ஆன்லைனில் ரூ.40 கோடி வருவாய்: சென்னையில் தொடங்கிய பெண்கள் உள்ளாடைகள் ப்ராண்ட்!
பெண்கள் உள்ளாடைகள் பிரிவில் சரியான ப்ராண்ட் இல்லாததை கவனித்த சென்னை தொழில்முனைவர் Shyaway எனும் இ-காமர்ஸ் தளத்தை தொடங்கி ரூ.100 கோடி விற்பனை இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.
பொதுவாக உடை விஷயத்தை பொறுத்தவரை நாம் மேலாடைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்ளாடைகளுக்குக் கொடுப்பதில்லை. கொடுப்பதில்லை என்பதைவிட அதற்கான வாய்ப்பு பெரிதாகக் கிடைக்கவில்லை என்பதே
நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாதனின் வாதம்.பெண்கள் உள்ளாடை என்றவுடன் பெரும்பாலும் பெண் நிறுவனர்கள் கொண்டதாக இருக்கும் என்று யோசிப்போம். ஆனால், Shyaway என்ற சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப்-இன் நிறுவனர் கோபிநாதன் இந்நிறுவனத்தை ஏன்? எதற்காக தொடங்கினார் என பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
தொடக்கம்
Shyaway என்பது ஒரு இ-காமர்ஸ் நிறுவனம். இதன் மூலம் பெண்களுக்கான உள்ளாடைகள் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கான பெரிய வளர்ச்சியை அடைந்துவரும் இந்நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாதன்.
1999-ம் ஆண்டு கல்லூரிப்படிப்பை முடித்த பிறகு சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தார் கோபிநாதன். சில ஆண்டுகள் வேலை செய்து முடித்த பிறகு, பூனேவில் உள்ள நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
“அது ஒரு இ-மெயில் மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனம். அந்த நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு அதிக நேரம் கிடைத்தது. அப்போது என்னுடைய மார்க்கெட்டிங் உத்திகளால் நிறுவனத்துக்கு வருமானம் கூடியது. அதனால் என்னால் கூடுதல் பொறுப்பை நிறுவனம் கொடுத்தது.”
எங்களின் கிளையண்ட்கள் பெரும்பாலும் சர்வதேச வாடிக்கையாளர்கள். தவிர நிறுவனத்தின் நிறுவனரும் வெளிநாட்டவர். மொராக்காவை சேர்ந்தவர். நிறுவனம் வளர்ச்சி அடைந்தது. பல பெரிய பொறுப்புகள் கிடைத்தது. இந்த நிலையில் நிறுவனத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அவருடைய நாட்டில் இருந்து சில உயரதிகாரிகளை கொண்டுவந்தனர். ஆனால் அவர்களுக்குள் பெரும் சிக்கல்களால் ஏற்பட்டதால் நிறுவனர் நிறுவனத்தை மூடுவதாக அறிவித்தார்.
ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், அதற்கான தேவையும் சந்தையில் இருக்கும்போது ஏன் அதை மூட வேண்டும், நாமே நடத்தினால் என்ன என்று தோன்றியது. சில நண்பர்களுடன் இணைந்து அந்த நிறுவனத்தை நடத்திவந்தோம். கஷ்டத்தில் இருந்த நிறுவனம் மீண்டும் பெரிய வளர்ச்சியை பெற்றது. வாழ்க்கை சிறப்பாக இருந்தது. அப்போது எங்களுக்கு பெரிய சிக்கல் ஒன்று உருவானது. அதாவது நிறுவனத்தை அப்படியே நடத்தினோமே தவிர அதனை எங்கள் பெயரில் நடத்தவில்லை,” என்றார்.
அத்தனை கணக்கு வழக்குகளும் வெளிநாட்டு நிறுவனர் பெயரிலே இருந்தது. அதனால் எங்களுக்கு தெரியாமல் எங்களுடைய நிறுவனத்தை வேறு ஒருவருக்கு அவர் விற்றுவிட்டார். இது எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சில காலம் அங்கு இருந்தோம்.
அதனைத் தொடர்ந்து அதே நிறுவனத்தை சென்னையில் ஏன் ஆரம்பிக்கக் கூடாது என இ-மெயில் மார்க்கெட்டிங் நிறுவனத்தை சிறிய அறையில் தொடங்கினோம். அது நன்றாக வளர்ந்து தற்போது 180 நபர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள்.
பெண்கள் உள்ளாடை ப்ராண்ட்
இந்த நிறுவனம் வளர்ந்துகொண்டிருக்கும்போதுதான் வேறு ஒரு பிரிவு தொடங்கலாம் என்றும் அது குறிப்பாக இ-காமர்ஸ் துறையில் இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டோம். ஆனால் என்ன செய்வது என்பதில் ஒரு தெளிவில்லாமல்தான் இருந்தோம். அதன் பிறகு, ஒரு ஸ்பார்க் உருவானது.
”2015-ம் ஆண்டு சமயத்தில் என் மனைவி மற்றும் உறவினர்கள் ஷாப்பிங் சென்றிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உள்ளாடைகளை வாங்க முடியவில்லை என ஆதங்கப்பட்டனர். அப்போது சென்னையில் 2 அல்லது மூன்று மால்கள் மட்டுமே இருந்திருக்கும். பெரிய இ-காமர்ஸ் தளங்களும் இல்லை. அதனால் பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனையை ஆன்லைனில் தொடங்கலாம் என திட்டமிட்டேன்,” என கோபிநாதன் கூறினார்.
உள்ளாடைகள் வாங்குவது அவ்வளவு பெரிய விஷயமா என்னும் கேள்விக்கு விளக்கமாக பதில் அளித்தார். மற்ற துணிமணி போல் தான் உள்ளாடைகளையும் நாம் பணம் கொடுத்து வாங்குகிறோம். ஆனால், அவர்களுக்குத் தேவையானவை கிடைப்பதில்லை. உங்களுக்கு புரியும்படி சொல்வதென்றால்,
ஆண்களுக்கான ஆடை வாங்க கடைக்கு செல்கிறீர்கள். 40 சைஸில் சட்டை கிடைக்கும் 42 சைஸிலும் கிடைக்கும். ஆனால், அதற்கு அடுத்த சைஸுக்கு செல்லும்போது, உங்களுக்கு பிடித்தமான டிசைன் இருக்காது. அங்கு என்ன இருக்கிறதோ அதைத் தான் வாங்கிவர வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்பே இருக்காது. கிடைத்ததை வைத்து சமரசம் அடைந்து வாங்க வேண்டும்.
அதே போல், பெண்கள் உள்ளாடைகள் பொறுத்தவரை, தேவையான கலர் கிடைக்காது, தேவையான டிசைன் கிடைக்காது, தேவையான அளவில் இருக்காது. இதுபோன்ற பல சிக்கல்களில் வாடிக்கையாளர்கள் காம்பிரமைஸ் செய்துகொள்ள வேண்டி இருக்கிறது. தவிர கடையில் போதுமான பெண்கள் இருக்கமாட்டார்கள், வெளியிடத்தில் ட்ரைல் பார்க்க முடியாது என பல சிக்கல்கள் உள்ளன.
இந்த சிக்கல்களை தீர்ப்பதற்காகத்தான் Shyaway தளத்தை தொடங்கினோம். ஆரம்பத்தில் நாங்கள் வேறு உள்ளாடை பிராண்ட்களை வாங்கி விற்றோம். நிறுவனம் வளர வளர நாங்களே சொந்தமாக பெண்கள் உள்ளாடைகளைத் தயாரிக்கத் தொடங்கினோம். எங்களுக்கு ஆலைகள் கிடையாது. ஆனால் எங்களுக்கு தேவையானவற்றை நாங்கள்தான் தயாரிக்கிறோம்.
கோபிநாதன் நிறுவனராக இருக்க, அவருடைய தம்பி மதன்குமார் மற்றும் நண்பர் செல்ல கண்ணன் ஆகியோருடன் இணைந்து இந்த புதிய நிறுவனத்தை உருவாக்கினோம். இருவருக்கும் தொழில் ஆர்வம் இருந்ததால் இணைந்து தொழில் தொடங்கினோம்.
நிதிசார்ந்த தகவல்கள்
நிறுவனம் தொடங்கி மூன்று வாரங்களில்தான் முதல் ஆர்டர் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சீராக ஆர்டர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தற்போது சராசரியாக தினமும் 800 ஆர்டர்கள் வருகின்றன. எங்களுடைய வாடிக்கையாளர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளனர். சராசரியாக ஒரு வாடிக்கையாளர்கள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் எங்களிடம் ஆர்டர் செய்கிறார்.
ஆர்டர்கள் அதிகமாக இருந்தாலும் நாங்கள் மார்க்கெட்டிங்குக்கு அதிகம் செலவு செய்வதால் இன்னும் லாபம் ஈட்டவில்லை. குறிப்பாக எங்களுடைய மார்க்கெட்டிங் பெரும்பாலும் டிஜிட்டல் மூலமாகவே இருக்கிறது. கடந்த நிதி ஆண்டில் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி இருந்தோம். வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் இந்தாண்டு 100 கோடி ரூபாய் விற்பனையை இலக்காகக் கொண்டு நாங்கள் செயல்பட்டுவருகிறோம்,” என்றார் கோபிநாதன்.
இதுவரை மொத்தமாக 2.6 கோடி வாடிக்கையாளர்களை சென்றடைந்து இருக்கிறோம். இப்போதைக்கு 18 வயது முதல் 45 வயதுள்ள பெண்களே எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். விரைவில் வளரிளம் பெண்களுக்கான ஆடைகளையும் அறிமுகம் செய்ய இருக்கிறோம், என்றார்.
ஆண்களுக்கான உள்ளாடைகள் அறிமுகம் செய்யும் திட்டம் இருக்கிறதா என்னும் கேள்விக்கு, பெண்கள் பிரிவிலே இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.
“இந்தியா முழுவதும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருந்தாலும் மெட்ரோவில் அதிகம் உள்ளனர். சிறு நகரங்களில் வாடிக்கையாளர்கள் அதிகம் கொண்டுவரவேண்டும். கிடைத்தததை வாங்கிக் கொண்டு செல்வதைவிட பிடித்த ஆடைகளை வாங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு. ஒருவேளை எங்களிடம் வாங்கிவிட்டு பொருட்கள் பிடிக்கவில்லை என்று திருப்பி கொடுத்தால், எந்த கேள்வியும் கேட்காமல் ரிட்டர்ன் வாங்கிக்கொள்கிறோம் ,”என்று கோபிநாதன் தெரிவித்தார்.
நிதி திரட்டும் திட்டம் இருக்கிறதா என்னும் கேள்விக்கு இதுவரை சொந்த முதலீட்டில் நிறுவனத்தை நடத்திவருகிறோம். நிதி திரட்டும் வேலையில் இருக்கிறோம் என்று சொல்ல முடியாது. அதேபோல நிதியே தேவையில்லை என்றும் சொல்ல மாட்டோம் என கோபிநாதன் தெரிவித்தார்.
பிரத்யேக இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கான தேவை இருந்துகொண்டே தான் இருக்கிறது என்பது இந்நிறுவனத்தின் வளர்ச்சி ஒரு சான்று.