நிறுவன மதிப்பு ரூ.5 லட்சம் கோடி; அதன் தலைவரின் பங்கு வெறும் 0.04% - HDFC-யின் தீபக் பரேக் கதை!
தனது மாமா மிகச் சாதாரணமாக தொடங்கிய நிறுவனத்தை ரூ.5,00,000 கோடி மதிப்பில் தீபக் பரேக் மாற்றிய கதை உணர்வுபூர்வமானதும் கூட.
நாட்டின் மிகவும் மதிக்கப்படும் தொழிலதிபர்களில் ஒருவர்தான் தீபக் பரேக். இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றை முன்னெடுத்து, தோல்வியடைய முடியாத அளவுக்கு பெரிய நிறுவனமாக மாற்றிக் காட்டியுள்ளார்.
நாம் அனைவரும் அறிந்த கடன் வழங்கும் நிறுவனம்தான் அது. ஹெச்டிஎஃப்சி (HDFC) என்று நம் இல்லம்தோறும் புழங்கும் பெயரான ஹவுசிங் டெவெலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம்தான் அது. நாட்டில் இப்போது ஹெச்டிஎஃப்சி மிகப் பெரிய தனியார் வங்கியாகச் செயல்பட்டு வருகின்றது.
1977ம் ஆண்டு தீபக் பரேக்கின் மாமா ஹெச்.டி. பரேக் இந்த நிறுவனத்தை தொடங்கும்போது சாதாரண கடன் வழங்கும் நிறுவனமாகவே இருந்தது. தீபக் பரேக்கை தன் மகனாகவே பாவித்தார் மாமா ஹெச்.டி.பரேக். இதனையடுத்து, தன்னுடன் அவரையும் இணைத்துக் கொண்டார்.
தீபக் பரேக் தன் மாமாவின் நிறுவனத்தில் ஓர் ஊழியராகவே சேர்ந்தார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. ஆனால், ஊழியராகச் சேர்ந்து உரிமையாளராகி நிறுவனதை 5 லட்சம் கோடி ரூபாய் மகா நிறுவனமாக்கிய பிறகே ஓய்வு பெற்றிருக்கிறார்.

ஹெச்.டி.பரேக், HDFC நிறுவனர்
தீபக் பரேக் தொடக்கம்
தீபக் பரேக் தனது பள்ளிப் படிப்பை மும்பையில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தின் சைடன்ஹாம் கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றார். 1965ல் இங்கிலாந்து சென்றார். அங்கு பட்டயக் கணக்காளராகத் (CA) தகுதி பெற்றார்.
தீபக் பரேக் லண்டனில் உள்ள வின்னி, ஸ்மித் மற்றும் வின்னியில் பணிபுரிந்தார். இந்த நிறுவனம்தான் பிற்பாடு எர்ன்ஸ்ட் & யங் என்று அழைக்கப்பட்டது. இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கர்களின் (CAIIB) சான்றளிக்கப்பட்ட அசோசியேட் பட்டத்தையும் அவர் பெற்றார்.
கார்ப்பரேட் நிறுவனத்திலும் அவரது அனுபவம் அகண்டமானது. கிரிண்ட்லேஸ், சேஸ் மான்ஹட்டன் வங்கி போன்ற வங்கிகளில் பணியாற்றி அனுபவம் பெற்றார். ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் 1978ம் ஆண்டு சேர்ந்தார். அவர் பல தொழில் அமைப்புகள், தொழில் வாரியங்கள் மற்றும் அரசு நிபுணர்கள் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
வெறும் 0.04% பங்குதான்!
நாம் கருத்தில் கொள்ள வேண்டியதும் ஆச்சரியகரமானதும் என்னவெனில், தன் குடும்ப நிறுவனத்தில் இவரது பாத்யதை அல்லது பங்கு வெறும் 0.04% தான். 2022ல் BQ Prime-க்கு அளித்த பேட்டியில்,
அவர் ஒரு தொழில்முனைவோரைப் போலவே பணிபுரிந்தாலும், சம்பளம் பெறும் நபரின் மனநிலையுடன் எப்போதும் பணியாற்றுவதாகக் கூறினார். தனது மாமா கூட சம்பள முறையில் பணியாற்றி வாடகை வீட்டில்தான் தங்கியிருந்ததாகக் கூறினார்.

2022-ஆம் ஆண்டு நிறுவனத்தில் இவரது பங்கு சுமார் ரூ.155 கோடி. தன் பங்கு பாத்யதையை அதிகரிக்க விரும்பவில்லையா என்று நேர்காணல் செய்பவர் கேட்டபோது ‘இல்லை’ என்றார் தீபக் பரேக்.
மும்பையில் அவருக்கு உறுதுணைபுரிய அவரது மாமா விரும்பியதால் அவர் தொழிலில் சேர்ந்ததாகவும், மாமாவுக்கு குழந்தைகள் இல்லை; தன்னை அவரது சொந்த மகனாகவும் கருதியதாகவும், கூறினார் தீபக்.
ஆகவே, தனக்குக் குடும்பக் கடமை இருப்பதாக உணர்ந்து அவரது மாமாவின் அழைப்புக்கு முழு மனதுடன் உடன்பட்டார். பரேக் சேர்ந்தபோது, ஹெச்டிஎஃப்சி 65 வயதான அவரது மாமாவால் தொடங்கப்பட்டிருந்தது.
தீபக் பரேக்கிற்கு அப்போது 33 வயது. தனது பிரகாசமான மற்றும் லாபகரமான ஒரு தொழில் வாழ்க்கையை அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மாமா மட்டும் இங்கு அழைத்து அவரை பணியிலமர்த்தவில்லை எனில், தீபக் பரேக் தன் நண்பர்கள் சிலரைப்போல வெளிநாட்டில் வங்கியாளராகச் சென்றிருப்பார்.
கனவும் நனவும்
இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையின் தொடக்கத்திலேயே வீடு வாங்குவதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும் என்று தீபக் பரேக் விரும்பினார். முன்பெல்லாம் ஒருவர் வீடு கட்ட வேண்டுமெனில் வாழ்நாள் முழுக்க பணி செய்து, அதில் பணத்தைச் சேமித்து ஓய்வு பெற்ற பிறகே வீடு வாங்க முடியும். அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.

அவர் மாமாவுடன் இணைகையில் அப்போது அவர் பார்த்துக் கொண்டிருந்த வேலையின் சம்பளத்தை விட 50 சதவீதம் குறைவான சம்பளத்தில் சேர்ந்தார் தீபக். கடன் வழங்கும் திட்டத்தை விரிவு படுத்தினார். இதற்காக இவருக்கு ஆதித்யா பூரி உதவி புரிந்தார். 2020 வரை ஆதித்யா பூரி இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். இவருக்கு பரேக் பணியில் முழு சுதந்திரம் அளித்திருந்தார்.
அவரது முயற்சிக்கு இறுதியில் பலன் கிடைத்தது. 3000 நகரங்களிலும் ஊர்களிலும் சேர்த்து 6300 கிளைகளுடன் 6.8 கோடி வாடிக்கையாளர்களை வங்கி கொண்டுள்ளது. டிசம்பர் 2021-க்குள், வங்கியின் சொத்து மதிப்பு ரூ.19 லட்சம் கோடியாக அதிகரித்தது.
2021-ஆம் ஆண்டில், அவரது குடும்பத்தினர் மும்பையின் வொர்லியில் மிக அழகான கடல்காட்சி கொண்ட வீட்டை வாங்கினார்கள். அப்போது அந்த சொத்தின் விலை ரூ.50 கோடி. வீட்டின் பரப்பளவு 7,450 சதுர அடி. மனைவியின் பெயரில் முன்பதிவு செய்த இந்த வீட்டிற்கு பரேக் ரூ.1.50 கோடி கொடுத்தார்.

தெரிந்த ப்ராண்ட்; தெரியாத கதை: 4லட்சத்துக்கு வாங்கிய Bisleri இன்று ரூ.7,000 கோடி ப்ராண்ட் ஆனது எப்படி?
Edited by Induja Raghunathan