மாற்றுத்திறனாளிகளுக்காக கடந்த10 ஆண்டுகளில் 681 தேர்வுகள் எழுதியுள்ள பெங்களூரு பெண்!
புஷ்பா பெருமூளை வாதம், டவுன் சிண்ட்ரோம் போன்ற பாதிப்புள்ளவர்களுக்காகவும் தேர்வெழுதியுள்ளார். இந்த சேவைக்காக இவர் எந்தவித கட்டணத்தையும் பெற்றுக்கொள்வதில்லை.
தேர்வு எழுதும் அறைக்குள் சென்ற அனுபவம் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருக்கும். உள்ளங்கை வியர்த்துவிடும். கேள்விகள் எளிதாக இருக்கவேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்வோம். தேர்வெழுதிய பிறகு எவ்வளவு மதிப்பெண் வரும் என்கிற பதட்டம் ஏற்படும்.
நம்மில் பெரும்பாலானோர் வேறுவழியின்றி கட்டாயத்தின் பேரிலேயே தேர்வு எழுதுவோம்.
ஆனால் பெங்களூருவைச் சேர்ந்த என் எம் புஷ்பா பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக கடந்த பத்தாண்டுகளில் தாமாகவே முன்வந்து 681 தேர்வுகள் எழுதியுள்ளார். இவருக்கு இந்த ஆண்டு நாரிசக்தி விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பார்வை குறைபாடுள்ளவர்கள் 40 மில்லியன் பேர் உள்ளனர். இதில் பெருமாலானோருக்கு தாங்கள் விரும்பியபடி படிக்க உதவி தேவைப்படுகிறது.
புஷ்பா ‘தி லாஜிக்கல் இண்டியன்’ உடனான உரையாடலில் குறிப்பிடுகையில்,
”எனக்கு பேசும் திறனும் பார்க்கும் திறனும் இருப்பதால் இதைச் செய்ய இயலாதவர்களைக் காட்டிலும் நான் உயர்ந்தவர் என்று அர்த்தம் இல்லை. அவர்களும் ஏதோ ஒரு வகையில் திறமைசாலிகள். அதை வெளிப்படுத்த நான் உதவுகிறேன் அவ்வளவுதான்,” என்றார்.
எஸ்எஸ்எல்சி, பியூசி, பொறியியல், சட்டம், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், BESCOM, அஞ்சல் மற்றும் வங்கித் துறை பணிகள் என புஷ்பா பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்காக அனைத்து தேர்வுகளையும் எழுதியுள்ளார். இதற்காக இவர் மாணவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதில்லை.
இவர் 2007-ம் ஆண்டு 19 வயது மாணவி ஒருவருக்காக முதல் முறையாகத் தேர்வெழுதியுள்ளார். தனது அனுபவம் குறித்து ’நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ உடனான உரையாடலில் பகிர்ந்துகொள்கையில்,
”அந்த மாணவி பெயர் ஹேமா. அரசு சாரா நிறுவனம் ஒன்றை நடத்திவரும் என் நண்பர் ஒருவர் இவருக்காகத் தேர்வெழுதுபவரை கடைசி நேரத்தில் ஏற்பாடு செய்ய இயலாமல் போனதால் என்னை அணுகினார். தேர்வின்போது அவர் சொல்வதை புரிந்துகொள்வது எனக்குக் கடினமாக இருந்தது. பின்னர் அவர்கள் எப்படி படிக்கிறார்கள், எழுதுகிறார்கள், தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்து தெரிந்துகொண்டேன்,” என்றார்.
அன்று துவங்கப்பட்ட முயற்சி அதன் பிறகும் தொடர்ந்தது. புஷ்பா சில மாணவர்களை சந்தித்து அவர்களது புத்தகங்களை வாங்கிப் படித்தார். அவர்களுக்காக பாடங்களை பதிவு செய்தும் கொடுத்துள்ளார். இவர் தேர்வெழுதிய பெரும்பாலான மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். பலருக்கு வேலைக் கிடைத்துள்ளது.
புஷ்பா ஏழாம் வகுப்பு படித்தபோது அவரது அப்பாவால் பள்ளிக் கட்டணத்தை செலுத்த இயலாமல் போனது. இதனால் தேர்வெழுத முடியாமல் போகும் நிலை ஏற்பட்டது. இத்தகைய சூழலைக் கடந்து வந்ததால் படிப்பின் மதிப்பை புஷ்பா நன்குணர்ந்துள்ளார்.
”நாங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருந்தோம். என்னுடைய அப்பா படுத்த படுக்கையாக இருந்தார். என்னுடைய அம்மாவின் மாதச் சம்பளம் 500 ரூபாய் மட்டுமே. குடும்பத்திற்கான சாப்பாடு மற்றும் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டார். அந்த சமயத்தில் நானும் என் அண்ணனும் ஒரு வருடம் படிப்பை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் எங்களுக்கு பரிச்சயமான, போலியோ பாதித்த நபர் ஒருவர் எங்களுக்கு உதவினார். அந்த நன்றியுணர்ச்சியை திரும்ப செலுத்தும் வகையில் இன்று பிறருக்கு உதவி வருகிறேன்,” என்றார்.
புஷ்பா டிப்ளமோ முடித்துள்ளார். அவரும் அவரது அண்ணனும் பொருளாதார ரீதியாக முன்னேறியுள்ளனர். சில சமயம் வார நாட்களில் தேர்வெழுதவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த சமயத்தில் அலுவலகத்திற்கு தாமதமாக வர அனுமதி வாங்கிக்கொண்டு தேர்வெழுத செல்வதாகவும் புஷ்பா தெரிவித்தார். அதை ஈடுசெய்ய அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் நேரம் வேலை செய்து முடித்துவிடுகிறார்.
ஆறு வயது முதல் அறுபது வயது வரையிலும் உள்ள மாணவர்களுக்காக புஷ்பா தேர்வெழுதியுள்ளார். பெருமூளை வாதம், டவுன் சிண்ட்ரோம் போன்ற பாதிப்புள்ளவர்களுக்காகவும் தேர்வெழுதியுள்ளார்.
கட்டுரை : THINK CHANGE INDIA