இணையத்தில் வைரலான 'கிபிலி' படங்கள் - ஜப்பானில் உருவாகிய இந்த கலை சர்ச்சையில் முடியுமா?
இணையத்தை உலுக்கியிருக்கும் அண்மை வைரல் நிகழ்வான கிபிலியின் தாக்கத்தை உணர்த்தும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்:
அமிதாப் பச்சன், கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் தங்களின் 'கிபிலி' (Ghibli) போட்டோவை வெளியிட்டு, கிபிலியின் தாக்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மும்பை காவல் துறையும் கிபிலி அலையை விழிப்புணர்வு நோக்கில் பயன்படுத்தியிருக்கிறது. இன்னும் பலரும் கிபிலி போக்கில் இணைந்து வருகின்றனர்.
இணையத்தை உலுக்கியிருக்கும் அண்மை வைரல் நிகழ்வான கிபிலியின் தாக்கத்தை உணர்த்தும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

Ghibli என்றால் என்ன?
சாட்ஜிபிடியின் தாய் நிறுவனம் ஓபன் ஏஐ வெளியிட்ட அண்மை மாடலான ஜிபிடி4o (GPT-4o) கொண்டு தயார் செய்யப்படும் ஜப்பானிய அனிமேஷன் பாணி படங்களே 'கிபிலி' என குறிப்பிடப்படுகின்றன. வழக்கமான படங்களை, யாரோ மாயம் செய்தார் போல், நேர்த்தியான அனிமேஷன் படமாக மாற்றி பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த போக்கே கிபிலி அலையாக அறியப்படுகிறது. இதன் தீவிர தாக்கம் கிபிலிமயம் என குறிப்பிடப்படுகிறது.
ஜப்பானிய முன்னோடி
ஏஐ நுட்பம் கொண்டு, புகைப்படங்கள், கலை ஆக்கங்களை உருவாக்கும் வசதி ஏற்கனவே இருக்கிறது. அந்த வரிசையில் சாட்ஜிபிடியிடம் இருந்து அறிமுகமான ஜிபிடி4o மேம்பட்ட திறனோடு, எழுத்து மட்டும் அல்லாமல் பல்லூடக வடிவங்களை கையாளக்கூடிய திறன் கொண்டுள்ளது. இதன் மூலம், நேர்த்தியான உருவங்களை எழுத்து வடிவிலான கட்டளை மூலம் உருவாக்கலாம்.
இந்த வசதி கொண்டு, பலரும் ஜப்பானின் ஸ்டூடியோ கிபிலி பாணியிலான அனிமேஷன் படமாக உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். இந்த அனிமேஷன் படங்களின் நேர்த்தியும், அழகும் இணையத்தை கொள்ளை கொண்டிருக்கிறது.

கிபிலி உருவாக்கியவர் யார்?
ஜப்பான் மங்கா, அனிமி உள்ளிட்ட கலை வடிவங்களாக அறியப்படும் நிலையில், சமகால அனிமேஷன் மேதை என கருதப்படும் ஹயாவோ மியாசாகி, இசாவோ டகாஹாடாவுடன் இணைந்து உருவாக்கிய தனி பாணி அனிமேஷன் வடிவமாக கிபிலி அமைகிறது. கிபிலி ஸ்டூடியோ மூலம் இந்த அனிமேஷன் படங்களை உருவாக்கி வருகின்றனர். 1985ல் அமைக்கப்பட்ட இந்த ஸ்டூடியோ சார்பில் பல முத்திரை அனிமேஷன் படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.
இந்த அனிமேஷன் படங்கள் கைகளால் வரையப்பட்டு மிக நேர்த்தியாக உருவாக்கப்படுபவை. ஜப்பானின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் இந்த அனிமேஷன் படங்களில் வண்ணங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என பாராட்டப்படுகின்றனர். இதன் விளைவாகவே கிபிலி பாணியிலான ஏஐ உருவாக்கம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Ghibli கிரியேட்டர் ஹயாவோ மியாசாகி
ஜிபிடியின் தாக்கம்
ஜிபிடியின் புதிய மாடல் கொண்டு எந்த வகையான படங்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். கிபிலி மாதிரியான உருவாக்கம் பற்றி ஆரம்பத்தில் வெளியான படங்கள் வைரலாக பரவியதால் இந்த நிகழ்வு ஒரு அலையென தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிபிடி முடக்கம்
லட்சக்கணக்கான பயனாளிகள் இந்த வசதியை பயன்படுத்த துவங்கியதால் ஜிபிடி பின்னே உள்ள ஜிபியூக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓபன் ஏஐ சாம் ஆல்ட்மன் கூறியிருந்தார். நடுவே இந்த சேவையை அணுகும் வசதியும் பாதிக்கப்பட்டது. ஜிபிடி தவிர, கூகுள் ஜெமினி, கிராக் மூலமும் இத்தகைய படங்களை உருவாக்கலாம் என்கின்றனர். தற்போது இந்த வசதியை எல்லோரும் தடையில்லாமல் பயன்படுத்தலாம், என ஆல்ட்மன் அறிவித்துள்ளார்.
காப்புரிமை சர்ச்சை
கிபிலி அலை இணையத்தை கலக்கிக் கொண்டிருந்தாலும், இன்னொரு கேள்வி இணையத்தை உலுக்குகிறது. கிபிலி அனிமேஷன் மிக நேர்த்தியாக கைகளால் கலைஞர்கள் பொறுமையாக உருவாக்கப்படுபவை. அப்படியிருக்க அவற்றை ஏஐ நுட்பம் வாயிலாக உருவாக்குவது படைப்பூக்கத்திற்கு அநீதி என கருதப்படுகிறது. மேலும், இது காப்புரிமை மீறல் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
கிபிலிக்காக பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகள் தொடர்பாக அல்லது இது தொடர்பாக அனுமதி பெறப்பட்டதா எனும் கேள்வி தொடர்பாக ஓபன் ஏஐ வெளிப்படையாக எதுவும் கூறவில்லை.

ஏஐ எதிர்ப்பாளர்
கிபிலி பாணி அனிமேஷன் கலை வடிவம் உலகம் முழுவதும் இப்போது பிரபலமாகி இருந்தாலும், அதன் அபிமானிகள் பலர் ஏஐ நுட்பத்தின் மீறலாகவே இதை பார்க்கின்றனர். இதனிடையே, இது தொடர்பாக ஸ்டூடியோ கிபிலி சார்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை கடிதம் போலி என தெரிய வந்துள்ளது. ஆனால், மியாசாகி, ஏஐ நுட்பத்திற்கு எதிராக பேசிய பழைய வீடியோ பதிவு வைரலாகி இருக்கிறது.
தொடரும் விவாதம்
இந்த வைரல் நிகழ்வு ஏஐ நுட்பங்களுக்கு பயிற்சி அளிக்கும் தரவுகள் தொடர்பான காப்புரிமை விவாதத்தை தீவிரமாக்கியுள்ளது. ஏஐ நுட்பம் கிபிலி கலை வடிவை எல்லோருக்கும் சாத்தியமாக்கியுள்ளதாக ஒரு தரப்பினர் கருதினாலும், செயற்கை முறையில் நொடிப்பொழுதில் இப்படி அனிமேஷன் வடிவங்களை உருவாக்குவது இந்த கலையின் ஆதார அம்சத்திற்கே எதிரானது, என பலரும் கருதுகின்றனர்.
காப்புரிமை மீறலை பொருத்தவரை, கலைப்படைப்பின் பாணிக்கு பொருந்தாது என்ற அம்சத்தையும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும் கேள்விகள்
இந்த விவாதம் தொடர்பாக மேலும் பல கேள்விகள் எழுதுள்ளன. உதாரணமாக, பயனாளிகள் சமர்பிக்கும் படங்கள் ஏஐ பயிற்சிக்காக பயன்படுத்தப்படலாம் என்கின்றனர். எனவே இந்த ஆர்வம் பயனாளிகள் தனியுரிமையை பாதிக்கலாம் என எச்சரிக்கின்றனர்.
மேலும், இந்த வசதியை கொண்டு பகிரப்பட்ட சில படங்கள் வரலாற்று நிகழ்வுகளை உணர்வற்ற முறையில் அணுக வைத்திருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. இது போல மேலும் பல கேள்விகளும், சந்தேகங்களும் இந்த வைரல் அலைக்கு பின்னே கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.
Edited by Induja Raghunathan