அதிகாலை எழுவதே வெற்றியின் மந்திரம்!
காலையில் எழுந்து கொள்ள அலாரம் வைத்துவிட்டு, அது அடிக்கும்போது அணைத்துவிட்டு உறக்கத்தை தொடர்வதை நம்மில் பலரும் தினமும் செய்துதான் வருகிறோம். வேலைக்கு செல்லவேண்டிய கட்டாயத்தால் வேறு வழியின்றி, மனமின்றி கட்டிலை விட்டு எழுந்து புறப்பட தொடங்குவோம். ஆனால் ஒரு சிலருக்கு தன்னாலே காலை ஆனவுடன் முழிப்பு வருவது ஆச்சர்யத்தை தருவது என்னமோ உண்மை.
நம்மை சுற்றியுள்ளோரை பார்த்தோமானால், குறிப்பாக பிரபலமானவர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என்று அனைவருமே உலக அளவில் எடுத்துக்கொண்டோமானால் காலை எழும் பழக்கத்தை கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இந்த விஷயத்தில் அவர்கள் அனைவர் இடத்திலும் ஒற்றுமையை பார்க்க முடிகிறது. ஒருவேளை இந்த நல்ல பழக்கமே அவர்களின் வெற்றிக்கு ஒருவகையில் காரணம் என்று கூட நம்மை சிந்திக்கவைக்கிறது.
”நீங்கள் அதிகாலை சீக்கிரமாக விழித்துக்கொண்டால், உங்களுக்கான முழு நாள் காத்திருக்கிறது...” என்று ராபின் சர்மாவின் குரு கூறினார்.
அதிகாலை எழுந்து தங்களின் வெற்றிக்கதையை செதுக்கிய முக்கிய பிரபலங்களின் பட்டியல் இதோ...
சுந்தர் பிச்சை:
கூகிளின் சிஇஒ, சுந்தர் பிச்சை தற்போது உலகையே இயக்கும் நிறுவனத்தை இயக்குகிறார். அவர் காலை எழும் பழக்கமுடையவர். 6.30-7.00 மணி அளவில் எழுந்துவிட்டு தனது காலை கடன்களை முடித்துவிட்டு செய்திதாள்கள் படிக்கும் வழக்கமுடையவர். காலை டிபனுக்கு ஆம்லெட், ப்ரெட் டோஸ்ட் மற்றும் டீ அருந்துவார். மற்றவர்களை போல் காலையில் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் தனக்கில்லை என்பதை ஒற்றுக்கொள்ளும் இவர், காலையில் டீ குடித்துக்கொண்டே பேப்பர் படிப்பது தனது தினத்தை தொடங்க சிறந்த சூழ்நிலையை உருவாக்குவதாக கருதுகிறார்.
பிவி.சிந்து:
இன்று இந்தியா முழுதும் தெரிந்த பெயராகிப் போன பிவி.சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். இந்த வெற்றியை பெற அவரின் விளையாட்டு, பயிற்சி, விடாமுயற்சி பற்றி பல செய்திகள் வந்திருந்தாலும், அவர் அதிகாலை எழும் பழக்கமுடையவர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. தினமும் அதிகாலை பேட்மிண்டன் பயிற்சி மேற்கொண்டதால் இவரால் இந்த இடத்தை அடைய முடிந்தது என்பதும் உண்மை. 2005 முதல் 2010 வரை, சிந்து தனது வீட்டில் இருந்து தினமும் 50 கிமி தூரம் பயணித்து கோபிசந்தின் பயிற்சி அகாடமிக்கு சென்று நான்கு மணிநேரம் பயிற்சி எடுப்பார். இதை அவர் தனது அன்றாட பணிகள் மற்றும் பள்ளி வேலைகளோடு செய்து வந்தார். இன்றும் கூட சிந்து அதிகாலை எழுந்து தயார் ஆகி பயிற்சிக்கு 4.30 மணிக்கு ரெடியாக இருப்பாராம்.
மிச்செல் ஒபாமா:
மே மாதம் 2015 இல் தனது காலை பணிகள் வீடியோவை வெளியிட்டார் மிச்செல். அதில் பளு தூக்குவது, கயிற்றில் தொங்குவது, குத்துச்சண்டை போடுவது என்று பல பயிற்சிகளின் காட்சிகளை கண்டு உலகமே பேசியது. உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தின் ஆதரவாளரான மிச்செல் ஒபாமா, தன்னுடைய முதல் மகள் பிறந்த போது தான் தனக்கு அதிகாலை எழும் பழக்கம் வந்ததாக கூறியுள்ளார். தனது கணவர் ஒபாமாவின் காலை நேர பழக்கங்கள் தொடர, தான் மட்டும் அதை பின்பற்றமுடியவில்லை என்பதை உணர்ந்தார். அன்றிலிருந்து அதிகாலை எழுந்து, உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார். இது இன்று வரை தொடர்கிறது. காலை 4.30 மணிக்கு எழுந்து தனது பயிற்சிகளை முடித்துவிட்டு தன் குடும்பத்தை கவனிக்க தொடங்குகிறார் மிச்செல்.
சானியா மிர்சா:
80 வாரங்களாக ரெட்டையர் பிரிவில் பெண்களில் முதல் இடத்தை தக்கவைத்து வந்து சாதனை படைத்துள்ளார் சானியா. சானியா, விமர்சனங்களால் சோர்வடையாத ஒரு உறுதியான பெண்மணி. அவரது கடுமையான பயிற்சி மற்றும் திட்டமிட்ட நேர பழக்கங்களுக்கு உரித்தானவர். ஜிம்மிங், ஓட்டம், ஏரோபிக்ஸ், மற்றும் இதர உடற்பயிற்சிகளை இடைவிடாமல் செய்வார். இவரது நாள் காலை 6 மணிக்கு தொடங்குகிறது. ஒரு மணி நேர உடற்பயிற்சிக்கு பின் காலை டிபனை முடித்துவிட்டு சரியாக 8 மணிக்கு டென்னிஸ் கோர்டில் ஆஜராகிவிடுவார் சானியா.
ரஜினிகாந்த்:
ஸ்டைல் மற்றும் கடுமையான உழைப்பிற்கு பெயர் போன வெள்ளித்திரையின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எல்லோராலும் போற்றப்படுபவர். தனது டயட்டில் தீவிர கவனம் செலுத்தும் இவர், த்யானம் செய்வதில் வல்லவர். அதிகாலை 5 மணிக்கு எழுந்து, தினமும் ஒரு மணி நேரம் ஜாகிங் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதேபோல் மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார். மற்ற உடற்பயிற்சிகளை விட யோகா செய்வதை விரும்பும் ரஜினிகாந்த், தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் தீவிரமாக இருப்பார்.
பாபா ராம்தேவ்:
யோகா குரு பாபா ராம்தேவ் தற்போது பதஞ்சலி நிறுவனம் மூலம் தொழிலிலும் இறங்கியுள்ளார். இவர் தினமும் சுமார் 18 முதல் 20 மணி நேரம் உடற்பயிற்சி செய்வார். ஒரு நாளைக்கு 4-5 மணி நேரம் மட்டும் உறங்குகிறார் ராம்தேவ். உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, இவர் மட்டும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து யோகா செய்ய தொடங்கிவிடுவார்.
தீபா கர்மாக்கர்:
ஒலிம்பிக்குக்கு பிறகு இந்தியர்களின் மனங்களை கவர்ந்த மற்றொரு வீராங்கனை தீபா கர்மாக்கர். ஜிம்னாஸ்டிக்கில் லாவகமாக குதித்தும் மயிரிழையில் பதக்கத்தை தவறவிட்டவர். பல சவால்களை வாழ்வில் சந்தித்துள்ள தீபா, தினமும் காலை 7 மணிக்கு எழுகிறார். அதை தொடர்ந்து காலை டிபன். பின் 8.30 மணி முதல் மதியம் வரை தொடர் பயிற்சி. இடையில் 4 மணி நேர இடைவேளைக்கு பின் மீண்டும் மாலை 4.30 மணி முதல் பயிற்சியை தொடங்கி இரவு 8.30 வரை செய்கிறார்.
தீபிகா படுகோன்:
பாலிவுட் ஸ்டார், தற்போது உலக அளவில் பிரபலம், அழகு மற்றும் கட்டுக்கோப்பான உடற்கட்டுக்கு எடுத்துக்காட்டு. முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை ஆன தீபிகா, தினமும் காலை 5 மணிக்கு எழுவார். இரண்டு மணி நேர பயிற்சிக்கு பின் தனது தினத்தை தொடருவார். நடிகையாக மாறிய பின்னரும் காலை எழுந்து கொள்வது தீபிகாவுக்கு பிடித்தமான விஷயம். இருப்பினும் வேலை பளு காரணமாக இப்போதெல்லாம் காலை 7 மணிக்கு எழுகிறார். சில தினங்கள் 6 மணிக்கே எழுந்து யோகா செய்யத் தொடங்குவார். காலை பொழுதுகள் பெரும்பாலும், உடற்பயிற்சிக்கு செலவிடும் தீபிகா, யோகா, விளையாட்டு, நடைப்பயிற்சி என்று பலவிதங்களில் பயிற்சிகள் செய்கிறார்.
அமிதாப் பச்சன்:
வயதானாலும் சுறுசுறுப்புடன் தோன்றும் அமிதாப், உடல் ஆரோக்கியம் என்று வரும்போது சீறான பழக்கங்களை கொண்டுள்ளார். காலை 5 மணிக்கு தொடங்கும் இவரது நாள் ஒரு மணி நேரம் உடற்பயிற்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜிம் சென்று தினமும் காலை பயிற்சி எடுப்பார். முந்தைய இரவு எத்தனை மணிக்கு உறங்கினாலும் காலை சீக்கிரம் எழுவைதை தவறவிடமாட்டார் அமிதாப்.
சத்ய நாடெல்லா: இந்தியாவில் பிறந்த தற்போதைய மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாடெல்லா காலை எழும் பழக்கம் உள்ளவர். அதே சமயம் ஒரு நாளைக்கு 8 மணி நேர உறக்கம் வேண்டும் என்பதிலும் நம்பிக்கை உடையவர். காலை 7 மணிக்கு எழுந்தவுடன் ஓடத் தொடங்குகிறார் இவர். மைக்ரோசாப்டின் புதிய கருவியான ஹோலோ லென்ஸ் அணிந்து கொண்டு மெய்நிகரில் தனது அட்டவணையை திட்டமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதே போல் காலை பொழுதுகளில், இந்திய அமெரிக்க கவிதை தொடர்பான கோர்சுகளில் சேர்ந்து ஆன்லைனில் அதை படித்து தன் அறிவை வளர்த்து கொள்வதிலும் தவறுவதில்லை.
ஹில்லாரி க்ளிண்டன்:
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஆன ஹில்லாரி அதிகாலை 5.30 மணிக்கு எழும் பழக்கமுள்ளவர். சில தினங்கள் காலை அலாரம் அடிக்கும்போது கூடுதலாக ஒரு 5 நிமிடம் தூங்கப் பிடிக்கும் என்று கூறி இருந்தார். ஆனால் அது ஒரு சில தினங்கள் மட்டுமே என்றும் சொன்னார். யோகா, மற்றும் நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி என்று தனக்கான உடற்பயிற்சிகளை கொண்டுள்ளார் ஹில்லாரி. தற்போது தேர்தலுக்காக கடுமையாக உழைப்பதனால் தூங்கும் நேரம் குறைந்துள்ளதால், நேரம் கிடைக்கும்போது ஒரு 10 நிமிடங்கள் குட்டித்தூக்கம் போடுகிறார் ஹில்லாரி.