25 ஆண்டுகள்; 75,000 வழக்குகள்: இவரே ‘இந்தியாவின் முதல் லேடி ஜேம்ஸ் பாண்ட்’
துப்பறியும் நபர் என்றாலே ஒல்லியான தேகம், டாப் டூ பாட்டம் கருப்பு உடை, கையில் பூதக்கண்ணாடி கூடிய மனித உருவமே அனிச்சையாய் கண்முன் தோன்றும். ஏனெனில், ஒரு பெண் துப்பறிவாளரை திரைப்படங்களில் நாம் பார்த்து வளர்ந்ததில்லை. அந்த ஸ்டீரியோடைப்பை உடைத்துள்ளார் இந்திய பெண் ஒருவர். யார் அவர்?
துப்பறியும் நபர் என்றாலே ஒல்லியான தேகம், உயரமான உடல், டாப் டூ பாட்டம் கருப்பு உடை, கையில் பூதக்கண்ணாடி கூடிய மனித உருவமே அனிச்சையாய் கண்முன் தோன்றும். அவ்வாறு எண்ணுவதில் தவறொன்றுமில்லை. ஏனெனில், ஒரு பெண் துப்பறிவாளரை திரைப்படங்களிலோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ நாம் பார்த்து வளர்ந்ததில்லை.
பல ஆண்டுக்காலமாய் ஆண்களுக்கு உரித்தான பணி என்றிருந்த துப்புறியும் தொழிலைக் கையிலெடுத்துள்ளார் இந்தியப் பெண் ஒருவர். அதுவும், 30 ஆண்டுகளுக்கு முன்பாக...
இதுவரை 80,000 வழக்குகளை கையாண்டுள்ள இவரே ’இந்தியாவின் முதல் பெண் துப்பறிவாளர்’. அவர் பெயர் ரஜனி பண்டிட்
யார் இந்த ரஜனி பண்டிட்?
மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த, 60 வயதான ரஜனி பண்டிட், சிறுவயதிலிருந்தே மர்மமான துப்பறியும் நாவல்கள் மீது காதல் கொண்டிருந்துள்ளார். அவரது தந்தை சாந்தாராம் பண்டிட், உள்ளூர் காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். மகாத்மா காந்தியின் கொலை வழக்கிலும் பணிபுரிந்துள்ளார். வீட்டுக்குள்ளே காக்கிச் சட்டையை பார்த்து வளர்ந்த ரஜனிக்கு டிடெக்டிவ் தொழில் மீது ஆர்வம் ஏற்படுவது இயல்பே.
மும்பையில் கல்லூரியில் மராத்தி இலக்கிய பட்டப் படிப்பை மேற்கொண்ட சமயத்தில் அந்த ஆர்வம் பெருக்கெடுத்துள்ளது. பட்டப்படிப்பை முடித்த அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துள்ளார். அப்போது, சகஊழியர் ஒருவர் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து தொலைந்த பணத்தை கண்டறிய ரஜனியின் உதவியை நாடியுள்ளார். அப்பணத்தை அவரது மருமகள் திருடியிருக்கலாம் என்று சந்தேகித்தார்.
ஆனால், அதற்கான எந்த ஆதாரமும் அவரது கையில் இல்லை. களத்தில் இறங்கிய ரஜனி குடும்ப உறுப்பினர்களின் நடவடிக்கைகளை தினமும் கண்காணிக்கத் தொடங்கினார். ரகசிய விசாரணையின் முடிவில், பணத்தை அவரது இளைய மகன் எடுத்திருப்பதை கண்டறிந்தார். அவ்வழக்கே கட்டணத்துடன் ரஜனி விசாரித்த முதல் வழக்கு.
ரஜனியின் திறமையை கண்டு வியந்த, நண்பர்களும் சகஊழியர்களும் அவரை துப்பறிவாளராக மாற ஊக்கப்படுத்தியுள்ளனர். சிறுவயதிலிருந்தே துப்பறிவாளர் கனவுடன் இருந்த அவருக்கு நண்பர்கள் அளித்த ஊக்கம் எக்ஸ்ட்ரா எனர்ஜியை ஏற்றியது.
ரிஸ்க் நிறைந்த பணி, பாதுகாப்பற்ற பணி, ஆண்களுக்கு உரித்தான பணி என்று அடுக்கடுக்காய் எழுந்த எதிர்ப்புகளை களைய செய்தார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு 1991ம் ஆண்டு மும்பையில் ’ரஜனி பண்டிட் டிடெக்டிவ் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 22.
25 ஆண்டுகள்... 75,000 வழக்குகள்!
கடின உழைப்பு, பொறுமை, ஆழ்ந்த அறிவு, பேரார்வம் மற்றும் ஒரு வழக்கின் சூழ்நிலைகளைப் பார்க்கும் திறன் ஆகியவை டிடெக்டிவ் பணிக்குத் தேவையான திறன். அது ரஜனியிடம் அளவற்றிருந்தது. அதனால் தான்,
25 ஆண்டுகளில் வெற்றிகரமாய் 75,000 வழக்குகளை தீர்த்து துப்பறியும் தொழிலில் நிலைத்து நிற்கிறார். திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையை விசாரிப்பது, திருமணத்திற்கு புறம்பான உறவை விசாரிப்பது, காணாமல் போனவர்கள், கொலை, கொள்ளைகள், கார்ப்பரேட் உளவு, பொருளாதார குற்றங்கள், சைபர் குற்றங்கள், வங்கி மோசடிகள் மற்றும் அரசியல் வேட்பாளர்களின் பின்னணி சோதனைகள் என அவர் விசாரிக்காத வழக்குப் பிரிவுகளே இல்லை. 2019ம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலின் போது வேட்பாளர்களின் நிதிச் சோதனைகள் மற்றும் பின்னணி விசாரணைகளை நடத்த அரசியல் கட்சிகள் ரஜனியை நாடியுள்ளனர்.
ஆனால், இது அத்தனை எளிதாக நடந்திடவில்லை. ஒவ்வொரு வழக்கையும் தீர்க்க ஒரு புதிய உத்தியும், புதிய கதாபாத்திரமும் தேவைப்படுகிறது. அப்படியாக ரஜனி பணிப்பெண், பார்வையற்ற பெண், கர்ப்பிணிப் பெண் மற்றும் பல மாறுவேடங்களில் நடித்து உண்மைகளை கண்டறிந்துள்ளார்.
கொலை விசாரணைக்கான ஆதாரத்தை சேகரிப்பதே கடினமான வழக்குகளில் ஒன்று. ஒருவழக்கில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதால், பெண் ஒருவர் அவரது கணவனைக் கொல்ல ஒருவரை வேலைக்கு அமர்த்தி கொலை செய்துள்ளார். பின்னர், அவர் மீது சந்தேகம் கொண்ட மகனையும் கொலை செய்துள்ளார். அந்த பெண்ணின் காதலன் கொலையாளியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர், ஆனால், அவர் தான் கொலை செய்தார் என்பதற்கான ஆதாரங்கள் போலீசாரிடமில்லை. அந்த வழக்கை நான் தான் தீர்த்து வைத்தேன்.
கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் 6 மாதங்கள் பணிப்பெண்ணாக பணிபுரிந்தேன். அவள் நோய்வாய்ப்பட்டபோது, அவளைக் கவனித்து, அவளுடைய நம்பிக்கையை மெதுவாகப் பெற்றேன். ஆனால், ஒருமுறை, நிசப்தமான சூழலில் எனது ரெக்கார்டர் கிளிக் என்று ஒலி எழுப்பியதில் அவள் என்னை சந்தேகிக்க ஆரம்பித்தாள். என்னை வெளியே செல்லவே அவள் அனுமதிக்கவில்லை.
”ஒரு நாள், அவள் காசுக்கொடுத்து கொலை செய்ய ஏவிய கொலைக்காரன், அவளைப் பார்க்க வந்தான். அப்போதுதான் இது என்னுடைய வாய்ப்பு என்று அறிந்து என் கால்களை கத்தியால் அறுத்து, கட்டு போட வெளியே செல்ல வேண்டும் என்று கூறி வெளியே ஓடினேன். போன் பூத்துக்குச் சென்று, போலீசை வீட்டிற்கு வரும்படி கூறினேன். அன்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்," என்று தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார் ரஜனி.
பணி மீது கொண்ட காதலால்; திருமணத்திற்கு 'நோ' சொன்ன ரஜனி
தொழில் வாழ்க்கையில் உயரங்களை அடைந்து கொண்டே சென்றாலும், அவர் ஒரு பெண் என்பதால் மட்டுமே பல நிராகரிப்புகளையும் தடைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது. ஒரு செய்தித்தாள் நிறுவனத்திடம் அவரது நிறுவனத்தை விளம்பரப்படுத்த கோரிய போது, அவரது நிறுவன விளம்பரத்தை பிரசுகரிக்க நிராகரித்தது அச்செய்தி நிறுவனம். '
அதற்கு பின்னால் இருந்த ஒரே காரணம் அவர் ஒரு பெண் என்பது மட்டுமே' என்று நினைவு கூர்ந்தார் ரஜனி. ஆனால், எந்த நிராகரிப்புகளும் அவரைக் கட்டுப்படுத்தவில்லை. பயம் என்பது அவரது அதிகாரத்திலே இல்லாத வார்த்தை. 'ஒரு துப்பறிவாளர் பிறக்கிறார், உருவாக்கப்படவில்லை...' என்பதை அவர் தீர்க்கமாக நம்பினார். பணி மீது கொண்ட தீரா காதலால் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார்.
"நான் எதற்கும் பயந்ததில்லை. நாம் அனைவரும் பயப்படுவது மரணம் ஒன்றிற்கு மட்டும். அது எப்போது வேண்டுமானாலும், எந்த வகையிலும் வரலாம். வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கும்போது மேற்கூரை கீழே விழுந்துகூட இறந்துவிடலாம். அதனால், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை," என்று தி பெட்டர் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார் ரஜனி.
அவரது 30 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டு துப்பறிவு பற்றி 'ஃபேஸ் பிஹைண்ட் ஃபேஸ்' மற்றும் 'மாயாஜல்' என்ற இரு புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது புத்தகங்கள் பல்வேறு தளங்களில் விருதுகளை வென்றுள்ளது. அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'லேடி ஜேம்ஸ் பாண்ட்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
தூர்தர்ஷன் தொலைக்காட்சி ரஜனியை பெண் சாதனையாளர் என கவுரவித்து 'ஹிர்கானி விருதை' வழங்கியுள்ளது. அவரது சந்தித்த வழக்குகள் மற்றும் வாழ்க்கையை சாராம்சமாகக் கொண்டு, த்ரிஷா நடிப்பில் 'குற்றப்பயிற்சி' என்ற தமிழ் திரைப்படமும் வெளியாகவுள்ளது.
ரஜனியின் வாழ்க்கை சமூகத்தின் கட்டுகளுக்குள் சிக்கித் தவிக்கும் அனைத்து பெண்களுக்கும் ஒரு உத்வேகம்!
தகவல் மற்றும் படங்கள் உதவி : Indiatimes
’உயிரை பணயம் வைக்கும் காட்சிகள்’ - இந்தியாவின் முதல் ஸ்டன்ட்வுமன் சனோபர்!