‘சொந்தப் பணத்தில் 3 லட்சம் பேருக்கு அன்னதானம்’ - 23 ஆண்டுகள் சேவையில் கோவை 'பிரியாணி பாய்’
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அகிலம் முழுவதும் இந்த அன்னதான அறபணியை ஆயிரக்கணக்கான டிரஸ்ட்கள் செய்து வந்தாலும், யாரிடமும் 1 ரூபாய் கூட பெறாமல் தன் சொந்தப் பணத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வட மாநில தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் என சுமார் 3 லட்சம் பேருக்கு உணவளித்துள்ளார் கோவை ரபீக்
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள். அகிலம் முழுவதும் இந்த அன்னதான அறப்பணியை ஆயிரக்கணக்கான டிரஸ்ட்கள் செய்து வருகின்றனர். ஆனாலும் யாரிடமும் ஒரு ரூபாய் கூட பெறாமல் தன் சொந்தப் பணத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வட மாநில தொழிலாளர்கள், மலைவாழ் மக்கள் என சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள் சுமார் 3 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த ரபீக்.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் பிரியாணி கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் முகம்மது ரபீக், இதுகுறித்து நம்மிடம் பகிர்ந்தார்.
எனக்கு சிறு வயதில் இருந்தே சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. நாட்டின் முன்னேற்றத்துக்கும், உயர்வுக்கும் மத நல்லிணக்கம் அவசியம் என்பதை உணர்ந்த நான், 2009ஆம் ஆண்டில் ‘பல்சமய நல்லுறவு இயக்கம்’ என்ற அமைப்பை தொடங்கினேன். இந்த அமைப்பின் மூலம் பேரிடர் காலங்களில் மக்களுக்குத் தேவையான பொருளுதவிகள், ஏழை பெண்களுக்குத் திருமண உதவிகள், ஏழை எளிய மக்களுடன் இணைந்து கிறிஸ்துமஸ், பொங்கல், தீபாவளி, ரம்ஜான் விழாக்களை கொண்டாடுதல் என பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தோம்.
ஓகி, கஜா புயல் நேரத்தில் பாதிக்கப்பட்ட இடத்துக்கே தேடிச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கினோம். இதுபோல எங்களால் இயன்ற உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வந்தோம் என்கிறார்.
எல்லோரையும் போலத்தானே இவரும் அன்னதானம் வழங்கியிருக்கிறார் என நீங்கள் நினைத்தால் தவறு. முகம்மது ரபீக் செய்த பணிகள் அனைத்தும் அவரது சொந்தப் பணத்தில் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.
பல்வேறு பேரிடர் கால உதவிகள் மற்றும் திருமண உதவிகளை தனது பல்சமய நல்லுறவு அமைப்பில் உள்ள நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட ரபீக். கெரோனா காலத்தில் முழுக்கமுழுக்க தனது சொந்தப் பணத்தில் சுமார் 3 லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ளார் என்பதுதான் அவர் சேவையின் தனிச்சிறப்பே.
2020இல் முதல் கொரோனா அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, எங்கள் பகுதியில் இருந்த சுமார் 2 ஆயிரம் வட மாநில தொழிலாளர்கள் ஊருக்குச் செல்ல வழியின்றி, வேலையின்றி, அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டு வந்தனர். இதைப் பார்த்த காவல் துறை நண்பர்கள் அவர்களுக்கு ஏதேனும் உதவி செய்யுமாறு என்னிடம் கேட்டனர்.
“சக மனிதர்கள் பசியால் துன்புறும்போது, நாம் மட்டும் உண்பது எனக்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. இதையடுத்து நான் அவர்கள் அனைவருக்கும் 54 நாள்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கினேன்,” என்கிறார்.
இவ்வாறு ரபீக் தினசரி உணவு வழங்கிவரும் வேளையில் கடும் பண நெருக்கடி ஏற்படவே, ரபீக்கின் மனைவி தனது 107 பவுன் தங்க நகைகளை விற்று பணம் அளித்துள்ளார். அந்தப் பணத்தில் ரபீக் தனது அன்னதான பணியைத் தொடர்ந்துள்ளார்.
இதேபோல, 2021இல் இரண்டாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, நான் எனது சகோதர்களுடன் இணைந்து ஓர் திருமண மண்டபத்தை 42 நாள்களுக்கு வாடகைக்கு எடுத்து, தினசரி சுமார் 5 ஆயிரம் பேருக்கு முட்டை பிரியாணி தயாரித்து போலீஸார் உதவியுடன் வழங்கினேன்.
இதையடுத்து, இப்பகுதி மக்கள் என்னை ’பிரியாணி பாய்’ என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கிவிட்டனர். இதேபோல இலங்கை தமிழர்கள், மழைவாழ் மக்களுக்கும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளோம், என்கிறார்.
அவரவர் வழிபாட்டுத் தலத்தில் மட்டுமே தனது மதத்தை வைத்துக் கொண்டு, வெளியே தமிழனாய், இந்தியனாய் வாழ வேண்டும். அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் இணைந்து வாழ்ந்து வந்தால்தான் இந்தியா வல்லரசாக மாறும் எனக் கூறும் முகம்மது ரபீக், இந்த அன்னதானப் பணிக்கென இதுவரை யாரிடம் இருந்தும் 1 ரூபாய் கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதுமே தனது சொந்தப் பணத்தில் மட்டுமே சேவைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் ரபீக் உறுதியாக உள்ளார். இந்த இரண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மட்டும் இவர் சுமார் 3 லட்சம் பேருக்கு தனது சொந்தப் பணத்தில் உணவளித்துள்ளார்.
பல்வேறு நாளிதழ்களில் வந்த செய்திகளைப் பார்த்து பலரும் பண உதவி மற்றும் பொருளுதவி வழங்க முன்வந்தனர். ஆனால், நாங்கள் அதனை அன்பாக மறுத்துவிட்டோம். எங்கள் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அனைவருமே தங்களின் சொந்த பணத்தில் மட்டுமே சேவை புரிந்து வருகிறோம். மேலும்,
”ஓர் டிரஸ்ட் தொடங்கி, உதவிகளை விரிவுபடுத்தும் திட்டமும் உள்ளது. மக்களிடம் ஓற்றுமையை வளர்த்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோளாகும்,” என்கிறார்.
ரபீக்கின் சேவை மனப்பான்மைக்கு ஏற்றாற்போலவே அவரது குடும்பமும் அமைந்துள்ளது. இரண்டாவது ஊரடங்கின்போது, அனைவருக்கும் பிரியாணி வழங்க பணப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, அவர்களுக்கு பாத்தியப்பட்ட சொந்த வீட்டைகூட விற்று அனைவருக்கும் உணவு வழங்கச் சொல்லி, ரபீக்கின் சகோதரர்கள் மற்றும் மனைவி தெரிவித்து ரபீக்கின் அறப்பணியை ஊக்குவித்துள்ளனர்.
மேலும், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த ரபீக், இதுவரை ஓர் விருது கூட பெற்றதில்லை. அதனை அவர் எதிர்பார்த்ததும் இல்லை. ஏழை எளியவர்களுக்கு சேவை செய்வது தன் கடமை என்றே வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் ரபீக், தமிழக அரசு வழங்கி வரும் மத நல்லிணக்கத்துக்கான ‘கோட்டை அமீர்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது கூட அவருக்கு இன்ப அதிர்ச்சிதான். ஏனெனில், அவரின் சேவைப் பணிகளை போற்றி, காவல்துறை நண்பர்களோ அல்லது மாவட்ட நிர்வாகமோ தான் அவரது பெயரை இந்த விருதுக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இந்த விருதுக்கு நான் விண்ணப்பிக்கவில்லை. ஆனால், எனக்காக காவல் துறை நண்பர்கள், ஆட்சியர் மூலம் விண்ணப்பித்து, எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது. எனது சேவைப் பணியைப் பாராட்டி, எனக்கு இந்த விருதை அளித்த தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனது சமூக சேவைப் பணிகளை மேலும் உத்வேகத்துடன் செய்ய உதவி புரியும் என நம்புகிறேன்.
“நான் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் மனிதனாய் பிறந்த அனைவரும் தமது சொந்தப் பணத்தில் சக மனிதர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்,” என்கிறார்.