முதியோர்கள் நலனில் செயல்படும் சென்னை 'Geri Care' ஹெல்த்கேரில் InvAscent ரூ.110 கோடி முதலீடு!
வயதானவர்களை மையமாக கொண்ட சுகாதார நலச்சேவைகளை அளிக்கும் ஜெரி கேர் ஹெல்த் சர்வீசசில், InvAscent தனது இந்தியா லைப் சயின்சஸ் பண்ட் IV (ILSF IV), மூலம், சிறிதளவு சமபங்குகிற்கு நிகராக ரூ.110 கோடி முதலீடு செய்துள்ளது.
வயதானவர்களை மையமாகக் கொண்ட சுகாதார நலச்சேவைகளை அளிக்கும் 'ஜெரி கேர் ஹெல்த் சர்வீசசில்', சுகாதார நலன் பிரிவில் கவனம் செலுத்தி வரும் தனியார் சமபங்கு முதலீட்டு நிறுவனம் 'இன்வ் அக்சண்ட்' (InvAscent) தனது இந்தியா லைப் சயின்சஸ் பண்ட் IV (ILSF IV), மூலம், சிறிதளவு சமபங்குகிற்கு நிகராக ரூ.110 கோடி முதலீடு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் முதல் நிதிகழக முதலீடாக இது அமைகிறது.
2018ல் புகழ் பெற்ற ஜெரியாட்ரிக் மருத்துவர் டாக்டர்.லட்சுமிபதி ரமேஷால் துவக்கப்பட்ட ஜெரி கேர், பல்நோக்கு மருத்துவமனைகள், உதவி வாழ்க்கை மையங்கள், இல்ல நலன் மற்றும் கிளினிக் வாயிலாக வயதானவர்களுக்கான 360 கோணத்திலான நலச்சேவைகளை வழங்கி வருகிறது. இந்த பிரிவில் கூட்டாக 50 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்ட ஜெரி கேர், தென்னிந்தியாவில் குறிப்பாக சென்னையில் ஆயிரக்கணக்கான வயதானவர்கள் நலனுக்கான நம்பகமான பெயராக திகழ்கிறது.
ஜெரி கேர் இந்த நிதியை, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி மற்றும் கோவை உள்ளிட்ட தென்னிந்திய முக்கிய நகரங்களில் தனது சேவையை விரிவாக்கம் செய்ய பயன்படுத்திக்கொள்ள உள்ளது. சென்னை வேளச்சேரி மற்றும் பெங்களூரு அல்சூர் ஆகிய இடங்களில் நிறுவனம் தனது புதிய உதவி வாழ்க்கை மையங்களை (assisted living facilities ) திறக்க திட்டமிட்டுள்ளது.
மேலும், ஜெரியாட்ரிக் ஆன்கோலஜி, ஜெரியாட்ரிக் யூரோலாஜி, ஜெரியாட்ரிக் கார்டியாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்கும் மையங்களை, தனது வயதானவர்களுக்கான பல்நோக்கு மருத்துவமனை சங்கிலி மூலம் துவக்கவும் திட்டமிட்டுள்ளது.
“ஜெரி கேரில், எங்கள் மூத்த குடிமக்கள் சமூகத்தினர் மற்றும் குடும்பங்களுக்கு சிறந்த தரத்திலான வயோதிகர் நலனை அளிப்பதில் உறுதி கொண்டுள்ளோம். வயாதானவர்களுக்கான நலன் அளிக்கும் எங்கள் இலக்கிற்கு ஏற்ப InvAscent இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என ஜெரி கேர் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர்.லட்சுமிபதி ரமேஷ் கூறியுள்ளார்.
சுகாதார நலன் பிரிவில் InvAscent குழுவுக்கு உள்ள ஆழமான புரிதல் தங்கள் வளர்ச்சிக்கு உதவும், என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வயதானவர்கள் நலனுக்கான புதுமையான தொடர் நல முறையை உருவாக்கிய முன்னோடியாக ஜெரி கேர் விளங்கிறது. டாக்டர் ரமேஷ் மற்றும் குழுவுடன் இணைந்து செயல்படுவதில் உற்சாகம் கொள்கிறோம், என InvAscent நிர்வாக இயக்குனர் நித்யா கோவிந்த் கூறியுள்ளார்.
இந்த பரிவர்த்தனைக்காக ஜெரி கேரின் நிதி ஆலோசகரான வேதா கார்ப்பரேட் அட்வைசர்ஸ் செயல்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan