Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஈரோட்டில் இருந்து இந்தியா முழுவதும் விற்பனை: இயற்கை நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் ஈஸ்வரமூர்த்தி!

ஈரோட்டைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, ஆர்கானிக் நாட்டுச் சர்க்கரை தயாரித்து இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

ஈரோட்டில் இருந்து இந்தியா முழுவதும் விற்பனை: இயற்கை நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் ஈஸ்வரமூர்த்தி!

Wednesday November 25, 2020 , 3 min Read

விஞ்ஞான வளர்ச்சியின் அசுர வேகத்தால் நவீனமயமாக மாறி வந்த உலகம், இன்று மீண்டும் இயற்கையைத் தேடி ஓடத் தொடங்கியுள்ளது. மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் பெரும் மாறுதல்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.


வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் என்ற பாகுபாடின்றி உலக மக்கள் அனைவருமே இயற்கை உணவுகளையே விரும்பி உண்ணத் தொடங்கியுள்ளனர். வேதி உரங்கள் பயன்படுத்தாத, இயற்கையான முறையில் விளைவிக்கப்படுகின்ற காய்கனிகளை தேடி வாங்கி விரும்பி உண்கிறார்கள். இதனால் உலகம் முழுவதும் ஆர்கானிக் உணவுப் பொருள்களுக்கு தற்போது கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.


அதில் ஓர் பகுதியாக மக்களின் பாரம்பரிய நாட்டுச் சர்க்கரையை மீண்டும் மக்களிடம் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார் ஈரோடு மாவட்டம், கவுந்தம்பாடியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர் முழுக்கமுழுக்க இயற்கை முறையில் கலப்படமில்லாமல் மனித சக்தியால் தயாரிக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை தயாரித்து மக்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.

jag2

பரம்பரை பரம்பரையாக நாட்டுச் சர்க்கரை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்களின் குடும்பம், தங்களுக்கென சொந்தமாக உள்ள நிலத்தில் கரும்பு பயிரிட்டு, அந்த கரும்பை வெளியே விற்பனை செய்யாமல் தங்களின் சொந்த ஆலையிலேயே ஆட்டி, அந்த கரும்பு பாலில், தூய கலப்படமில்லாத நாட்டுச் சர்க்கரையை தயாரிக்கின்றனர்.

சுமார் 500 லிட்டர் கரும்பு பாலில் இருந்து 90 கிலோ கலப்படமில்லாத தூய நாட்டுச் சர்க்கரை கிடைக்குமாம்.
eswar

KKN FARMS உரிமையாளர் ஈஸ்வரமூர்த்தி

நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு குறித்து ஈஸ்வரமூர்த்தி நம்மிடம் தெரிவித்ததாவது, இனிப்பு பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருள்களில் இனிப்புச் சுவையை ஏற்படுத்த பல்வேறு வகையான இனிப்பு மூலங்கள் உள்ளன. அவை சீனி, நாட்டுச் சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சுவெல்லம், கருப்பட்டி என ஓவ்வொன்றும் ஓர் சுவையை அளிக்கிறது.


அனைத்து வகையான சர்க்கரைக்கும் மூலப் பொருள் என்னவோ கரும்புதான். கரும்பில் இருந்து எடுக்கப்படும் கரும்புப்பாலில் இருந்துதான் சர்க்கரை உள்ளிட்ட அனைத்து வகையான சர்க்கரைப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன.

கரும்பு

இந்த நாட்டுச் சர்க்கரையை நாங்களே முழுக்க முழுக்க மனித சக்தியைப் பயன்படுத்தி, கலப்படமில்லால் இயற்கை முறையில் தயாரிக்கின்றோம். முன்பெல்லாம் 60 கிலோ மூட்டைகளில் நாட்டுச் சர்க்கரையை பேக்கிங் செய்து, பல்வேறு பகுதிகளுக்கும் மொத்த விற்பனைக்காக அனுப்பிக் கொண்டு இருந்தோம்.

ஆனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த கலப்படமில்லாத தூய நாட்டுச்சர்க்கரை கிடைக்கவேண்டும் என்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் நாங்களே மார்க்கெட்டிங்கில் இறங்கினோம். 25 கிலோ எடையுள்ள சிறிய மூட்டைகளில் நாட்டுச் சர்க்கரையை பேக்கிங் செய்து அனைத்து கடைகளிலும் கிடைக்கும்படி செய்யத் தொடங்கினோம்.

மேலும், ஆலைக்கே வந்து கேட்கும் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கு 5, 10 கிலோ என்ற அளவில் சில்லரை விற்பனையையும் தொடங்கினோம். மேலும் எதிர்காலத்தில் 1 கிலோ பாக்கெட்களாக போட்டு அனைத்து மக்களுக்கும் தரமான கலப்படமில்லாத நாட்டுச் சர்க்கரையும், அதன் முழு பலன்களும் கிடைக்க திட்டமிட்டு வருகிறோம் என்கிறார்.

கரும்பு1

பொதுவாக நாட்டுச் சர்க்கரை கிலோ ரூ.100-க்கு மேல் விற்றால்தான் எங்களுக்கு ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும். அதற்கும் கீழே விற்பனையாகிறது என்றால் அந்த நாட்டுச் சர்க்கரையின் தரத்தை பரிசோதிப்பது அவசியம். ஏனெனில் நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு செலவு மட்டுமன்றி, பேக்கிங் கட்டணம், போக்குவரத்து என அனைத்து செலவுகளையும் பார்க்கவேண்டியுள்ளது என்கிறார்.

1 ஏக்கருக்கு குறைந்தபட்சம் 3 டன் சர்க்கரையாவது கிடைக்கும். இதே செயற்கை உரங்கள் போட்டு கரும்பின் வளர்ச்சியை ஊக்குவித்தால் ஓர் ஏக்கருக்கு 5 டன் வரை கூட கிடைக்கும். ஆனால் நாங்கள் அதை விரும்புவதில்லை. தரமான, இயற்கையான உணவுப் பொருள்களை மட்டுமே மக்களுக்கு வழங்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஆர்கானிக் முறையில் பயிர் செய்கிறோம் என்கிறார்.

தினசரி ஓர் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரையை பசும்பாலில் அல்லது தண்ணீரில் கலந்து தினசரி பருகி வந்தால் ஜீரண சக்தி அதிகரிக்குமாம். மேலும், இது ரத்தத்தையும் சுத்திகரிக்கிறது. இதனை தினசரி நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் வெப்பநிலை சீராக இருக்குமாம். அதிலும் குறிப்பாக வெயில் காலங்களில் இவ்வாறு குடித்து வந்தால் வயிறு சார்ந்த பிரச்னைகளை சமாளிப்பதுடன், உடலையும் ஜில்லென வைக்கலாமாம்.


100 கிராம் நாட்டுச் சர்க்கரையில் 95 கிராம் கார்போஹைட்ரேட்டும், 11.5 மில்லிகிராம் இரும்புச் சத்தும், 0.4 மில்லிகிராம் புரோட்டீனும், 80 மில்லிகிராம் கால்சியமும், 40 மில்லிகிராம் பாஸ்பரஸூம், கரோட்டீன், தயமின் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதனால், தொடர்ந்து நாட்டுச்சர்க்கரையை உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தசோகை உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதில்லை. எனவே வளரிளம் பருவத்தினர், பெண்கள், கர்ப்பிணிகள் போன்றோர் தங்களின் தினசரி உணவில் இதனை குறிப்பிட்ட அளவுக்கு சேர்த்து வருவது மிகுந்த நன்மை பயக்கும் என்கிறார்.
கரும்பு3

ஓராண்டுக்கு சுமார் 30 டன் வரை நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செய்து தமிழகம் மட்டுமன்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். விவசாயிகள் அதிக அளவில் உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றைப் பயன்படுத்தி, விளைச்சலை அதிகரிக்கின்றனர். இதனால் நல்ல மகசூல் கிடைக்கிறது. ஆனால் இதனை வாங்கி உண்ணும் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மக்களின் உடல் நலத்தை பாதிக்காத ஆர்கானிக் விவசாய முறைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்கிறார்.

எதிர்காலத்தில் 1 கிலோ பாக்கெட்களில் நாட்டுச் சர்க்கரையை பேக்கிங் செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதே எனது நோக்கம். மேலும், அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் போன்றவற்றையும் இதேபோல தரமான முறையில் தயாரிக்கும் திட்டமும் உள்ளது எனக் கூறும் ஈஸ்வரமூர்த்தி, வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இருக்கக்கூடாது. நம்மைத் தேடி வருபவர்களுக்கு தரமான பொருளை வழங்கவேண்டும் என்பதே மிக முக்கியமானது என்கிறார்.
jag

வேதியியல் செயற்கை இனிப்புகளைத் தவிர்த்து, இயற்கையான, ஆரோக்கியமான இனிப்பை சுவைக்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: KKN FARMS, ERODE DISTRICT, PH: 97152 40919, 97896 39904 Email: [email protected]