Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கால்நடைகளின் நோய்களைக் கண்டறியும் ஆப் - கிருஷ்ணகிரி குழுவினர் உருவாக்கிய KHO APP!

கால்நடைகளின் உரிமையாளர்கள்தான் அவற்றின் நடவடிக்கைகளில், உடல்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து நோய்களை புரிந்து அவற்றுக்குண்டான மருத்துவத்தைச் செய்யவேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் கோ (KHO) ஆப். இதை உருவாக்கியவர்கள் செல்வமுரளி தலைமையிலான அக்ரிசக்தி குழுவினர்.

கால்நடைகளின் நோய்களைக் கண்டறியும் ஆப் - கிருஷ்ணகிரி குழுவினர் உருவாக்கிய KHO APP!

Tuesday September 05, 2023 , 3 min Read

நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் டாக்டரிடம் செல்கிறோம். என்ன பிரச்னை என்று கூறுகிறோம். அவரும் நம்மை குணப்படுத்தும் மருந்து, மாத்திரைகளைத் தருகிறார். ஆனால், வாயில்லா ஜீவன்களான ஆடு, மாடுகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவை எப்படி தெரிவிக்கும், யாரிடம் தெரிவிக்கும் எனக் கேள்வி எழுப்புகிறார் தொழில்முனைவர் செல்வமுரளி.

அதன் உரிமையாளர்கள்தான் கால்நடைகளின் நடவடிக்கைகளில், உடல்நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை கண்டறிந்து நோய்களை புரிந்து அவற்றுக்குண்டான மருத்துவத்தைச் செய்யவேண்டும். இதற்காக உருவாக்கப்பட்டதுதான் ’கோ’ (KHO) ஆப். இதை உருவாக்கியவர்கள் செல்வமுரளி தலைமையிலான அக்ரிசக்தி குழுவினர்.

”கால்நடை வளர்ப்பவர்கள் அனுப்பும் கால்நடையின் நோய் தொடர்பான புறத்தோற்ற புகைப்படங்களின் விவரங்களை வைத்தே கால்நடைகளின் நோய்களை AI எனப்படும் மெய்நிகர் நுண்ணறிவின் உதவியுடன் கணினியின் துணை கொண்டு, என்ன நோய் எனக் கண்டறிந்து, அதற்கு என்ன முதலுதவி செய்யவேண்டும், மேற்கொண்டு என்ன மருத்துவம் செய்யவேண்டும் என்பன போன்ற அனைத்து விவரங்களையும் கால்நடை வளர்ப்போருக்கு எங்களது கோ(KHO) ஆப் சொல்லி விடும்,” என்கிறார் செல்வமுரளி.
கோ2

கோ ஆப் உருவாக்கக் காரணம் என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுரளி, விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால், கணிப்பொறி அறிவியல் பயின்றபோதும், விவசாயம் அவரை தன்னகத்தை கவர்ந்திழுத்து விட்டது. செல்வமுரளியின் தந்தை உள்பட அப்பகுதி விவசாயிகள் அனைவரும் சாகுபடி செய்த விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமல், கிடைத்த விலைக்கு விற்றுவிட்டு, விவசாயத்தை நஷ்டத்திலேயே நடத்தி வந்தனர்.

இதனால் விவசாயத்தை எப்படி லாபகரமான தொழிலாக மாற்றுவது என யோசித்த செல்வமுரளி, அதற்குத் தன் கல்வியை துணைக்கு அழைத்துக் கொண்டார். அனைத்து விவசாயிகளும் புரிந்து கொள்ளும் வகையில் 2013ஆம் ஆண்டு ’விவசாயம்’ என்ற பெயரில் ஓர் APPஐ உருவாக்கினார். இதற்கு 2015ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதும் கிடைத்துள்ளது.

இதுகுறித்து யுவர்ஸ்டோரி தமிழுக்கு தெரிவித்ததாவது,

“நான் 2010ஆம் ஆண்டு முதலே விஷூவல் மீடியா டெக்னாலஜிஸ் என்ற கணிப்பொறி நிறுவனத்தை எனது சொந்த கிராமத்திலேயே தொடங்கி நடத்தி வந்தேன். தொடக்கத்தில் கிராமத்தில் கணிப்பொறி நிறுவனமா, என முகம் சுளித்த எனது பெற்றோர் கூட பின்பு எனது முயற்சிகளையும், விவசாயம் தொடர்பான பணிகளையும் பார்த்து ஊக்குவித்தனர்.”

தொடர்ந்து, விவசாயத்துக்கான தனது APPகளுக்காக ’அக்ரி சக்தி’ என்ற கணினி நிறுவனத்தையும் தொடங்கி, அதன் மூலம் விவசாயிகளுக்கான APP-களை உற்பத்தி செய்து, அன்னை தமிழில் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக வழங்கினார் செல்வமுரளி.

”பெரும்பாலான ஆப்-கள் செய்முறை வடிவில் எளிமையாக இருப்பதால் விவசாயிகளும் அவற்றை எளிதாக புரிந்துகொண்டனர். இந்நிலையில், ஆடு, மாடு போன்ற கால்நடைகளில் ஏற்படும் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக விவசாயிகளே கால்நடைகளின் நோய்களைக் கண்டறிந்து, முதலுதவி அளிக்க Ai உதவியுடன் கோ (KHO) என்ற ஆப்பை உருவாக்கினேன்,” என்கிறார்.
கோ3

இந்த கோ (KHO) ஆப் மூலம் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அனைத்துப் பக்கங்களில் இருந்தும், தங்களின் செல்போனில் தெளிவாகத் தெரியும் விதமாக போட்டோ எடுத்து, இந்த செயலிக்கு அனுப்பினால், இந்த ஆப் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் அந்த கால்நடையின் நோயையும், அதன் தீவிரத்தையும், அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

பொதுவாக கால்நடைகளுக்கு ஏற்படும் 54 வகையான நோய்களை வெளிப்புற அறிகுறிகளாலேயே அறிந்து கொள்ள முடியும். தற்போது பீட்டா வெர்ஷனில் இருக்கும் எங்களின் KHO APP, 5 வகையான நோய்களை முழுமையாக கண்டறியும் திறன் படைத்ததாக உருவாகியுள்ளது. விரைவில் எஞ்சிய நோய்களை இந்த APP-இல் முழுமையாக பதிவேற்றி, APPஐ முழுமையாக்க இன்னும் 2 ஆண்டுகளாவது தேவைப்படும்.

கோ4

இதற்காக எங்களின் அக்ரிசக்தி குழுவினர் தொடர்ந்து பணிபுரிந்து, புதிய நோய்களின் புகைப்படங்களை பதிவேற்றி, செயலியை மேம்படுத்தி வருகின்றனர் என்கிறார்.

தற்போது ஆங்கிலம் உள்பட 8 இந்திய மொழிகளில் வெளிவரும் இந்த ஆப், விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் உற்ற நண்பனாக இருக்கும் என்றால் மிகையல்ல.

”இந்த KHO ஆப் பொதுவான கால்நடைகளின் நோய்களைக் கண்டறியவும், முதலுதவி சிகிச்சையை பரிந்துரைக்கவும் உதவும். கால்நடை மருத்துவர்கள் உடனே கிடைக்காத பட்சத்தில் இந்த செயலி மூலம் உங்கள் கால்நடைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க உதவும், இதனால் கால்நடைகளைப் பாதுகாத்து, நல்ல ஆரோக்கியமாக வளர்த்து, உற்பத்தி திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்,” என்கிறார் செல்வமுரளி.

கூகுள் பிளே ஸ்டோரில், KHO ஆப் கிடைக்கிறது. இதனை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பலனடைய வேண்டும் என செல்வமுரளி வேண்டுகோள் விடுத்தார்.

kho App

தனது குழுவினருடன் செல்வமுரளி.

கால்நடைகள் வாங்கி-விற்கும் தளம்

இதேபோல, கால்நடைகளை வாங்க, விற்க சமீபத்தில் ஓர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தின் மூலம் நல்ல தரமான கால்நடைகளை, அவற்றின் விலைகளை, எங்கு கிடைக்கும் என்பன போன்ற விவரங்களை அறிந்து கொள்ளமுடியும் எனத் தெரிவிக்கிறார்.

இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் இந்தியா வந்திருந்த கூகுள் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை, செல்வமுரளியைப் பாராட்டி, அவரது விவசாயத்தை நவீனமயமாக்கும் மற்றும் கணினிமயமாக்கும் பணிகளைப் பாராட்டி ஊக்குவித்து சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.