இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஆப்'களில் ‘dark pattern' பிரச்சனை- ஆய்வில் பகீர் தகவல்!
இந்த ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 53 தளங்கள்/செயலிகளில் 98% செயலிகளில் குறைந்தது ஒரு டார்க் பேட்டர்னாவது இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு செயலிக்கு சராசரியாக 2.7% டார்க் பேட்டர்ன் இருப்பது தெரியவந்துள்ளது.
பல துறைகளில் உள்ள பிரபலமான இந்திய செயலிகளில் (Apps) பெரும்பாலானவை ‘டார்க் பேட்டர்ன்’ எனப்படும் நெறிமுறையற்ற வடிவமைப்பு நடைமுறைகளைப் பயன்படுத்துகின்றன, அவை பயனர்களை ஏமாற்றி தெரியாமலேயே சில தேர்வுகளைச் செய்வதில் ஈடுபடுகின்றன, என்று ASCI (இந்திய விளம்பரத் தரநிலைகள் கவுன்சில்) அகாடமி மற்றும் பேரலலின் சமீபத்திய பகீர் அறிக்கை தெரிவித்துள்ளது.
Dark Pattern என்பது எந்தவொரு டிஜிட்டல் தளத்திலும் UI/UX (பயனர் இடைமுகம்/பயனர் அனுபவம்) தொடர்புகளைப் பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றி தெரியாமலேயே சில நடைமுறைகளில் அவர்களை ஈடுபடுத்த உருவாக்கப்பட்டதாகும். பயனர்களை தவறாக வழிநடத்த அல்லது ஏமாற்ற வடிவமைக்கப்பட்ட இது நுகர்வோர் சுதந்திரத்தைக் குலைப்பதன் மூலம் பயனாளர்களின் ஒப்புதல் இல்லாமலேயே பல வேலைகளைத் திருட்டுத் தனமாகச் செய்து விடக்கூடியது.
இம்மாதிரி பயனர்களை அவர்கள் அறியாமலேயே ஏமாற்றும் டார்க் பேட்டர்ன்கள் செய்யும் வேலைகள் சில உள்ளன. ஏதோ ஒரு அத்தியாவசிய பொருள் நாளையுடன் தீர்ந்து விடும் இப்போதே முந்துங்கள் போன்ற போலி அவசரத்தை பயனர்கள் மேல் திணித்து ஏதோ ஒன்றை வாங்கிக் குவிக்கும் முடிவை எடுக்க வைப்பது.
இரண்டாவது, ‘பாஸ்கட் ஸ்னீக்கிங்’ இது ஒரு செயலியில் பயனர்கள் தெரிவு செய்யாமலேயே செயலியிலிருந்து வெளியேறும் தருணம் கூடுதல் தயாரிப்புகள், சேவைகள், அல்லது அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளித்தல் என்று பயனர்களுக்குத் தெரியாமல் அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையை விட அதிகத் தொகையைப் பிடுங்குவது.
நிலையான பாப்-அப்கள் மற்றும் அறிவிப்புகள் மூலம் பயனர்களை ஒரு செயலைச் செய்ய நச்சரிப்பது..
குற்ற உணர்வைத் தூண்டும் வகையிலும் பயனர்களிடம் அச்சத்தைத் தூண்டும் வகையிலான வார்த்தைகள், வீடியோக்கள் உள்ளிட்டவைகளைப் பயன்படுத்தி ஒரு சேவைக்கு சந்தாவைத் தொடரவோ, சில பொருட்களை வாங்கச்செய்யவோ நச்சரிப்பது.
இடைமுகத்தின் சில பகுதிகளை முன்னிலைப்படுத்துதல் மற்றும் பிறவற்றை மறைத்தல், பயனர்களை தவறாக வழிநடத்துதல் என்று பலவித ஏமாற்று வேலைகளைச் செய்து பயனர்களைத் திசைத்திருப்புவதுதான் 'டார்க் பேட்டர்ன்' என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 53 தளங்கள்/செயலிகளில் 98% செயலிகளில் குறைந்தது ஒரு டார்க் பேட்டர்னாவது இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு செயலிக்கு சராசரியாக 2.7% டார்க் பேட்டர்ன் இருப்பது தெரியவந்துள்ளது. கேப் புக்கிங், நிதிசேவைகள் செயலியான ஃபின் டெக், கல்வித்தொழில்நுட்ப, எட்டெக் மற்றும் ஆரோக்கிய தொழில்நுட்பச் செயலிகளான ஹெல்த் டெக் செயலி உள்ளிட்ட ஒன்பது தொழில்கள் 21 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளன.
இதில் அடையாளம் காணப்பட்ட ஏமாற்று வேலைகளில் மிகவும் பிராதனமானது 79.2% ஆப்ஸில், "தனியுரிமை ஏமாற்றுதல்" மிகவும் பரவலாக இருந்ததே. அதாவது, பயனர்களின் சொந்த விவரங்களைப் பகிருமாறு செய்தல். இதனை ஏதாவது ஒரு விதத்தில் பயனர்கள் செய்யுமாறு சில வேலைகளைச் செய்துத் தூண்டுதல்.
மேலும், ஆய்வு செய்யப்பட்ட 53 செயலிகளில் 43-இல், செட்டிங்ஸ் அல்லது புரொஃபைல் பிரிவுகளில் ஏமாற்றும் வடிவங்கள் கண்டறியப்பட்டன, குறிப்பாக இதில் தரவு தனியுரிமை மற்றும் பாதுகாப்பு செட்டிங்குகளுடன் தொடர்புடையதாகவே உள்ளது.
மற்றொரு பொதுவான ஏமாற்றுத் தந்திரம் என்னவெனில், "இன்டர்ஃபேஸ் தலையீடு” என்பதாகும். இது 45.3% பயன்பாடுகளில் கண்டறியப்பட்டது. ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யுமாறு பயனர்களை நச்சரிக்கும் விதமாக பயனர்களின் இண்டர்ஃபேஸை பாதி மறைத்து ஏதாவது ஒன்றை அறிவிப்பது. ஆதாவது, இது மார்க்கெட்டிங் அப்டேட்ஸாக இருக்கலாம் அல்லது, பயனர்களின் பயன்பாட்டுப் போக்குகளைத் தடம் காணுதலுக்கான அனுமதிகோரலாக இருக்கலாம்.
இப்படியாக பல விதங்களில் பயனர்களை அவர்கள் அறியாமலேயே ஒரு செயலைச் செய்யத்தூண்டி அவர்கள் அறியாமலேயே அவர்களைச் சுரண்டும் டார்க் பேட்டர்ன்கள் ஆபத்தானவை என்கிறது அறிக்கை. இதில் பிரச்சனை என்னவென்றால் செயலியில் தங்கள் கணக்குகளை பயனர்களால் அழிக்க முடியாத சில ஆப்ஸ்களும் உள்ளன.
அதாவது, ஃபிளிப்கார்ட், அமேசான், மீஷோ மற்றும் நைகா போன்றவற்றில் உங்கள் கணக்குகளை நீக்கி விட முடியாது. Tata 1mg, Curefit, Pharm Easy, Practo மற்றும் Healthify Me ஆகிய ஐந்து ஹெல்த் டெக் பயன்பாடுகளில் நான்கு செயலிகள், பயனர்களை அவசரமாக முடிவெடுக்க நேர அடிப்படையிலான அழுத்தத்தைக் கொடுக்கும் டார்க் பேட்டர்னைக் கொண்டுள்ளன.
மோசடி கடன் ஆப்'களை தடுக்க அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கடன் செயலிகளின் பொது களஞ்சியம் - அறிமுகம் செய்யும் ஆர்பிஐ!