ஆதரவற்ற வயதான பெண்களுக்கு காப்பகம் நடத்தும் 80 வயதான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி!
கேப்டன் ஏசி பருவா, கவுகாத்தியில் நடத்தி வரும் காப்பகம், கைவிடப்பட்ட மற்றும் வீடில்லாத பெண்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி அளித்து, கண்ணியமாக வாழ வழி செய்கிறது.
வயதான பெண்களுக்கான காப்பகம் நடத்தி வரும் ஓய்வு பெற்ற ஐஏஎப் கேப்டன் ஏ.சி.பருவாவிடம், கவுகாத்தியில் தற்காலிக குடிசையில் மிகவும் பரிதாபமான நிலையில் இருந்த மத்திய வயது பெண்மணி தொடர்பான தகவல் கடந்த மாதம் தொலைபேசியில் தெரிவிக்கப்பட்டது.
கேப்டன் உடனே அந்த இடத்திற்கு தனது குழுவினரை அனுப்பி வைத்தார். அங்கு, சுகாதாரமற்ற சூழலில், குப்பைகளுக்கு நடுவே, பழுதடைந்திருந்த குடிலில் ஒரு பெண்மணி வசிப்பதை குழுவினர் பார்த்தனர். அவரது கால்கள் வீங்கியிருந்தது, அவரது உடலில் புழுதி படிந்திருந்தது. சில மாதங்களாக குடிலில் வசித்து வந்த அந்த பெண்மணி, உணவுக்காக யாசகம் கேட்க மட்டுமே வெளியே வரும் வழக்கம் கொண்டிருந்தார்.
அந்த பெண்மணி துவக்கத்தில் தயங்கினாலும், பின்னர் அந்த குழுவினருடன் வருவதற்கு ஒப்புக்கொண்டார்.
“காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்ட போது, அவர் மன நல சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவரது பேச்சு, வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக எந்த அர்த்தமும் இல்லாமல் அமைந்திருந்தது. ஆனால், அவர் நகைச்சுவை மிக்கவராக, உற்சாகமானவராக இருந்தார்,” என்று ஹெர்ஸ்டோரியிடம் பருவா தெரிவித்தார்.
எப்போதுமே ஆடிப்பாடிக்கொண்டிருப்பார் என்பதால் அவரை நாங்கள் ரங்கிலி என அழைக்கிறோம். காப்பகத்தில் ரங்கிலி லேசான மனதோடு, மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்.
கவுகாத்தியில் உள்ள பருவாவின் காப்பகத்தில் வசிக்கும் பல பெண்களில் ரங்கிலியும் ஒருவர்.
வீடில்லாத வயதான பெண்மணிகளுக்காக 2011ல் துவங்கப்பட்ட ’செனே’ (Seneh) என அழைக்கப்படும் இந்த காப்பகம், கேப்டனின் தாய் பெயரில் அமைக்கப்பட்ட பவடா தேவி நினைவு அறக்கட்டளையின் கீழ் நிறுவப்பட்டது.
அதன் பிறகு, இந்த காப்பகம், அசாம், ஜார்கண்ட, பிகார், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச்சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது.
“பல வயதான பெண்கள் கைவிடப்பட்டு, தெருக்களில் பட்டினி கிடக்கும் நிலை உள்ளது. அவர்களில் சிலருக்கு மன நில பிரச்சனைகளும் இருக்கிறது. இதனால் அவர்கள் காணாமல் போகும் நிலையும் உள்ளது. குடும்பத்தினர் அவர்களை திரும்ப அழைத்து கொள்ள மறுக்கும் போது, காப்பகத்தில் அடைக்கலம் அளிக்கிறோம்,” என்கிறார் பருவா.
துவக்கம்
பருவார் 1999ல் விருப்ப ஓய்வு பெறும் முன் இந்திய விமானப்படையில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஏரோனாடிகல் பொறியாளராக பணியாற்றினார். அதன் பின், அவர் முன்னாள் ராஜாங்க அதிகாரி நண்பருடன் இணைந்து கார்கோ வர்த்தகம் துவக்கினார்.
எட்டு ஆண்டுகளுக்கு பின், அந்த நண்பர் மாரடைப்பால் இறந்தார். பருவா வர்த்தகத்தை தனியே தொடர விரும்பவில்லை. வர்தக்கத்தை மூடிவிட்டு, சமூக சேவையில் ஈடுபட்டார்.
2007ல் அசாமில் மிக மோசமான வெள்ளம் உண்டாகி கிராமப்புற பகுதிகளில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பும் உண்டானது. மக்களின் துயரத்தை பார்த்து கலங்கிய பருவா, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்க்கத்தீர்மானித்தார்.
தில்லியில் உள்ள அசாம் கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை உறுப்பினராக அவர் மாநிலத்தின் வெள்ளம் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்குச் சென்று நிவாரண பணியில் ஈடுபட்டார். மிகவும் தொலைவில் இருந்த இடத்திற்கு சென்ற போது தண்ணீரால் சூழப்பட்ட தற்காலிக குடிலை பார்த்தார். கரி படிந்த பாத்திரங்கள், கிழிந்த கொசு வலை, அழுக்கான சில துணிகள் தொங்கி கொண்டிருப்பதை பார்த்தார்.
அந்த குடிலுக்குள் வயதான பெண்மணி மற்றும் அவரது மகன் கட்டிலில் இருப்பதை பார்த்தார்.
இது போன்ற இடத்தில் யாரேனும் வசிக்க முடியும் என நினைத்து கூட பார்த்ததில்லை. இந்த காட்சி இதயத்தை நொருக்குவதாக அமைந்தது. அவர்கள் முகத்தில் காணப்பட்ட நம்பிக்கையின்மையை என்னால் மறக்கவே முடியாது என்கிறார் பருவா.
“அந்த வயதான பெண்மணிக்கு மகனை தவிர யாரும் இல்லை. மகன் படுத்த படுக்கையில் இருப்பதால் அவரால் எங்கேயும் செல்ல முடியவில்லை. வீட்டைச்சுற்றி தண்ணீர் சூழ்ந்திருந்தால், பாழாகிக் கொண்டிருக்கும் அந்த வீட்டுக்குள் இருப்பதை தவிர வேறு வழியில்லை.”
அவர்கள் இருவரும் வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேப்டன் வழி செய்தார். இந்த சம்பவம் நடந்து நீண்ட காலம் ஆன பிறகும், அந்த வயதான அம்மா, மகன் பாதிக்கப்பட்ட காட்சி அவரது நினைவில் ஆழ பதிந்திருந்தது. எனவே, அவர் வயதான பெண்களுக்கான காப்பகம் அமைக்க தீர்மானித்தார்.
இதனிடயே, வர்த்தக வருவாய் மூலம் நன்றாக சம்பாதித்திருந்தது, காப்பகம் அமைக்க உதவியது. கவுகாத்தில் இடம் வாங்கி, ஐந்த அறை கொண்ட வீட்டை கட்டி பெண்களுக்கான காப்பகம் அமைத்தார். ஓராண்டுக்கு பிறகு, அந்த காப்பகத்திற்கு முதல் உறுப்பினர் பிரியா பாலா எனும் வயதான பெண்மணி வந்தார். கணவரை இழந்த அவர் கவுகாத்தி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தார்.
கட்டுமான தொழிலாளரான அவருக்கு விபத்தில் கால் முறிவு உண்டானது. அவரை பார்த்து கொள்ள யாரும் இல்லை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தினமும் ஒரு வேளை உணவு அளித்தனர். பருவாவும், குழுவினரும் அந்த பெண்மணியை காப்பகத்தில் தங்க வைத்தனர். அவருக்கு ஆறு மாத காலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு, பழங்குடியின பெண்மணி ஒருவரை அழைத்து வந்தனர். சூனிய வித்தையை பின்பற்றுகிறார் எனும் சந்தேகத்தில் அவர் கிராமவாசிகளால் தாக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து காப்பகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
“வாய் மொழி மூலம் காப்பகம் அறியப்பட்டு, மக்கள் எங்களை தொடர்பு கொள்ளத்துவங்கினர் என்கிறார் 80 வயதான பருவா. அவர் துயேட்டா (அசாம் மொழியில் தந்தை) என அன்போடு அழைக்கப்படுகிறார்.”
தாக்கம்
இந்த காபக்கத்தில், யாரும் இல்லாத, குடும்பத்தினாரால் கைவிடப்பட்ட, மனநலம் பாதிக்கப்பட்டு திக்கற்று இருப்பவர்கள் உள்ளிட்ட 50 வயதுக்கும் மேலான பெண்களுக்கு அடைக்கலம் அளிக்கப்படுகிறது.
இந்த காப்பகத்தில் 30 பெண்கள் வரை தங்கலாம். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, துணிமணிகள் மற்றும் இதர உதவிகள் அளிக்கப்பட்டு கண்ணியமாக வாழ வழி செய்யப்படுகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு
ஆதரவு தேவைப்படும் பெண்களை உள்ளூர் காவலைதுறை தகவல் அல்லது ஆர்வம் உள்ள மக்கள் மூலம் காப்பகம் தெரிந்து கொள்கிறது. கைவிடப்பட்ட வயதான பெண்கள் குறித்து ரெயில்வே போலிசாரும் தகவல் அளிக்கின்றனர்.
காப்பகத்தில் உள்ள பெண்கள் ஏதேனும் செயலில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துடன் உள்ளவர்கள் சமையல் போற வேலையை கவனித்து கொள்கின்றனர். மற்றவர்கள் பாத்திரம் கழுவுவது, காய்கறி வெட்டித்தருவது போன்ற செயல்களில் உதவுகின்றனர்.
தையல், பூவேலை, ஊறுகாய் தயாரிப்பு, யோகா பயிற்சி ஆகியவையும் ஊக்குவிக்கப்படுகிறது.
பெண்கள் தயாரிக்கும் பொருட்கள் உள்ளூர் சந்தையில் விற்கப்பட்டு, அந்த வருமானம் அவர்களின் பொழுதுபோக்கிற்காக செலவிடப்படுகிறது. பிக்னிக் போன்றவையும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
கைவிடப்படும் 70 சதவீத பெண்கள், நினைவுத்திறன் பாதிப்பு உள்ளிட்ட மன நல பிரச்சனைகளை கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு உளவியல் உதவி தேவை என்றும் பருவா விளக்குகிறார். புற்றுநோய் மற்றும் இதயநோயால் பாதிக்கப்பட்ட பெண்களும் இருக்கின்றனர்.
இந்த பெண்களுக்கு சிகிச்சை அளிக்க, கவுகாத்தியில் உள்ள சன்வேலி மருத்துவமனை மற்றும் டாக்டர்.புவனேஷ்வர் பூரா கான்சர் கழகத்தோடு இணைந்து காப்பகம் செயல்படுகிறது. உள்ளூர் மருத்துவர்கள் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. வாரம் இருமுறை ஒரு உளவியல் வல்லுனரும் வருகை தருகிறார்.
பருவாவின் குழுவில் உள்ள ஏழு ஊழியர்கள், இங்கேயே 24 மணிநேரம் தங்கி உறுப்பினர்களை பார்த்து கொள்கின்றனர். காப்பகத்தை பராமரிக்க மாதம் 2 லட்சம் ஆகிறது. பருவா சொந்த பணம் மற்றும் மகன் உதவியோடு காப்பகத்தை நடத்துகிறார்.
மேலும், கூட்ட நிதி, நன்கொடை மூலம் நிதி வருகிறது. நல்லுள்ளம் கொண்டவர்கள் மளிகை பொருட்கள் தருகின்றனர்.
“கவுகாத்தில் உள்ள எல்லோருக்கும் எங்கள் சேவை பற்றி தெரியும். அவர்களில் பலர் உதவுகின்றனர். எனக்கு பிறகும் இதே போல தொடரும் என எதிர்பார்க்கிறேன்,” என நம்பிக்கையோடு சொல்கிறார் பருவா.
ஆங்கிலத்தில்: சிம்ரன் சர்மா | தமிழில்: சைபர் சிம்மன்
தமிழக கிராமங்களில் பாழடைந்த கிணறுகளை புதுப்பிக்கும் இளம் கட்டிடக் கலை வல்லுனர்!
Edited by Induja Raghunathan