Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

13 வயதில் வருமான வரி செலுத்தும் சென்னை இரட்டையர்கள்!

8 வயதில் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ போட்டியில் வென்ற ஹர்பிதா, ஹர்பித் பாண்டியன் இன்று கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் தொடங்கி நடத்தி வருகின்றனர்.

13 வயதில் வருமான வரி செலுத்தும் சென்னை இரட்டையர்கள்!

Wednesday July 01, 2020 , 5 min Read

ஹர்பித் பாண்டியன், ஹர்பிதா பாண்டியன், இருவரும் இரட்டையர்கள். இவர்கள் 'தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் ட்வின்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர். 2015-ம் ஆண்டு இவர்களது ஸ்பெல்லிங் திறன், தன்னம்பிக்கை, அணுமுறை ஆகியவை உலகளவில் கவனம் பெற்றது.


இவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவின் சானல் 10-ல் ஒளிபரப்பப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இவர்களது அசாத்திய திறன் கண்டு வியந்துபோனார்கள்.


50,000 சொற்கள் என்கிற அளவில் உள்ள இவர்களது சொல்வளம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அப்போதிருந்து இந்த இரட்டையர்கள் ஆஸ்திரேலியாவின் செல்லப்பிள்ளைகள் ஆகிவிட்டனர்.

ஐந்தாண்டுகள் கடந்த பின்னர் ஹர்பிதா, ஹர்பித் இருவரும் தங்களது அப்பா பாண்டியன் அண்ணாமலையின் உதவியுடன் தொழில் முனைவர்களாக மாறியுள்ளனர்.

இவர்கள் 'கிளாஸ்மைண்ட்ஸ்’ (Classminds) என்கிற கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்பை தொடங்கியுள்ளனர். இது மாணவர்களுக்கான ஒரு உலளகாவிய தளம். இந்தத் தளம் அவர்களது திறனை மேம்படுத்தி வலுவான அடித்தளத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் அவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கிறது.

harpith harpitha

இரட்டையர்கள் ஹர்பித் பாண்டியன், ஹர்பிதா பாண்டியன்

ஸ்பெல்லிங் பீ போட்டி

இந்த இரட்டையர்கள் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்வதுடன் இவர்கள் நிறுத்திக்கொள்ளவில்லை.

“எங்களுக்கு இரண்டு வயதிருக்கையில் ஸ்பெல்லிங் மீது ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் பெற்றோர் ஒவ்வொரு இரவும் கதைகள் படித்துக் காட்டுவார்கள். கதைகளில் வரும் சொற்களை மிகவும் உன்னிப்பாகவும் ஆர்வமாகவும் கேட்கத் தொடங்கினோம். அப்போதிருந்து நாங்கள் கேள்விப்படும் அனைத்து வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கையும் கற்றுக்கொண்டோம். இரவு உணவிற்கு பின்னர் வார்த்தை விளையாட்டு விளையாடுவோம். எனவே எங்கள் கற்றல் முறை மகிழ்ச்சியான அணுகுமுறையுடன் இருந்தது,” என்றார் ஹர்பிதா.

இது அவர்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இரட்டையர்களான இவர்கள் 50,000-க்கும் அதிகமான சொற்களை தொகுத்து வைத்தனர். இதுவே தங்களைக் காட்டிலும் பெரியவர்களான 14 வயது போட்டியாளர்களுடன் கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ டிவி போட்டியில் சிறப்பாக போட்டியிட உதவியது.


இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹர்பிதாவும் ஹர்பித்துடன் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் உரைகளை வழங்கத் தொடங்கினார்கள். ஸ்பெல்லிங் பீ வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார்கள். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மிச்சிகன் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க பல்கலைக்கழகங்களின் சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகளில் பங்கேற்றனர்.


தமிழக அரசின் கல்வி டிவி சானலான ‘கல்வி டிவி-க்காக ஆங்கில பயிற்சி வகுப்புகளும் வழங்குகின்றனர். ‘மாணவர் கடமை’ என்கிற டாக்டர் அப்துல் கலாமின் விஷன் 2020 குழுவின் மாணவர் இதழிலும் எழுதி வருகின்றனர்.


சென்னை சிபிஎஸ் குளோபல் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இந்த இரட்டையர்களுக்கு இசை, நடனம், கராத்தே, சிலம்பம் என பல்வேறு பொழுதுபோக்குகளும் உண்டு.

மாணவர்களுக்கு ஊக்கம்

“நாங்கள் இளம் வயதிலேயே சாதனை படைத்துள்ளோம். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உரையாற்றி வருகிறோம். மாணவர்களுடன் கலந்துரையாடும்போது அவர்கள் கற்றலில் அதிக ஆர்வம் காட்டுவதைத் தெரிந்துகொண்டோம். இவர்களை ஒருங்கிணைத்து ஊக்கப்படுத்தினால் ஒவ்வொரு மாணவரும் சிறந்த தலைவர்களாகச் சாதனை படைக்கமுடியும் என்பதை உணர்ந்தோம்,” என்றார் ஹர்பிதா.

இவர்கள் மாணவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனர். ‘கிளாஸ்மைண்ட்ஸ் ஸ்பெல்பீ’ என்பது இதுவரை இல்லாத வகையில் புதுமையாக வழங்கப்படும் ஸ்பெல்பீ போட்டி. ‘கிளாஸ்மைண்ட்ஸ் ஷைன்’ என்பது மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த உதவும் தளம். ‘கிளாஸ்மைண்ட்ஸ் ஸ்காலர்’ என்பது மாணவர்கள் பாடங்களை படிக்கும் முறையை மாற்றியமைக்கும் என்று ஹர்பிதா விவரித்தார்.


NEET, IIT, JEE, SAT, ACT, TOEFL போன்ற பாடங்களை இணைத்துக்கொண்டு ஒருங்கிணைந்த ஸ்மார்ட் கற்றல் அணுகுமுறை மூலம் வழங்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

“ஊரடங்கு சமயத்தில் எங்களது Classminds International Student Talks நிகழ்ச்சி மூலம் அமெரிக்கா, யூகே, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைக்கிறோம். இதில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் கிளாஸ்மைண்ட்ஸ் முயற்சியில் ஒரு மாட்யூலாக இணைக்க உள்ளோம்,” என்றார் ஹர்பிதா.
harpith harpitha

கூட்டுச் செயல்பாடுகள்

கிளாஸ்மைண்ட்ஸ் இந்தியா முழுவதும் அதன் ஆஃப்லைன் ஸ்பெல்லிங் பீ நிகழ்ச்சிகளை நடத்த ஆக்ஸ்ஃபோர்ட் ELT சான்றிதழ் பெற்ற நிபுணர்கள் அடங்கிய குழுவை பணியிலமர்த்த உள்ளது. மாணவர்களால் உருவாக்கப்பட்ட பாடங்களின் உள்ளடக்கங்களை சரிபார்க்க பல்வேறு ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களையும் இணைத்துக்கொள்ள உள்ளது.

இந்த கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் பள்ளி மாணவர்களுக்கு கூட்டு செயல்பாடுகள் கொண்ட அணுகுமுறையை வழங்க விரும்புகிறது. போட்டி சார்ந்த கற்றல் மாதிரியான கிளாஸ்மைண்ட்ஸ் ஸ்பெல் பீ ஏற்கெனவே இந்தியாவில் உள்ள பல்வேறு பள்ளிகளுடன் இணைந்துள்ளது. தற்போது அதன் ஸ்பெல் பீ கற்றல் வீடியோக்களை இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் உள்ள பள்ளிகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த இரட்டையர்கள் பரிசாக பெற்ற தொகையைக் கொண்டும் பெற்றோரிடம் இருந்து பெற்ற தொகையைக் கொண்டும் சுயநிதியில் கிளாஸ்மைண்ட்ஸ் தொடங்கியுள்ளனர். Classminds EdTech Solutions Pvt Ltd என்கிற பெயரில் தனியார் நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவர்களது அப்பா பாண்டியன் அண்ணாமலை, ஸ்டார்ட் அப்பின் முதன்மை ஆலோசகர் மற்றும் இயக்குநராக உள்ளார். இவர் அன்றாட செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறார். இந்நிறுவனத்தின் பள்ளி செயல்பாடுகளின் தலைவர் கிரண் குமார் இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளை இணைக்கும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறார்.


இதுதவிர இந்தியாவின் முதல் பிசினஸ் மாஸ்டர்மைண்ட் சமூகமான 10croreclub நிறுவனர் மற்றும் FindMyMentors சிஇஓ காஷ்யப் கர்னாலா, Mangosteen Holdings சிஇஓ மற்றும் இன்ஃபோசிஸ் மூத்தத் தலைவராக செயல்பட்ட சோவன் பாண்டா ஆகியோர் வழிகாட்டி வருகின்றனர்.


ஆன்லைன், ஆஃப்லைன் என இரண்டு வகைகளிலும் வருவாய் ஈட்டும் முயற்சியில் கிளாஸ்மைண்ட்ஸ் ஈடுபட்டுள்ளது. ஹர்பிதா விவரிக்கையில்,

“எங்களது ஆன்லைன் தளம் ஆண்டு சந்தா சேவையை வழங்குகிறது. உதாரணத்திற்கு மாணவர்கள் குறைவான கட்டணத்துடன்கூடிய ஆண்டு சந்தாவை செலுத்திவிட்டு உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். பள்ளிகளில் இருந்தும் கிளாஸ்மைண்ட் ஸ்பெல்பீ போன்ற புதுமையான நிகழ்ச்சிகளில் பள்ளி பங்கேற்பதன் மூலமாகவும் ஆஃப்லைன் வருவாய் ஈட்டப்படுகிறது.

இந்நிறுவனத்தின் பிரத்யேக ஸ்பெல்பீ கற்றல் வீடியோக்களை வழங்குவதன் மூலமாகவும் மற்ற உள்ளடக்கங்கள் மூலமாகவும் வருவாய் ஈட்டி வருகிறது. இந்த இரட்டையர்கள் வரி செலுத்தும் மிகவும் இளம் வயதினர்கள் ஆவர். ஏற்கெனவே பான் கார்டு எண் பெற்றுள்ளனர்.

“தொழில்முனைவைப் பொறுத்தவரை வயது முக்கியமில்லை. உலகின் மிகச்சிறந்த வெற்றிகரமான தொழில்முனைவோர்கள் சிலர் மிகவும் இளம் வயதிலேயே தொழில்முனைவுப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர். நாங்கள் ஏற்கெனவே 10,000-க்கும் அதிகமான தொழில்முறை வல்லுநர்களுடன் இணைந்துள்ளோம். 15,000-க்கும் அதிகமான லிங்க்ட்இன் இணைப்புகள் உள்ளன,” என்றும் குறிப்பிட்டார்.

படிப்பு மற்றும் தொழில்முனைவு

2

படிப்பு, தொழில்முனைவு இரண்டையும் இவர்கள் எவ்வாறு திட்டமிடுகின்றனர்?

“தொழில்முனைவு என்பது சவால் நிறைந்த பயணம் என்பதை நாங்கள் இருவரும் அறிவோம். எங்கள் அப்பா தொழில்முனைவில் ஈடுபடுவதைக் கண்டு தொழில்முறை உலகில் பல்வேறு திறன்களைப் பெறவேண்டும் என்பதை உணர்ந்தோம். கிளாஸ்மைண்ட்ஸ் லோகோ வடிவமைப்பு, உள்ளடக்கம் உருவாக்குவது, பள்ளிகளுக்கான ஸ்பெல்பீ பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு என ஹர்பித்தும் நானும் வணிகத்தின் ஒவ்வொரு அம்சங்களிலும் கவனம் செலுத்தி வருகிறோம்,” என்றார் ஹர்பிதா.

பள்ளிப்படிப்பைப் பொறுத்தவரை இருவருமே வகுப்பில் முதலிடம் வகிக்கின்றனர். சுயமாக கற்கும் இவர்கள் முன்னரே பாடங்களைப் படித்து விடுகின்றனர். ஹர்பிதாவும் ஹர்பித்தும் வார நாட்களில் குறைந்தது இரண்டு மணி நேரங்களும் வார இறுதியில் அதிக நேரமும் கிளாஸ்மைண்ட்ஸ் செயல்பாடுகளுக்காக செலவிடுகின்றனர்.


முதல் ஆண்டான 2020-21-ஆண்டில் 100-150 பள்ளிகள் இணைத்துக்கொள்ளப்படும் என கிளாஸ்மைண்ட்ஸ் எதிர்பார்க்கிறது. ஆரம்பத்தில் 500 பள்ளிகளாக திட்டமிடப்பட்டாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 100-150 பள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இதன் ஆன்லைன் தளம் சந்தா ஏற்பாடுகளுக்காக செயல்படத் தொடங்கும். இந்தியாவில் மட்டும் 300 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளனர். எனவே நீண்டகால அடிப்படையில் சிறப்பான வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளது.


இவர்களுக்கு எட்டு வயதிருக்கையில் கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ போட்டியின்போது வருங்காலத்தில் எந்தத் துறையில் செயல்பட விரும்புகிறார்கள் என்று கேள்வியெழுப்பப்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே அறிவியலில் ஆர்வம் அதிகம் இருப்பதால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகவேண்டும் என்று கூறியிருந்தனர்.

“எனினும் தற்போதைக்கு தொழில்முனைவில் ஈடுபடவே விரும்புகிறோம். ஏனெனில் இந்த முயற்சி மூலம் மில்லியன்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும். வருங்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் செயல்படவும் விரும்புகிறோம்,” என்றார் ஹர்பிதா.

இணையதளம்: Classminds


ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா