நீங்கள் தொழில்முனைவுக்கு சரியானவரா? - முக்கியமான 5 ‘செக்’ லிஸ்ட்!
போட்டி நிறைந்த வணிக உலகில் தொழிலதிபராக இருப்பதற்கு தகுந்த மனநிலை, கடின உழைப்பு, விடாமுயற்சி நம்மில் பலரிடம் இல்லை. உண்மையாகவே தொழில்முனைவு என்பது அனைவருக்கும் பொருந்தாது. ஏன் பொருந்தாது என்பதற்கான 5 காரணங்கள் இங்கே...
“தொழில்முனைவு என்பது கண்ணாடியை மெல்வது, பள்ளத்தை வெறித்து பார்ப்பது போன்றது...” - எலான் மஸ்க்.
நவீன கால ஹீரோக்களாக தொழில்முனைவோர்கள் போற்றப்படும் இக்காலத்தில், அனைவருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் எனத் தோன்றுவது இயல்பு. அந்த எண்ணம் இயல்பு என்றாலும், அதற்கான பயணம் எளிது அல்ல. புதிய தொழில் தொடங்க வேண்டும் என்பது நம்மில் பலரும் ஆசைப்படும் அற்புதமான விஷயம். ஆனால், உண்மை என்னவெனில், போட்டி நிறைந்த வணிக உலகில் தொழிலதிபராக இருப்பதற்கு தகுந்த மனநிலை, கடின உழைப்பு, விடாமுயற்சி நம்மில் பலரிடம் இல்லை.
கிரியேட்டிவிட்டி, சுதந்திரமாக இருக்கலாம், பணத்தை பற்றி யோசிக்காமல் இருக்கலாம் போன்றவை பிசினஸ் பற்றி யோசிக்கும்போது வரக்கூடிய ஒருவித கவர்ச்சி நம்மை இழுத்தாலும், ஒரு பிசினஸ்மேனாக இருப்பவர்களின் உண்மை நிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது. உண்மையாகவே தொழில்முனைவு என்பது அனைவருக்கும் பொருந்தாது. ஏன் பொருந்தாது என்பதற்கான 5 காரணங்கள் இங்கே...
1. இது ஒரு கணிக்க முடியாத பயணம்
தொழில்முனைவு என்பது காட்டுக்குள் ரைடு செல்வது போன்றது. வாடிக்கையாளரை இழப்பது முதல் எதிர்பாராத பின்னடைவுகள் வரை இது ரோலர் கோஸ்டருக்கு சற்றும் சளைத்தது அல்ல. கடினமான முடிவுகளை எடுப்பதில் தொடங்கி பணப் பற்றாக்குறையை கையாள்வது ஆகியவை மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே, நீங்கள் செழிப்பான சூழலில் வளர்ந்திருந்தால் பிசினஸின் கணிக்க முடியாத தருணங்களை கையாள்வது சிரமத்தை தரலாம்.
2. மோட்டிவேஷனின் தேவை
பிசினஸுக்கு எக்ஸ்டரா லெவல் மோட்டிவேஷன் தேவை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. காரணம்?
பிசினஸில் அனைத்தும் வெள்ளித்தட்டில் தேடி வராது. அதுவும் ஸ்டார்ட்அப் போன்ற பிசினஸில் இது நிதர்சனமான உண்மை. இத்தனைக்கும் லாபம் தரக்கூடிய பிசினஸ் பிளான், ப்ரொடக்ட், நிதி திரட்டுவதற்கான ஐடியா என எது வைத்திருந்தாலும், அதற்கு முதலில் திடமான உறுதியும் பொறுமையும் தேவை.
அதோடு, வழக்கமான வேலைகளில் இருப்பது போன்ற டாஸ்க், டெட்லைன் ஆகியவை இல்லாமல், ஒவ்வொரு தொழில்முனைவோரும் தங்களுக்கென கட்டமைப்பை உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும். மேலும், பிசினஸில் சுய ஒழுக்கம் மிக முக்கியம். பொறுப்பு இல்லாமலும், மோட்டிவேஷன் இல்லாமலும் இருப்பது வெற்றியை தடுக்கலாம்.
3. ரிஸ்க்
பிசினஸில் இயல்பாகவே ஒவ்வொரு தொழில்முனைவோரும் நிதி முதலீடுகள் முதல் தங்களின் நற்பெயர் வரை அனைத்தையும் ரிஸ்க்கில் வைத்துதான் தொழில் செய்கிறார்கள்.
எந்தவொரு தொழிலிலும் லாபம் கிடைக்க நேரம் ஆகும். ஆனால், அந்தக் காலத்தை எட்டுவதற்குள்ளகான பயணம் என்பது பணம் தொடர்பான பிரஷர் உட்பட அனைத்து ரிஸ்கையும் உள்ளடக்கியது.
ஆனால், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், குறிப்பாக நிதி ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் தொழில்முனைவோர் முயற்சியை விரும்பாததாக கருதலாம். தொழில் செய்வதற்கு தோல்வி பயம் ஒரு தடை என்பதை மறந்துவிடக்கூடாது.
மேலும், அனைத்து தொழில் முயற்சிகளும் வெற்றியை பெறும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது. எனவே, ரிஸ்க் என்கிற சூழ்ச்சி தொழில்முனைவில் நிறையவே உண்டு. அதனை சமாளிக்க வேண்டும் என்பதே நிதர்சனம். சமாளிக்க பயப்படுபவர்களுக்கு தொழில்முனைவு பொருந்தாது.
4. வொர்க் லைஃப் பேலன்ஸ்
நினைத்த நேரத்தில் செல்லலாம், வொர்க் லைஃப் பேலன்ஸ் என்கிற கனவோடு நிறைய பேர் பிசினஸ் செய்ய வருகின்றனர். ஆனால், உண்மை என்னவெனில் பிசினஸ் செய்ய நீண்ட நேர உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை. வெற்றிபெற்ற தொழில்முனைவோர்களை பார்த்தால் தெரியும், அவர்கள் இரவு நேரங்களிலும் வார இறுதி நாட்களிலும் வேலை செய்வார்கள். பிசினஸில் வெற்றிபெற அவர்கள் தங்களுக்கான தனிப்பட்ட நேரத்தையும் செலவு செய்வார்கள்.
எனவே, குடும்பத்துக்கென நேரம் செலவிடுதல், பொழுதுபோக்குக்காக நேரம் செலவிடுதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கும் நபர்களுக்கு தொழில்முனைவோரின் சிக்கல்கள் கையாள முடியாததாக இருக்கும். எனவே, வொர்க் லைஃப் பேலன்ஸ் பற்றி நினைக்கும் நபர்களுக்கு தொழில்முனைவு கனவு பொருந்தாதக அமையும்.
5. அறிவை மேம்படுத்துதல்
ஆர்வமும், ஐடியாவும் தொழில்முனைவோருக்கு கண்டிப்பாக தேவை. ஆனால், அது மட்டுமே போதாது.
ஆர்வம் உள்ள தொழில்முனைவோர் பிசினஸை நடத்துவதில் இருக்கும் சிக்கல்களை வழிநடத்த தேவையான அறிவும், அனுபவமும் இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், உண்மையில் மார்கெட்டிங் முதல் பைனான்ஸ் வரை பிசினஸின் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
அப்படி நிபுணத்துவம் பெற சில ஆண்டுகள் வரை ஆகலாம். பிசினஸ் அறிவில் அடித்தளம் இல்லாதவர்கள் முடிவுகளை எடுப்பதிலும், நிதியை கையாள்வதிலும், தங்களின் தயாரிப்புகளை மார்க்கெட்டிங் செய்வதிலும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதனால் தொடர்ச்சியான கற்றலில் உள்ளவர்களுக்கு பிசினஸ் ஆர்வம் ஊக்கப்படுத்தும். எனவே, பிசினஸில் கற்றலை மேம்படுத்துவது அவசியம். அது இல்லாதவர்களுக்கு தொழில்முனைவு கனவு பொருந்தாது.
இறுதியாக...
தொழில்முனைவோர் பயணம் நாம் நினைக்காத அளவுக்கு பலனளிக்கக் கூடியது என்றாலும், அது எல்லோருக்கும் பொருந்தாது. எனவே தான் இதில் நுழையும் முன் உங்கள் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்துகொள்வது முக்கியம்.
சிலருக்கு வழக்கமான வேலைகள் சில சவுகரியங்களை வழங்கலாம். ஆனால், நீங்கள் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டால், அந்த தொழிலில் வெற்றிபெற எதிர்கொள்ளவிருக்கும் சவால்களைப் புரிந்துகொள்வது நல்லது.
உறுதுணை கட்டுரை: ஆஸ்மா கான்
Edited by Induja Raghunathan