Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

'சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பெண் கைதிகள்' - மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் பிரியான்ஷி!

சபர்மதி மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வழங்குவதுடன், மக்கும் சானிட்டரி பேட்களை தயாரிக்க பயிற்சி அளித்து, அவர்களது நல்வழிப்படுத்த உதவுகிறார் 'படேல் கர்மா' எனும் அறக்கட்டளையின் நிறுவனர் பிரியான்ஷி படேல்.

'சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பெண் கைதிகள்' - மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்தும் பிரியான்ஷி!

Tuesday January 07, 2025 , 3 min Read

சபர்மதி மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகளின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வழங்குவதுடன், மக்கும் சானிட்டரி பேட்களை தயாரிக்க பயிற்சி அளித்து, அவர்களது நல்வழிப்படுத்த உதவுகிறார் 'கர்மா' எனும் அறக்கட்டளையின் நிறுவனர் பிரியான்ஷி படேல்.

பிரியான்ஷி படேலின் வாழ்க்கைத் தத்துவம் சேவையில் வேரூன்றியுள்ளது. 2014ம் ஆண்டு 'உலகிற்குத் திரும்பக் கொடுத்தல்' எனும் நோக்கத்துடன் “கர்மா" எனும் அறக்கட்டளையை நிறுவினார். அகமதாபாத்தை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு சமூக மேம்பாடு, கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் செயல்படுகிறது.

அவர்களின் முன்முயற்சிகளில் வாழ்வாதாரத் திட்டங்கள், உதவித்தொகை, மனநல ஆதரவு மற்றும் சுகாதாரத் திட்டங்கள் ஆகியவை அடங்கும். சிறிய, சிந்தனைமிக்க செயல்கள் பிற்காலத்தில் நீடித்த விளைவுகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் வேரூன்றிய அவர், 2018ம் ஆண்டு முதல், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைச் சுற்றியுள்ள உடல்நலப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்யத் தொடங்கினார்.

karma foundation

சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் பெண் கைதிகள்!

படேல் கர்மா அறக்கட்டளை ஆனது, கிராமப்புறங்களில் உள்ள இளம் பெண்களுக்கு கணினி அறிவியல், அழகுக்கலைப் படிப்புகள் மற்றும் ஓட்டுநர் வகுப்புகள் ஆகியவற்றில் பயிற்சி அளித்து, மாதவிடாய்க் கல்வியை வழங்குகிறது. இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள காந்திய பதிப்பகமும், அறக்கட்டளையுமான 'நவஜீவன்' கோரிக்கையின் பேரில், கர்மா அறக்கட்டளை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறைச்சாலையுடன் இணைந்து 2018ம் ஆண்டில் சபர்மதி சிறையில் உற்பத்தி அலகு ஒன்றை அமைத்தது.

சிறைக்குள் இருக்கும் பெண்களால், அப்பெண்களுக்காக, மக்காச்சோள மாவு மற்றும் பிற மக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மாதவிடாய் பேட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதன்மூலம், அவர்களுக்கு மாதவிடாய் கல்வியை அளிக்க முயற்சி செய்தது. அதன் ஒரு பகுதியாக மக்கும் சானிட்டரி பேட்களை தயாரிப்பதைத் தாண்டி, விழிப்புணர்வு அமர்வுகளை நடத்துகிறது. மேலும், சுகாதார முகாம்களை ஏற்பாடு செய்கிறது.

"தொடக்கத்தில் 15 பெண்களுடன் பணியாற்றத் தொடங்கினோம். அவர்கள் நாள்தோறும் 3,000க்கும் மேற்பட்ட சானிட்டரி பேட்களை உற்பத்தி செய்தனர். பல ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட கைதிகள் இந்த முயற்சியில் பணியாற்றியுள்ளனர்," என்று கூறினார் பிரியான்ஷி.

ஏனெனில், போதிய கழிப்பறைகள் மற்றும் சுத்தமான தண்ணீர் போன்ற சுகாதார வசதிகள் இல்லாத நிலையில் பெண் கைதிகள் துணிகளைப் பயன்படுத்தினர். இடப் பற்றாக்குறை மற்றும் பகிர்வு அறைகள் மற்றும் படுக்கைகள் ஆகிய விஷயங்களில் கைதிகளிடையே சண்டை ஏற்பட்டது. மாதவிடாய் சுழற்சியின் போது அவர்களுக்குள் துன்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.

மேலும், மாதவிடாய் சுகாதாரமின்மை பிரச்னகைளால் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதனால், பெண் கைதிகள் பாதுகாப்பாக உணரவும், அவர்களின் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை பொறுப்பேற்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வழிவகுத்தது.

"மாதவிடாய் குறித்து பெண் கைதிகளிடம் முதலில் பேசியபோது, ​​பலர் முகத்தை மூடிக் கொண்டனர். சிலர் இடத்தை விட்டு வெளியேறினர். அவர்களை ஒத்துழைக்க வைக்க தொடர்ச்சியான முயற்சி தேவைப்பட்டது. மேலும், அவர்கள் எங்களிடம் மனம்விட்டு பிரச்னைகளை பகிர நேரம் எடுத்தது. இந்த கைதிகளின் மாதவிடாய் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மிகவும் மோசமாக இருப்பதையும் மருத்துவக்குழு கண்டறிந்தது," என்று சோஷியல் ஸ்டோரியிடம் பகிர்ந்தார் சபர்மதி மத்திய சிறைச்சாலையின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் புரோஹித்.

சிறைப்பெண்களுக்கு மாதவிடாய் சுகாதாரக்கல்வியை அளிக்க முயன்ற கர்மா அறக்கட்டளை அதன் ஒரு பகுதியாக, மக்காச்சோள மாவு மற்றும் பிற மக்கும் பொருட்களைப் பயன்படுத்தி மாதவிடாய் பேட்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. பின்னர், அவை பள்ளிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன.

இதுவரை சபர்மதி சிறைச்சாலையில் உள்ள உற்பத்தி பிரிவு 1,75,000க்கும் மேற்பட்ட சானிட்டரி பேட்களை தயாரித்துள்ளது. ஒவ்வொரு பாக்கெட்டிலும் எட்டு பேட்கள் உள்ளன. இதில் நூற்றுக்கணக்கான கைதிகள் பங்களித்துள்ளனர்.

கைதிகளுக்கு வேலை வாய்ப்பு; சூழலை பாழாக்காத நாப்கின்கள்

மாதவிடாய் ஆரோக்கியம் என்பது இந்தியாவில், குறிப்பாக கிராமப்புறங்களில் ஒரு முக்கியமான பிரச்சினையாகும். விழிப்புணர்வு மற்றும் வளங்களின் பற்றாக்குறை காரணமாக பெரும்பாலான பெண்களிடையே சுகாதார சிக்கல்கள் ஏற்படுகின்றன.

தஸ்ராவின் அறிக்கையின்படி, போதிய மாதவிடாய் சுகாதார மேலாண்மையின் காரணமாக ஆண்டுத்தோறும் கிட்டத்தட்ட 23 மில்லியன் பெண்கள் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள். அதன் மாதவிடாய் சுகாதார திட்டத்தின் மூலம், கர்மா அறக்கட்டளை குஜராத் உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 200 பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் தலைமையிலான விழிப்புணர்வு அமர்வுகளுடன் தொடங்கப்பட்டு பின் மக்கும் சானிட்டரி நாப்கின்கள் விநியோகிக்கப்படுகின்றன.

"சில சமயங்களில் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கூட மாதவிடாய் சுகாதாரம் பற்றிய அடிப்படை அறிவு இல்லை. எங்களுடைய நோக்கம் நாப்கின்களை விநியோகிப்பது பற்றியது மட்டுமல்ல, மக்களின் மனநிலையை மாற்றி, புரிதலை வளர்ப்பது பற்றியது. சில கிராமங்களில் உள்ள பெண்கள் இலைகளையும், சில சமயங்களில் சாம்பலையும் பயன்படுத்துவதைப் பார்த்தோம். எங்கள் சபர்மதி சிறைப் பிரிவு இந்த எல்லா இடங்களுக்கும் விநியோகிக்க போதுமான நாப்கின்களை தயாரிக்கிறது. நாடு முழுவதும் பாதிக்கப்படக்கூடிய கிராமப்புறங்களில் உள்ள கைதிகள் மற்றும் இளம்பெண்களுக்கு இலவசமாக நாப்கின்களை விநியோகிக்கிறோம்," என்றார் புரோஹித்.

சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை மற்றும் வன்முறை ஆகிய அமைப்பு ரீதியான காரணங்களால் பெண்கள் பெரும்பாலும் குற்றங்களில் தள்ளப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் காரணிகளில் பொருளாதாரப் பற்றாக்குறை, கல்வியின்மை, குடும்ப வன்முறை ஆகியவையும் அடங்கும். இந்தத் திட்டம் சிறையின் வேலைவாய்ப்பு கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. திறன் மேம்பாட்டை வளர்க்கிறது.

இன்றைய நிலவரப்படி, சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் ஈடுபடும் பெண் கைதிகளுக்கு ஆறு மணி நேர வேலைக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் வழங்கப்படுகிறது என்கிறார் புரோஹித். விடாமுயற்சியுடன் பணிபுரியும் பெண்கள் நன்னடத்தைக்கான சான்றிதழ்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதால், ஜாமீன் பெறுவதற்கும் அவை உதவும். சிறைக் கைதிகளுக்கு கர்மா அறக்கட்டளை வழங்கும் பல்வேறு பயிற்சித் திட்டங்களின் மூலம், அவர்கள் வெளியில் வந்தவுடன் சிறிய அளவிலான வணிகங்களை உருவாக்கி கொள்ள முடியும் என்றார்.

"இது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்றது. ஒருபுறம், பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். மறுபுறம், மலிவு விலையில் சுற்றுச்சூழல் நட்புரீதியான சுகாதாரப் பொருட்களால் சமூகம் பயனடைகின்றது," என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தமிழில்: ஜெயஸ்ரீ