2 தையல் மிஷின்களுடன் தொடங்கி ரூ.800 கோடி ஃபேஷன் சாம்ராஜ்யம் உருவாக்கிய அனிதா டோங்ரே!
அனிதா தொடங்கிய ஃபேஷன் ப்ராண்டுகள் இன்று 2,700 ஊழியர்களுடன் 800 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்டிருக்கிறது.
அனிதா டோங்ரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் பணிக்குச் செல்லவில்லை. வணிக முயற்சியிலும் ஈடுபட்டதில்லை. அனிதாவின் அம்மா புஷ்பா சவ்லானி அனிதாவிற்கும் அவரது உடன்பிறந்தவர்களுக்கும் ஆடைகளைத் தைத்துக் கொடுப்பார். இதைக் கண்ட அனிதாவிற்கு ஆடைகள் மீதும் ஃபேஷனிலும் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது.
அனிதா மும்பையில் வளர்ந்ததால் பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிவதையும் தொழில்முனைவில் ஈடுபடுவதையும் கவனித்தார். அத்துடன் பெண்களுக்கு குறைந்த விலையில் ஆடைகளை வழங்கும் இந்திய பிராண்ட் ஏதும் இல்லை என்பதையும் கவனித்தார். இதுவே இவருக்கு உந்துதலளித்தது.
ஃபேஷன் பிரிவில் செயல்பட்டு பணிக்குச் செல்லும் நவீன பெண்களுக்கான ஆடை பிராண்டை உருவாக்க விரும்பினார்.
“நான் 1995-ம் ஆண்டு இரண்டு தையல் இயந்திரங்களுடன் வணிகத்தைத் தொடங்கினேன். என் அப்பாவிடமிருந்து கடன் வாங்கிக்கொண்டேன். என் சகோதரியும் நானும் 300 சதுர அடி கொண்ட அறையில் பெண்களுக்கான மேற்கத்திய பாணி ஆடைகளைத் தயாரித்தோம்,” என்று எஸ்எம்பி ஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் அனிதா தெரிவித்தார்.
எனினும் ஃபேஷன் ஸ்டோர்களும் சில்லறை வர்த்தக நிறுவனங்களும் அவரது வடிவமைப்பை நிராகரித்தன. மால் உரிமையாளர்கள் அவர் கடை அமைப்பதற்கான இடத்தை ஒதுக்க மறுத்துவிட்டனர். ஆனால் இதுபோன்ற நிராகரிப்புகளால் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை.
“எனக்குக் கோபம் வந்தது. சொந்தமாக பிராண்டைத் தொடங்கத் தீர்மானித்தேன்,” என்றார்.
மும்பையைச் சேர்ந்த AND தொடங்க இதுவே ஆரம்பப்புள்ளியாக இருந்தது. 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் AND, Global Desi, Anita Dongre Bridal Couture, Anita Dongre Grassroot, Anita Dongre Pink City என பல்வேறு பிராண்டுகளுடன் இன்று விரிவடைந்தது.
பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பின்னர் அனிதாவின் முயற்சி ஒரு வெற்றிகரமான ஃபேஷன் ஹவுஸாக உருவாகியுள்ளது. தற்போது 2,700 ஊழியர்கள் நேரடியாக பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த பிராண்டின் செயல்பாடுகளில் பங்களிக்கின்றனர்.
2019-20-ல் இந்த பிராண்டின் சில்லறை வர்த்தக விற்றுமுதல் 800 கோடி ரூபாய்.
ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரே சீஃப் கிரியேடிவ் அதிகாரி அனிதா தனது வெற்றிப்பயணம் குறித்து எஸ்எம்பிஸ்டோரி உடனான பிரத்யேக நேர்காணலில் பகிர்ந்துகொண்டார்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்களது வணிக மாதிரி என்ன? உங்களது தனித்துவமான வணிக உத்திகள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள்?
அனிதா டோங்ரே: ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரே தலைமையகம் நவி மும்பையில் உள்ளது. ஒரு லட்சம் சதுர அடி கொண்டுள்ள இந்த வளாகத்தில் சூரிய ஒளி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் குறைவாகப் பயன்படுத்தப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. மின்சார பயன்பாடும் குறைவு.
தொழில்முனைவு மீது எனக்கிருந்த ஆர்வமே இந்த வணிகம் உருவாகக் காரணம். பின்னர் வளர்ச்சியடைந்து குடும்பத்தினரும் இந்த வணிக முயற்சியில் இணைந்துகொண்டனர். வளர்ச்சியை முன்னிறுத்தியே எங்களது கார்ப்பரேட் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.
சிறந்த ஃபேஷனை உருவாக்கவேண்டும் என்பதே இந்த வணிகத்தின் அடிப்படை நோக்கம். சரியான ஆலோசனை, திறமை, தலைமைத்துவம் ஆகியவற்றுடன் செயல்படவே நாங்கள் விரும்புகிறோம்.
நவி மும்பையில் உள்ள தலைமையகத்தில் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சிறியளவில் செயல்படும் பார்ட்னர்களுடனும் கிராமப்புறங்களுடனும் இணைந்து செயல்படுகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்களது தயாரிப்புகள் மற்றும் பிராண்டுகளின் தனித்துவமான அம்சம் என்ன?
அனிதா டோங்ரே: திருமண ஆடைகளின் தொகுப்பு, மணமக்கள் மற்றும் குடும்பத்தினர்களுக்கான ஆபரணங்கள் ஆகியவை இந்திய பாரம்பரியத்தைத் தழுவியே வடிவமைக்கப்படுகிறது. அதேசமயம் எடை குறைவாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆயத்த ஆடைகளை லேபிள் ஹவுஸ் வழங்குகிறது. அத்துடன் பாரம்பரிய ராஜஸ்தானிய கைவினைக்கலையைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆபரணங்களின் தொகுப்பும் இதில் அடங்கும்.
ஏஎன்டி மேற்கத்திய ஃபேஷன் ஆடை வகைகளை வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் வாழ்க்கைமுறை மாற்றத்திற்கேற்ப எங்கள் பிராண்ட் தயாரிப்புகள் மாறி வருகிறது. எங்கள் லேபிள் சர்வதேச அளவிலான ஃபேஷனை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ப வடிவமைப்பைத் தொடர்ந்து புதுப்பித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
எங்கள் குளோபல் தேசி லேபிள் இந்தியாவை மையமாகக் கொண்டது.
இளம் சமூகத்தினரைக் கவரும் வகையில் வண்ணமயமான ஃபேஷன் ஆடைகளை இந்த பிராண்ட் வழங்குகிறது. அனிதா டோங்ரே அறக்கட்டளை பெண்களுக்கு சக்தியளிக்கிறது. இதன் ஒரு பகுதியாக மஹாராஷ்டிராவின் கிராமப்புறங்களில் குளோபல் தேசியின் தயாரிப்புகளுக்காக தையல் பயிற்சி மையத்தை அமைத்துள்ளோம். இங்கு நலிந்த பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் பழங்குடிப் பெண்களுக்கும் ஆடைகள் தைப்பதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
பாரம்பரிய இந்திய கைவினைக்கலையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் உருவானதுதான் கிராஸ்ரூட் லேபிள். இதில் பாரம்பரிய கலையை சமகால ஃபேஷனாக மாற்றி வழங்குகிறோம். இந்த லேபிளுக்காக என்ஜிஓ-க்கள் அடங்கிய நெட்வொர்க்குடனும் தனிப்பட்ட கைவினைஞர்களுடன் இணைந்து செயல்படுகிறோம். இதன் மூலம் கைவினைஞர்களுக்கு நிலையான வருவாயும் அங்கீகாரமும் கிடைக்கப்படும்.
எஸ்எம்பிஸ்டோரி: நீங்களில் இலக்காகக் கொண்டு செயல்படுபவர்களைச் சென்றடைய டிஜிட்டல் தளங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறீர்கள்?
அனிதா டோங்ரே: ஹவுஸ் ஆஃப் டோங்ரே நவீன இந்தியப் பெண்களுக்கு சேவையளிக்கிறது. எங்கள் பிராண்ட் ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலையில் இருக்கும் பெண்களுக்கு சேவையளிக்கிறது. டிஜிட்டல் தளங்கள் அனைத்து வணிகங்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரே நிறுவனமும் வெவ்வேறு வகைகளில் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்திக்கொள்கிறது.
உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்கும் வகையில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எங்கள் பிரத்யேக வலைதளங்கள் வாயிலாகவும் ஆர்டர் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளோம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அனுபவங்களில் காணப்படும் இடைவெளியை நீக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டோம். இதற்காக ஷாப்பிங் செய்யும் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: நிறுவனம் இதுவரை சந்தித்துள்ள கடினமான சூழல்கள் என்னென்ன?
அனிதா டோங்ரே: 2016-ம் ஆண்டு கேட் மிடில்டன் அனிதா டோங்ரே ஆடையை அணிந்தபோது எங்கள் பிராண்டிற்கான தேவை திடீரென்று அதிகரித்தது.
இந்த திடீர் தேவைகளை பூர்த்தி செய்ய இரவு முழுவதும் இயங்கும் வகையில் பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதேசமயம் மற்ற ஆர்டர்களுக்கான பணிகளும் தாமதிக்காமல் பார்த்துக்கொண்டோம்.
மற்றொரு தருணத்தில் மஹாராஷ்டிராவில் உள்ள கிராமங்களில் வேலையில்லா பிரச்சனைக்கு தீர்வுகாணும் வகையில் அனிதா டோங்ரே அறக்கட்டளை குழுவினர் தயாரிப்புக் குழுவுடன் இணைந்து திட்டமிட்டனர். கிராமப்புறப் பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் திட்டமிடப்பட்டது. கிட்டத்தட்ட 200 பெண்களுக்கு ஆடை தயாரிப்பிற்கான திறன் பயிற்சியளிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டியிருந்தது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் நிறுவனத்தின் வருங்காலத் திட்டங்கள் என்ன?
அனிதா டோங்ரே: ஃபேஷன் வணிகத்தைப் பொறுத்தவரை ஒவ்வொருவரின் விருப்பமும் மாறுபடும். ஹவுஸ் ஆஃப் அனிதா டோங்ரேவின் ஒவ்வொரு பிராண்டும் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் சேவையளிக்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இவை மாறி வருகிறது.
நாங்கள் உலகளவில் விரிவடைய திட்டமிட்டுள்ளோம். இந்திய கைவினைக் கலையை உலக அரங்கில் கொண்டு சேர்க்க விரும்புகிறோம். இந்தியாவின் கிராமப்புற பெண்களின் பொருளாதார நிலையைத் தொடர்ந்து மேம்படுத்த விரும்புகிறோம். முதலில் ஐந்து கிராமங்களில் செயல்படுத்தி அந்த அனுபவங்களையும் கற்றலையும் அடிப்படையாகக் கொண்டு மேலும் விரிவடைவதை இலகக்காகக் கொண்டுள்ளோம்.
எஸ்எம்பிஸ்டோரி: கோவிட்-19 உங்கள் வணிகத்தை எவ்வாறு பாதித்துள்ளது அதற்குத் தீர்வுகாண எத்தகைய நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள்?
அனிதா டோங்ரே: உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ள இந்த பெருந்தொற்று நாங்கள் இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதில் மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதே முக்கியம். எங்கள் ஊழியர்களில் சிலர் வீட்டிலிருந்து பணிபுரிகின்றனர். மேலும் சிலருக்கு ஊதியத்துடன்கூடிய காலவரையற்ற விடுப்பு அளித்துள்ளோம். மஹாராஷ்டிராவில் ஐந்து கிராமங்களில் எங்கள் மையங்கள் அமைந்துள்ளது. இதில் இரண்டு கிராமங்களில் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று முகக்கவசம் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம்.
தற்சமயம் மக்களின் பாதுகாப்பே முக்கியம். கிராமப்புறங்களில் உள்ள பெண் கைவினைக் கலைஞர்கள் உட்பட சிறியளவில் செயல்படும் எங்களது பார்ட்னர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் கவனம் செலுத்துகிறோம். எதிர்பாராத மருத்துவ செலவுகளை சமாளிக்கும் வகையில் இவர்களுக்காக மருத்துவ நிதி ஒதுக்கியுள்ளோம்.
சிறியளவில் செயல்படும் விற்பனையாளர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்களுக்கு நாங்கள் ஒதுக்கியுள்ள 1.5 கோடி ரூபாய் நிதி பலனளிக்கும். அதேசமயம் ஊழியர்கள் நிறுவனத்தின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பலனடையலாம்.
வணிகம் பாதித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. படிப்படியாகவே இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். எனினும் இந்த பெருந்தொற்று முடிவிற்கு வந்த பிறகு இந்திய வாடிக்கையாளர்கள் உள்ளூர் பொருட்களை விரும்பி வாங்குவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா