10 நிமிடத்தில் ஆப்பிள் ஐபோன்கள் உங்கள் வீட்டு வாசலில் - சென்னை உள்ளிட்ட நகரங்களில் Blinkit டெலிவரி!
தில்லி என்.சி.ஆர்., மும்பை, ஐதராபாத், புனே, லக்னோ, சண்டிகர், சென்னை, ஜெய்பூர், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் ஆப்பிள் ப்ராடக்ட்களின் டெலிவரியை துவங்கியிருக்கிறது பிளிங்கிட்.
குவிக் காமர்ஸ் நிறுவனம் `பிளின்கிட்` (Blinkit); ஐபோன், மேக்புக் ஏர், ஐபேட் மற்றும் ஏர்பாட்ஸ் உள்ளிட்ட ஆப்பிள் சாதனங்களை இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவையை துவக்கி இருப்பதாக நிறுவனர், சி.இ.ஓ., அல்பிந்தர் தின்சா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எக்ஸ் பதிவில் அவர், ஐபோன், மேக்புக் ஏர், ஏர்பாட்ஸ், ஐபேட், ஆப்பிள் வாட்ச் மற்றும் இதர ஆப்பிள் துணை பொருட்களை 10 நிமிடங்களில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
"தில்லி என்.சி.ஆர்., மும்பை, ஐதராபாத், புனே, லக்னோ, சண்டிகர், சென்னை, ஜெய்பூர், பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் டெலிவரியை துவங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
2024, டிசம்பர் 31 வரையான காலாண்டில், ஜொமேட்டோவின் குவிக் காமர்ஸ் நிறுவனமான பிளின்கிட், வளர்ச்சி முதலீடுகளில் கவனம் செலுத்தியதன் காரணமாக ரூ.103 கோடி நஷ்டம் அடைந்துள்ளது.
பங்குதாரர்களுக்கான கடிதத்தில், முதலீடுகள் காரணமாக, வரும் காலங்களில் பிளின்கிட் நஷ்டம் அடையும் என ஜொமேட்டோ தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் போட்டி, வாடிக்கையாளர் விழிப்புணர்வு மற்றும் குவிக் காமர்ஸ் ஏற்புக்கு வழிவகுத்திருந்தாலும், இதன் காரணமாக லாப விகித விரிவாக்கத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தற்காலிகமானதே என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வார துவக்கத்தில், அதிகரிக்கும் போட்டி மற்றும் விரிவாக்கத்தின் மத்தியில் ஜொமேட்டோ தனது குவிக் காமர்ஸ் பிரிவான பிளின்கிட்டில் ரூ.1,500 கோடி முதலீடு செய்தது. நிறுவனம், பங்கு ரூ.19,70,171 எனும் விலையில் 7,612 பங்குகளை கையகப்படுத்த ரூ.1500 கோடி முதலீடு செய்துள்ளதாக கம்பெனி பதிவாளர்களிடம் சமர்பிக்கப்பட்ட ஆவணம் தெரிவிக்கிறது.
செய்தி- பிடிஐ

Edited by Induja Raghunathan