‘படிக்கும் போதே தொழில்முனைவு’ - ‘பயோ மீட்’ துறையில் கால்பதித்துள்ள 24 வயது சுவாதி!
சிறு வயதில் இருந்தே அப்பாவைப் பார்த்து தொழில்முனைவர் கனவை வளர்த்துக் கொண்டவர் கோவையைச் சேர்ந்த ஸ்வாதி கோபாலகிருஷ்ணன். அந்தக் கனவை 24 வயதில் சாத்தியப்படுத்தியது எப்படி?
வளர்ந்து வரும் பிள்ளைகளிடம் உங்களுடைய கனவு என்னவென்றால் டாக்டர், என்ஜினியர் என்று சொல்வார்கள். ஆனால், சிறு வயது முதலே தொழில்முனைவர் என்கிற கனவை தனக்குள் விதைத்துக்கொண்டு வளர்ந்தவர் ஸ்வாதி கோபாலகிருஷ்ணன்.
தொழில்முனைவை ஏன் ஒரு இலக்காக அமைத்துக் கொண்டார் என்பதை அறியும் ஆர்வம் உங்களைப் போலவே எங்களுக்கும் இருந்தது. அவரைத் தொடர்பு கொண்டு இளம் வயதில்
-இன் நிறுவனரானது எப்படி என்று கேட்டது யுவர் ஸ்டோரி தமிழ்.
இளம் தொழில்முனைவர் ஸ்வாதி
மகிழ்ச்சியோடு பேசத் தொடங்கினார் ஸ்வாதி, “நான் பிறந்து வளர்ந்து எல்லாமே கோயம்புத்தூரில் தான். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இளநிலை B.tech Bio technology படித்தேன். ஸ்காலர்ஷிப் உடன் வெளிநாட்டில் சென்று படிப்பதற்கான வாய்ப்பு கொரோனா காலகட்டத்தில் கிடைத்தது.
ஆனால், நானும் என்னுடைய குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அங்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும், வெளிநாட்டில் சென்று படித்தாலும் மீண்டும் இந்தியா வந்து ஒரு தொழில்முனைவராக வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாக இருந்தது. அதனால் இங்கேயே MBA Business management முதுநிலை படிப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன், இப்போது இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.

ஸ்வாதி கோபாலகிருஷ்ணன், நிறுவனர், Base'P sustainable Foods
2020ம் ஆண்டில் பி.டெக் படித்து முடித்த ஒரு நிறுவனத்தில் சில மாதங்கள் பணியாற்றினேன். அதன் பின்னர், முதுநிலை படிப்பிற்கான பணிகளைத் தொடங்கும் போது கொரோனா பரவலால் அடுத்த முயற்சி எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
எனக்கு Art & Craftல் ஆர்வம் இருந்ததால் அந்த நேரத்தில் சில்க் செட் மற்றும் க்ரோசெட் ஜூவல்லரி நகைகளை செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வந்தேன். என்னுடைய வடிவமைப்புகள் பிடித்து போய் பலரும் ஆர்டர் செய்யத் தொடங்கினார்கள். கொரோனா லாக்டவுனிற்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது பலருக்கும் என்னுடைய ஜூவல்லரி செட்களை டெலிவரி செய்யத் தொடங்கினேன். வெளிநாடுகளில் இருந்தும் கூட கேட்டு ஆர்டர்களை பெற்றிருக்கின்றனர்.
அந்த நேரத்தில் தான் என்னுடைய நண்பர் மூலமாக World Records என்கிற ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து Asian book of records நிகழ்ச்சியையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் என்னுடைய குழுவினரும் அந்த நிகழ்ச்சியில் 555 பெண் தொழில்முனைவர்களை நேர்காணல் எடுத்து அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கி, அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான பயிற்சிகளை கொடுத்து அவர்களை தயார் செய்தோம்.
அதனைத் தொடர்ந்து Nidhi Eir என்கிற இளம் தொழில்முனைவரை ஊக்குவிக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். என்னுடைய தொழில்முனைவுத் திட்டம் தேர்வு பெற்றதால் பேப்பராக மட்டுமே இருந்த என்னுடைய திட்டத்தை பொருள் உற்பத்தி என்று அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு மாதம் விகிதத்தில் ஊக்கத்தொகை கொடுத்தது.
கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அடுத்த கட்ட ஆராய்ச்சிகளுக்கான மையமாக திகழ்கிறது. அங்கு 12 மாதங்களாக என்னுடைய ஆராய்ச்சியை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறிய ஸ்வாதியிடம், அவரின் தொழில் திட்டம் குறித்து கேட்டோம்.

பயோ மீட் தயாரிப்பு ஆராய்ச்சி
நானும் என்னுடைய குடும்பத்தினரும் அனுபவித்த ஒரு விஷயத்திற்கான தீர்வாகவே என்னுடைய ஆராய்ச்சியை நான் தொடங்கினேன். நாங்கள் அசைவம் சாப்பிடும் பழக்கம் இருப்பவர்கள். கொரோனாவால் நாங்கள் பாதிக்கப்பட்ட போது ப்ரோட்டீன் உணவை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். அதனால் அடிக்கடி அசைவ உணவை உட்கொண்டதால் அப்பாவிற்கு கொழுப்புத் சத்தின் அளவு அதிகரித்துவிட்டது, எனக்கு உடல் பருமன் உள்ளிட்ட சில பிரச்னைகளும் தொடக்க நிலையில் இருந்தது.
அசைவத்தை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்திய நிலையில், அசைவத்திற்கு மாற்றாக அதிகம் ப்ரோட்டீன் இருக்கும் உணவுகள் என்ன என்று பார்த்தால் பருப்பு வகைகள் மற்றும் சோயா பீன் இன்னும் சில.
“சோயாவை அதிகம் உட்கொள்வதும் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்காது. தாவரம் சார்ந்து மீட் போன்று வேறு என்ன உணவுப் பொருள் இருக்கிறது என்று தேடத் தொடங்கி அதை ஏன் நாமே உருவாக்கக் கூடாது என்று ஆராயத் தொடங்கிய போது தான் ’பயோ மீட்’ பொருளுக்கு உணவுச் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாகவே சோயா, க்ளூட்டன் இல்லாத தாவரம் சார்ந்து மீட் பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்கிற முடிவை எடுத்தேன் என்கிறார் ஸ்வாதி.
தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தி இதனை உணவுப் பொருட்களாக கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறோம். இளம் தொழில்முனைவர்ளுக்காக தமிழக அரசின் TANSEED கொடுக்கும் நிதிஉதவியில் இருந்து ரூ.10 லட்சமும், ஐஐடி மெட்ராஸ் நடத்திய கார்பன் ஜூரோ சவாலில் என்னுடைய தொழில் திட்டம் ரூ.5 லட்சம் நிதியுதவியை பெற்றிருக்கிறேன்.
நிதி இல்லாததால் என்னுடைய ஆராய்ச்சியை மேம்படுத்துதில் சில சிக்கல் இருந்தது. மேலும், இதனை பொருளாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆராய்ச்சிக் கூட வசதி தமிழ்நாட்டில் இல்லாததால் இறுதி வடிவத்திற்கு கொண்டு வர பெங்களூரில் உள்ள ஒரு லேபை அணுகியுள்ளோம். பொருட்கள் உற்பத்தி முடிந்து பரிசோதனைகளுக்குப் பின்னர் ஜூன் மாதத்தில் மக்கள் சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன், என்கிறார் ஸ்வாதி.

பயோ மீட் என்றால் என்ன?
ஸ்டார்ச், பி ப்ரோட்டீனை மூலப் பொருட்களாக வைத்து பயோ மீட் உற்பத்தி செய்யப்படுகிறது. Base’P Sustainable foods-இன் நிறுவனராக நானும் என்னுடைய ஜூனியர் ஒருவர் இணை நிறுவனராகவும் செயல்படுகிறார். தொழில் தொடர்பான ஆலோசனைகளை என்னுடைய அப்பா மற்றும் விவசாயப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் மென்டார்களிடம் கேட்டு பெறுவேன்.
அப்பா ஒரு பட்டறை மற்றும் டெக்ஸ்டைல் மெஷினரிகளுக்கு உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையும் வைத்திருக்கிறார். அப்பா தான் என்னுடைய குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில்முனைவர்.
“ஜீரோவில் தொடங்கி தான் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்வில் முன்னேறி இருக்கிறார். அவரைப் பார்த்தே வளர்ந்த நானும் யாருடைய ஆதரவும் இன்றி சுயமாக தொழிலைத் தொடங்க வேண்டும் என்று கருதினேன். அதனால் ஆராய்ச்சியில் இருந்து நிதி பெறுவது வரை அனைத்தையும் என்னுடைய கடின உழைப்பாலேயே பெற்றேன்.”
தொழில்முனைவர் என்பதே என்னுடைய கனவாக இருந்ததால் அதிக சம்பளத்துடன் பணியாற்றும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. க்ரூப் 1 தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்திருந்தேன். பள்ளி மற்றும் கல்லூரியில் முதல் மாணவி என்பதால் வெளிநாட்டு பல்கலைக்கழகத்திலும் ஊக்கத்தொகையுடன் உயர் படிப்பை தொடரும் வாய்ப்பு கிடைத்து. ஆனால், அவற்றை எல்லாம் என் மனம் ஏற்க விரும்பவில்லை, குடும்பத்தினரும் என்னுடைய விருப்பத்திற்கு மறுப்பு தெரிவக்கவில்லை. மத்திய மாநில அரசுகளின் நிதியுதவிகள் என்னுடைய ஸ்டார்ட் அப்பிற்கு கிடைத்தால் குடும்பத்தினருக்கும் என் மீது ஒரு வித நம்பிக்கை வந்துள்ளது.
என்னுடைய திட்டம் ஒன்றிற்காக குடியரசுத் தலைவரிடமும் கூட நான் விருதைப் பெற்றிருக்கிறேன். அது ஏன் வெறும் திட்ட அளவில் இருக்கிறது, அடுத்த கட்டத்திற்கு ஏன் கொண்டு செல்ல முடியவில்லை என்று சிந்தித்த போது அதற்கான விடை தான் தொழில்முனைவர் என்பதை தெரிந்து கொண்டேன்.
“ரிஸ்க் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், அதோடு என் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால் தன்நம்பிக்கையோடு செயல்படத் தொடங்கினேன் என்று நம்பிக்கையோடு பேசும் ஸ்வாதி, ஆன்லைனில் எம்பிஏ பிஸினஸ் மேனேஜ்மென்ட்டும் படித்துக் கொண்டிருக்கிறார்.”

Base ‘P sustainable foods சிறப்பு என்ன?
Base ‘P sustainable foods சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உணவுப்பொருள். இதை பயன்படுத்துவதன் மூலம் தண்ணீர் மற்றும் கார்பன் டைஆக்சைடு பயன்பாடு குறையும். ஒரு கிலோ சிக்கன் கிடைப்பதற்கு 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவு செய்யவேண்டும், அதேசமயம் பயோ மீட் பயன்படுத்துவதனால் அதில் 98% நீரை சேமிக்க முடியும். இதே போலத் தான் மற்ற அம்சங்களும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு தருபவை.
மேலும், அசைவ உணவுகளில் இருப்பதைப் போல கொழுப்புச் சத்து, ஹார்மோன்கள், கூடுதல் சேர்ப்பான்கள் போன்ற எதுவுமே இருக்காது என்பதால் எங்களுடைய பயோ மீட்டை எந்த வயதில் இருப்பவர்களும் சாப்பிடலாம். மீட் சாப்பிடும் ஆசை இருந்தால் சில வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதை தவிர்ப்பதுண்டு, அவர்களும் இந்த பயோ மீட்டை சாப்பிடலாம், எந்த பாதிப்பும் அவர்களுக்கு இருக்காது. இதே போன்று VEGAN மக்களும் இதனை தாராளமாக பயன்படுத்தலாம் என்று தனது பொருளின் சிறப்புகளை பட்டியலிடுகிறார்.
இந்த ஆண்டிற்குள் எங்களுடைய ’பயோ மீட்’ பொருட்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முதலில் Business to Business முறையில் ஹோட்டல்களுடன் இணைந்து செயல்பட உள்ளன. பயோ மீட்டுக்கு நல்ல தேவை இருப்பதனால் இந்திய உணவுச் சந்தையே மிகப்பெரிய சந்தை தான், இந்தியா முழுவதிற்கும் எங்களுடைய பொருட்களை விற்பனை செய்ய திட்டம் வைத்திருக்கிறோம்.
இது தவிர மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்திருக்கின்றன. பெரும்பாலும் இது போன்று பயோ மீட் தயாரிக்கும் நிறுவனங்கள் வட இந்தியாவிலேயே இருக்கின்றனர், தென் இந்தியாவைப் பொறுத்த வரையில் பயோ மீட் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் விழிப்புணர்வை ஏற்படுத்திய பிறகு நேரடியாக மக்கள் சந்தைக்கு வரலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்.
அசைவ உணவின் விலையையே இதற்கும் விலையாக நிர்ணயம் செய்திருக்கிறோம். சொல்லப்போனால் அதைவிட குறைவாகக் கூட இருக்கலாம். விலை அதிகமாக இருந்தால் உயர் வர்க்கத்தினர் மட்டுமே பயன்படுத்த முடியும். அதனால், அப்படி இல்லாமல் சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையிலேயே விலையானது நிர்ணயம் செய்ய வீகன் கீமா, வீகன் கோலா பால்ஸ், வீகன் சுக்கா, வீகன் ப்ரைஸ், வீகன் நக்கெட்ஸ் என 5 வகையில் பொருட்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.
சந்தையில் பொருட்களை அறிமுகம் செய்வதற்கான நிதியுதவி கிடைத்துவிட்ட நிலையில், அடுத்தகட்டமாக தொழில் விரிவாக்கத்தின் போது வென்சர் கேபிடல், அல்லது ஏஞ்சல் பண்டிங் நாடலாம் என்றும் திட்டம் வைத்திருக்கிறோம்.
தொழில்முனைவில் சந்தித்த சவால்கள்
என் குடும்பத்தினரைத் தவிர என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவருமே தொழில்முனைவர் ஆவதெல்லாம் தேவையில்லாத வேலை என்றனர். நல்ல மதிப்பெண் எடுத்ததால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் நான் பயோடெக்னாலஜி தான் படிப்பேன் என்றதால் பெற்றோர் கட்டாயப்படுத்தவில்லை.
அதே போல, பெண் பிள்ளையை ஏன் படிக்க வைக்கிறீர்கள், திருமணம் செய்து கொடுக்கவில்லையா என்றெல்லாம் கூட பலரும் கேட்டிருக்கின்றனர். எனினும் என்னுடைய பெற்றோர் அவற்றை எல்லாம் புறந்தள்ளி எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து கொண்டிருக்கின்றனர்.
“அவள் திறமையின் மீது நம்பிக்கை இருக்கிறது, அவள் சாதிப்பாள் என்பதையே பதிலாக மற்றவர்களுக்குத் தந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை மற்றும் ஊக்கத்தினாலேயே என்னால் தொழில்முனைவராக முடிந்திருக்கிறது,” என்று பெருமையோடு சொல்கிறார் ஸ்வாதி.

9 டூ 5 வேலையில் மாதம் ஒரு லட்சம் சம்பளம் வாங்கி இருக்கலாம் என்று என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் இப்போது சம்பாதிக்காவிட்டாலும் என்னுடைய கடின உழைப்பால் மற்றவர்கள் ஓராண்டில் பெறக்கூடிய சம்பளத்தை ஒரே மாதத்தில் என்னால் என்னுடைய தொழிலில் சம்பாதித்து விட முடியு,ம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
30 வயதிற்குள் ரிஸ்க் எடுத்தால் தான் பெட்டர், எனக்கு 24 வயது தான் என்பதால் யோசிக்காமல் இளம் தொழில்முனைவராக களம் இறங்கி விட்டேன், என்றார் சுவாதி.
ஒரு தொழில்முனைவராவதற்கு முதலில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருக்க வேண்டும், நம்மால் இந்த சமூகத்தில் ஒரு சின்ன மாற்றத்தை கொண்டு வருவதற்கான change makerஆக இருக்க முடியுமா என்றால் நிச்சயமாக தொழில்முனைவராகலாம். இதுவே நான் நம்பும் கொள்கை என்கிறார் இளம் தொழில்முனைவர் ஸ்வாதி.
பயோ மீட் துறையில் 10 ஆண்டுகளில் ரூ.100 கோடி பணப்பரிவர்த்தனை என்பதை இலக்காக நிர்ணயித்து இருக்கிறோம். தொழிலில் லாபம் சம்பாதிப்பது முக்கியம் தான் ஆனால் என்னுடைய உருவாக்கம் எப்படியான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது என்பதையே முக்கியமானதாக நான் பார்க்கிறேன்.
அதோடு, என்னைச் சுற்றி இருக்கும் 4 பேருக்காவது என்னால் வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்தால் முழு திருப்தி கிடைக்கும் என்று தன்னுடைய பேச்சாலும், திறமையாலும் அசர வைக்கிறார் ஸ்வாதி கோபாலகிருஷ்ணன்.

சைவ இறைச்சி தெரியுமா? தாவரத்தில் இருந்து ‘க்ரீன் மீட்’ தயாரிக்கும் கேரள ஸ்டார்ட்-அப்!