கிராமப்புற மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க ஆசிரியர் ஆன திருச்சி பொறியாளர்!
லட்சங்களுக்காகவே வாழ்க்கையை வாழ்பவர்கள் மத்தியில் குடும்பத்தில் மூத்த பெண், என்ஜினியரிங் முடித்த கையோடு பெரிய நிறுவன வேலையை வேண்டாம் என ஒதுக்கி, கிராமப்புற மாணவர்களின் கல்வி புரிதல் மற்றும் தேர்வு அச்சத்தை போக்கும் வழிகாட்டுபவராக மாறி இருக்கிறார் திருச்சிப் பெண் நாகலட்சுமி.
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வாழ்க்கையில் உபயோகப்படுத்த முடியுதான்னு சொல்லுவாங்க. ஆனா இப்போ இருக்குற மாணவர்கள் நாம என்ன படிக்கிறோம்னு கூட புரிஞ்சிக்காமலே படிக்கிறாங்க. இதை படிச்சதும் எத்தனை பேர் ஆமாம்னு சொல்றீங்கன்னு கேக்குது. அட எதோ படிச்சோமா வேலைக்கு போனோமா நாலு காசு அப்புறம் நிறைய சொத்துன்னு பார்த்தோமான்னு போயிட்டு இருக்கிறத விட்டுபுட்டு புரிஞ்சு படிக்கனும்னு அட்வைஸ் பண்ணிகிட்டு என்று சொல்பவர்கள் மற்றொரு ரகம்.
படித்து, வேலைக்கு சேர்ந்து பணம், சொத்து சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் லட்சியமல்ல. கல்வி என்பது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான கருவி, அறிவை விரிவு செய்வதற்கான அட்சய பாத்திரம். கல்வி என்பது புத்தகத்திற்குள் இருக்கும் பாடம் மட்டுமல்ல நம்மைச் சுற்றிய உலகில் நடக்கும் விஷயத்திற்கு கற்கும் கல்வியால் எந்த வகையிலாவது நன்மை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.
பள்ளிப் பருவத்தில் ஆசிரியரை எதிர்த்து கேள்வி கேட்டதால் கிடைத்த அதிகப்பிரசங்கி என்ற பெயரும், கல்லூரியில் பேராசிரியரானதும் மாணவர்களே ஒழுங்கீனமாக வகுப்பறையில் நடந்து கொண்ட விதமும் நாகலட்சுமியை இந்த சமுதாயத்தின் இன்றைய தேவை என்ன என்பதை சிந்திக்கச் செய்துள்ளது.

அதன் விளைவாக மாணவர்களை நல்வழிப்படுத்தவும், மாணவர்களுக்கு கற்றல் பற்றிய புரிதலையும், தேர்வு பயத்தை போக்கும் சுயமுன்னேற்ற பேச்சாளராக மாற்றியுள்ளது.
திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த நாகலட்சுமி alias ஸ்ருதி அந்த குடும்பத்தின் மூத்த பெண். என்ஜினியரிங்கில் ஈசிஈ பிரிவை தேர்வு செய்து படித்த நாகலட்சுமி கல்லூரி 3ம் ஆண்டு முதலே பள்ளி மாணவர்களுக்காக பயிற்சி வகுப்புகளை எடுப்பதை செய்து வந்துள்ளார்.
“கல்வி என்பது காகிதத்தில் எழுதி இருப்பதை படித்தோ, அல்லது வரைபடத்தை பார்த்தோ புரிந்து கொள்வதல்ல, அவற்றை செயல்முறையில் புரிந்து கொள்ள வேண்டும். வகுப்பறையில் அமர்ந்து எலக்ட்ரானிக் பொருட்களின் உருவாக்கத்தை புரிந்து கொள்ள முடியாது அதனை நம் கைகளால் தொட்டு எந்த வயர் எதனுடன் தொடர்புடையது என்பதை செய்து பார்க்கும் போதே அதில் எது சரி, தவறு என்பது புரியும்,” என்கிறார் நாகலட்சுமி.
கல்லூரி இறுதியாண்டிற்கு முன்னரே சக நண்பர்களுடன் இணைந்து அருகில் இருந்த பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று செயல்வழி கற்றல் வகுப்புகளை எடுத்து வந்துள்ளார் நாகலட்சுமி. பிஇ படித்து முடித்த பின்னர் கல்லூரியில் நடைபெற்ற நேர்முகத்தேர்வில் எல் & டி, டாடா டிஜிட்டல் ஹெல்த் நிறுவனத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 7 லட்சம் சம்பளத்தில் பணி கிடைத்துள்ளது. ஆனால் அவற்றையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு தனக்கு பிடித்த கற்பித்தல் பணியை மாணவர்களுக்காக செய்து வருகிறார் நாகலட்சுமி.
“என்னை இரண்டாக உடைத்து போட்டாலும் மீண்டும் எழுந்து நான் செய்யக்கூடிய ஒரே ஒரு விஷயம் கற்பித்தல். அந்த அளவிற்கு இந்தத் துறை மீது எனக்கு அலாதி பிரியம்,” என்கிறார் நாகலட்சுமி.
ஆசிரியர் பணி தான் என்னுடைய எதிர்காலம் என்பதை முடிவு செய்த பின்னர், நான் படித்த கல்லூரியிலேயே எனக்கு பேராசிரியர் வாய்ப்பு கிடைத்தது. கல்லூரி வகுப்பில் நடந்த சம்பவம் எனக்கு இந்த தலைமுறையினர் மீதான அச்சத்தை கூட்டியது. இந்தத் தலைமுறை மாணவர்கள் மிகவும் ஆதிக்கம் மிக்கவர்களாக இருக்கின்றனர்.
வகுப்பறையில் பேராசிரியரை கேலி செய்வது, வகுப்பு நடத்துவதற்கு எப்படி இடைறு ஏற்படுத்துவது என்றே இருந்தனர். அப்போது எனக்கு புரிந்த ஒரு விஷயம் மாணவர்களுக்கு மனிதாபிமானம், ஒழுக்கம், தனி மனித கடமைகள் உள்ளிட்டவற்றை புரிய வைக்க வேண்டியுள்ளது என்பது.
மாணவர்களின் கல்வி புரிதல், நற்பண்புகள் இவற்றை வளர்க்க வேண்டும் என்பதை மையமாக வைத்து பி2ஓ (Professionals to Originate) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார் நாகலட்சுமி. பி2ஓ மூலம் திருச்சியைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை எடுத்து வந்துள்ளார்.
மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த விஷயங்களை எளிமையான செயல்முறையில் புரிய வைத்தல், படிக்கும் போது எப்படி படிக்க வேண்டும், தேர்வுகளை எப்படி அச்சமின்றி எதிர்கொள்ள வேண்டும் உள்ளிட்டவற்றை நாகலட்சுமி கற்றுக் கொடுத்து வருகிறார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்கும் சுயமுன்னேற்றப் பேச்சாளராகவும், மனிதவள பயிற்றுநராகவும் செயல்பட்டு வருகிறார் நாகலட்சுமி.
நிறைய இழந்ததாலேயே ஆசிரியராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. தமிழ்நாட்டை பொருத்தவரையில் ஒரு மாணவி வகுப்பில் எழுந்து கேள்விகேட்டாலே ஆர்வக்கோளாறு, அதிகப்பிரசங்கி என்றெல்லாம் சொல்வார்கள் அந்த அவமானங்களை எல்லாம் நான் சந்தித்திருக்கிறேன்.
ஒரு சில ஆசிரியர்கள் என்னுடைய சந்தேகங்களுக்கு பதில் தந்தாலும் பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்பு பாடம் அனைத்தையும் படித்து முடிக்கும் நினைப்பு இருக்கிறதா அல்லது வீணான கேள்விகளால் இதே வகுப்பில் அடுத்த வருடமும் இருக்கப்போகிறாயா என்று கேட்டிருக்கின்றனர்.
என்னுடைய சந்தேகங்களுக்கு மடை போட்டவர்களால் என் மனதில் தேங்கி இருந்த ஏக்கங்களே நான் ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது என்கிறார் நாகலட்சுமி.

அப்துல் கலாம் இறந்துவிட்டார் என்று அனைவரும் கவலைப்படுகின்றனர், அவரைப்போல வேறொரு விஞ்ஞானி பிறப்பாரா என்று ஏக்கப்படுகின்றனர். நாம் அனைவருமே விஞ்ஞானிகள் தான், நாம் கற்பவற்றை புரிந்து படித்தால் நமக்குள் இருக்கும் விஞ்ஞானி வெளியே வருவார்.
இஸ்ரோவில் 140க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன, எல்லோரும் கூறுவது போல என்ஜினியரிங் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் இல்லை நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதிகளுடன் எந்த பொறியாளரும் படித்து முடித்து வெளிவருவதில்லை என்பது தான் உண்மை என்கிறார் நாகலட்சுமி.
சமுதாயத்தில் அன்றாடம் சந்திக்கும் விஷயம் மனிதாபிமானமின்மை, சாலையில் நடந்து செல்லும் போது யாரோ ஒருவருக்கு விபத்தோ உடல்நலக்குறைவோ ஏற்பட்டு மயங்கி விழுந்தால் அவர்களை காப்பாற்றுபவர்களை விட தங்களது செல்போன்களில் படம் பிடிப்பவர்களே அதிகம், இந்த நிலை மாற வேண்டும் அதற்காகத் தான் பி2ஓ மூலம் மாணவர்களிடம் நற்பண்புக்கான விதையை போட்டு வருவதாகக் கூறுகிறார்.
மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு எடுக்கும் போது முதலில் அவர்களை ஆச்சரியப்படுத்துவேன், பின்னர் அவர்களின் மனநிலை என்ன என்பதை ஆராய்ந்து அதன் பின்னரே வகுப்பை எடுக்கத் தொடங்குவேன், இதுவே என்னுடைய கற்பித்தல் முறைக்கான ரகசியம் என்கிறார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் என்னுடைய பயிற்சி வகுப்புகளுக்கு நல்ல வினையை ஆற்றுகின்றனர். இஸ்ரோவின் கேள்வி ஒன்று இதுவரை யாருமே அதை செய்து காட்டியது கிடையாது, மன்னச்சநல்லூரில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு நிமிடத்திற்குள்ளாக அந்த கணிதத்திற்கு விடை கண்டனர், எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் கல்லூரி மாணவர்கள் கூட இந்த கணிதத்தை பூர்த்தி செய்தது கிடையாது.
பல மாணவர்கள் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கித் தேர்வுகளுக்கு தயாராவது, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவது பற்றி கேட்கின்றனர் அவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார் நாகலட்சுமி.
இதில் முக்கியமான விஷயம் நாகலட்சுமி இந்த பயிற்சி வகுப்புகள், தன்னம்பிக்கை வகுப்புகள் அனைத்தையும் மாணவர்களுக்காக இலவசமாக எடுக்கிறார். கல்லூரி அல்லது பள்ளி நிர்வாகம் தாங்களாக விருப்பப்பட்டு அளிக்கும் தொகையை மட்டுமே நாகலட்சுமி ஏற்றுக்கொள்கிறார்.
தான் எடுக்கும் வகுப்புகளுக்காக ஒரு பைசா கூட இவர் கட்டணம் என நிர்ணயித்து வாங்கவில்லை என்பது தான் அனைவரும் பாராட்டக்கூடிய விஷயம்.
என் குடும்பத்தில் நான் முதல் பெண், எனக்குப் பின்னர் இரட்டை சகோதரிகள், சகோதரன் இருக்கிறார்கள், இதனால் நான் வேலைக்கு போய் பணம் சம்பாதித்தால் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று பெற்றோர் என்னிடம் பல முறை கூறி இருக்கிறார்கள். மாணவர்களுக்கு எடுக்கும் பயிற்சி வகுப்புகளுக்காவது கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கலாமே என்றும் கூறி இருக்கின்றனர், ஆனால் நான் அதனையெல்லாம் புறந்தள்ளி என் மனதிற்கு பிடித்த விஷயம் இது தான் அதில் கிடைக்கும் மனநிறைவே போதும் என்று கட்டணமின்றி இந்த சேவையை செய்து வருகிறேன் என்கிறார் நாகலட்சுமி.
கடந்த மே மாதத்தில் திருமணம் முடிந்த கையோடு பெங்களூருக்கு இடம்பெயர்ந்துள்ளார். அங்கும் நாகலட்சுமியின் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு யாராலும் தடை போட முடியவில்லை, பெங்களூரிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை எடுக்கத் தொடங்கியுள்ளார்.
என் பெற்றோர் போலவே கணவரும் ஏதாவது கட்டணம் வசூலிக்கலாமே என்று கூறினார் பின்னர் போக்குவரத்து செலவையாவது நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளட்டும் என்று கூறினாரே தவிர என்னுடைய ஆசிரியர் பணிக்கு நோ சொல்லவில்லை என்கிறார்.
காலையில் 9 மணிக்கு அலுவலகம் சென்று மாலை வரை கணினி முன்பு அமர்ந்து பணத்திற்காக வேலை பார்ப்பதையெல்லாம் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை, அந்த தருணத்தை நினைத்தாலே நான் சுக்கு நூறாக உடைந்து போய்விடுகிறேன் என்று கூறும் நாகலட்சுமி மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதிலும், ஏணியாக செயல்படுவதிலேயுமே ஆத்மதிருப்தி இருக்கிறது என்கிறார்.
முதன்முதலாக கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த பங்களிப்பை செலுத்துவதற்கான அங்கீகாரமாக கிடைத்த விருது இவரது குடும்பத்தினரை பெருமைபடுத்தியுள்ளது. குடும்பத்திற்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும், எனக்கு பின்னர் இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள், கல்விச் செலவு, திருமணச் செலவு என ஏகப்பட்ட செலவுகள் இருப்பதை நினைத்து பார்க்க வேண்டும் என்றெல்லாம் காதில் வந்து விழுந்த அட்வைஸ்கள் ஏராளம்.
ஆனால் இவற்றிற்காக அஞ்சி நான் என்னுடைய கனவை தொலைக்க வில்லை, மேலும் மேலும் அந்த கனவுக்கு சக்தி கொடுத்ததாலேயே இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறேன் என்கிறார் நாகலட்சுமி.

பி2ஓ தொடங்கியபோது நண்பர்களுடன் இணைந்து செயல்பட்ட போதும் தன்னைப் போலவே மற்றவர்களும் கட்டணம் எதுவும் கொடுக்காமல் இலவசமாக வகுப்புகளை எடுக்கத் தயாராக இல்லை. தூக்கத்தில் இருந்து எழுப்பி வகுப்பு எடுக்க வேண்டும் என்று சொன்னால் கூட நான் தயார் ஆனால் மற்றவர்கள் அப்படி இல்லை என்பதால் தனிமனுஷியாகவே மாணவர்களுக்கு வகுப்புகள், கலந்தாய்வு செய்து வருகிறார் நாகலட்சுமி.
என்னால் ஒரே நேரத்தில் 250 பேருக்கு கலந்தாய்வு செய்ய முடியும். என்னுடைய சுயமுன்னேற்ற பேச்சுகள் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கு எத்தனை பேர் வந்தாலும் அவர்களை குழுக்களாக பிரித்து சோர்வின்றி தொடர்ந்து வகுப்புகளை எடுப்பேன் என்கிறார் நாகலட்சுமி.
என்னுடைய கடைசி மூச்சு வரை மாணவர்களுக்கு கற்பித்து அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். வாழ்க்கையில் நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்களுக்கு எதிர்வினையாக செயலாற்றாமல் கல்வியால் அனைத்தையும் வசமாக்க முடியும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும், குறிப்பாக ஒருதலைக் காதல் என்று அரங்கேறும் கொடூரங்களுக்கு மாற்றாக கல்வியால் உயர்நிலை அடைந்து காதலிக்கும் பெண்ணை திரும்பி பார்க்க வைக்க முடியும் என்று மாணவர்களை நல்வழிப்படுத்தும் விஷயங்களை விதைத்து வருகிறார்.
”ஆர்வம் இருக்கிறது என்பதை காகிதத்தில் எழுதி வைப்பதை விட அதனை செயல்படுத்த வேண்டும் அதில் தான் இருக்கிறது வெற்றி,” என்கிறார் நாகலட்சுமி.
பள்ளிகளுக்கு நேரில் சென்று தன்னம்பிக்கை பேச்சுகளை வழங்கி வரும் நாகலட்சுமி P2O பெயரில் இணையதள பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதன் மூலம் ஆன்லைனிலும் மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார் நாகலட்சுமி.
ஆசிரியர் பணியே உயர்வான பணி அதற்காக உன்னை அர்ப்பணி என்ற வார்த்தைகளை படிக்கவும் பிறர் சொல்லவும் கேட்டிருக்கிறோம், அதனை நிஜ வாழ்வில் செய்து காட்டி வருகிறார் 26 வயதே ஆன நாகலட்சுமி. இன்றைய மாணவ சமுதாயத்திற்கு பல நாகலட்சுமிகள் அவசியமே.