4-ஜி சேவையை அறிமுகப்படுத்திய பி.எஸ்.என்.எல்: டிசம்பர் 31 வரை இலவச 4ஜி சிம்!
டிசம்பர் 31 வரை வாடிக்கையாளர்களுக்கு இலவச 4 ஜி சிம்!
மத்திய அரசுக்கு சொந்தமான தொலை தொடர்பு சேவை நிறுவனம் பி.எஸ்.என்.எல். கடந்த சில ஆண்டுகளாகவே அதன் செயல்பாடுகள் குறித்தும் அது மூடப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. லேன்ட்லைன், மொபைல் மற்றும் ப்ராண்ட்ப்ராண்ட் சேவை வழங்கும் பல தனியார் நிறுவனங்களின் அசுர வளர்ச்சி காரணமாக பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவையில் பின்தங்கியது.
தனியாருடன் போட்டிப் போடும் அளவிற்கு அதன் சேவை மற்றும் விலைப்பட்டியல் இல்லாதது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடையச் செய்தது. குறிப்பாக ஜியோ; மொபைல், டிவி மற்றும் இண்டெர்நெட் சேவை என அனைத்தையும் ஒருங்கிணைத்து குறைந்த விலையில் அறிமுகம் செய்ததால், பி.எஸ்.என்.எல் தனது நீண்டநாள் வாடிக்கையாளர்களை இழந்து வந்தது.

இதனிடையே, இழந்த வாடிக்கையாளர் சேவையை மீட்டெடுக்கும் முனைப்பில் மத்திய அரசு இறங்கியது. அதனொரு பகுதியாக பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கி இருந்தது.
அதேபோல், பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு 4-ஜி அலைக்கற்றைகளை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி, அலைக்கற்றைக்கான முதலீடாக ரூ.20,140 கோடி மற்றும் அதற்கான ஜிஎஸ்டி தொகை ரூ.3,674 கோடியை அரசே ஏற்கும் என அறிவித்திருந்தது.
தற்போது இந்தத் திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது. ஆம், பி.எஸ்.என்.எல் 4-ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அதிகாரபூர்வமாக பி.எஸ்.என்.எல் 4-ஜி சேவை தொடங்கி வைத்தார். மேலும், பி.எஸ்.என்.எல் 4-ஜி சேவை மூலம் முதல் அழைப்பையும் (call) அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மேற்கொண்டார். சேவை தொடர்பாக பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளதில்,
“பிஎஸ்என்எல் 4 -ஜி இந்தியாவில் பல பகுதிகளில் இப்போது கிடைக்கும். டிசம்பர் 31 வரை வாடிக்கையாளர்களுக்கு இலவச 4 ஜி சிம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் உள்நாட்டு 4 ஜி நெட்வொர்க் ஆகும்," என்றுள்ளது.
இதனிடையே, பி.எஸ்.என்.எல் 4 ஜி சேவையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் பங்குதாரராக உருவாகலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
2021-22 நிதியாண்டில் 4 ஜி சேவைகளுக்கான ஸ்பெக்ட்ரமிற்காக மத்திய அரசு 24,084 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் ஆகியவற்றின் 69,000 கோடி மறுமலர்ச்சி தொகுப்பின் ஒரு பகுதியாகும். பிஎஸ்என்எல் இந்த நிதியாண்டின் இலக்குடன் தனது 4 ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் அதே வேளையில், தொலைத்தொடர்புத் துறை தனது ஆர் அண்ட் டி நிறுவனமான சி-டோட் 6 ஜி தொழில்நுட்பத்தில் வேலை செய்து வருகிறது.
தொலைத்தொடர்பு செயலாளர் கே ராஜாராமன் அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான சி-டோட்டை 6 ஜி மற்றும் பிற எதிர்கால தொழில்நுட்பங்களை சரியான நேரத்தில் உலகளாவிய சந்தைப்படுத்துதலுக்காக வேலை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
சாம்சங், ஹவாய், எல்ஜி மற்றும் வேறு சில நிறுவனங்கள் 6ஜி தொழில்நுட்பங்களில் வேலை செய்யத் தொடங்கியுள்ளன, அவை 5 ஜி யை விட 50 மடங்கு வேகமாகச் சொல்லப்பட்டு 2028-2030 க்கு இடையில் வணிகரீதியாக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் உதவி: பிடிஐ