரகரின் பயணம் ஒரு சான்றாக விளங்குகிறது.