ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிக வருமானம் - வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவு - 'Namma Yatri' ஆட்டோ சென்னையில் அறிமுகம்!
பெங்களுரு உட்பட பல நகரங்களில் 2 லட்சம் ஆட்டோ ஓட்டுனர்களை தங்களுடன் இணைத்துக்கொண்டிருக்கும் ‘நம்ம யாத்ரி’ சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆட்டோ அக்ரிகேட்டர் நிறுவனமான ‘நம்ம யாத்ரி’ வேகமான வளர்ச்சியை அடைந்து பிரபலமான ஸ்டார்ட்-அப் ஆகும். அந்நிறுவனம் தற்போது சென்னையில் தொடங்கப்பட்டிருக்கிறது. நம்ம யாத்ரி மற்றும் ஓஎன்டிசி ஆகியவை இணைந்து இந்த செயலியை அறிமுகம் செய்திருக்கிறது.
பெங்களூரு மட்டுமல்லாமல் மைசூரு, டெல்லி, கொச்சி உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான நகரங்களில் இந்த நிறுவனம் விரிவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை ‘
' ஆப் 50 லட்சம் டவுன்லோடுகள் கண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.சென்னையில் நேற்று இந்த ஆப் அறிமுக விழா நடைப்பெற்றது.
நிறுவனத்தின் அங்கமான ‘நம்ம யாத்ரி’-யின் நிறுவனர் விமல் குமார், மற்றும் முக்கியக் குழு உறுப்பினர்கள் அண்ணா பல்கலைகழக பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் ONDC துணை தலைவர் நிதின் நாயர், போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம், அண்ணா பல்கலைகழக டீன் எல்.சுகந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு செயலியை அறிமுகம் செய்து, ‘நம்ம யாத்ரி’ உடன் இணைந்துள்ள ஆட்டோ ட்ரைவர்களை கொடியசைத்து சவாரியை தொடங்கிவைத்தார்கள்.
’நம்ம யாத்ரி’ இயங்குவது எப்படி?
உபெர், ஓலா, ராபிடோ உள்ளிட்ட பல ஆட்டோ ரைட் புக்கிங் ஆப்’கள் இருக்கும்போது, இந்த செயலி எப்படி வேறுபடுகிறது, என்று அதன் நிறுவனர் விமல் குமார் விளக்கினார்.
”நம்ம யாத்ரி செயலியில் இணையும் ஆட்டோ ஓட்டுனர்கள் அவர்கள் ஓட்டும் சவாரியில் என்ன கட்டணம் வருகிறதோ அந்த கட்டணம் முழுவதும் அவர்களுக்கே கிடைக்கும். நாங்கள் ஒவ்வொரு சவாரிக்கும் கமிஷன் வாங்குவதில்லை, அதற்கு பதில் ஒரு நாள், ஒரு மாதம் என சந்தா அடிப்படையிலான திட்டங்கள் வைத்துள்ளோம். அதுவும் குறைந்த கட்டண சந்தா மட்டுமே. அதில் தேவைக்கேற்ப ஆட்டோ டிரைவர்கள் இணைந்து கொள்ளலாம்,” என தெரிவித்தார்.
மேலும், ஆட்டோ ஓட்டுனர்களின் வருமானத்தில் கமிஷன் பிடிக்கப்படாமல் முழுத்தொகையும் அவர்களுக்கே கிடைக்கும் என்பதால் டிரைவர்கள், வாடிக்கையாளர்களுடன் பேரம் பேசமாட்டார்கள் என நிறுவனத்தின் சார்பில் நம்மிடம் தெரிவித்தார்கள்.
அதுமட்டுமின்றி, நம்ம யாத்ரி ஆப்’இல் ஒரு புக்கிங் வரும்போது ஆட்டோ ஓட்டுனர்களே கட்டணம் எவ்வளவு என்பதை அவர்களே தூரம், நேரம், டிராபிகுக்கு ஏற்றார்போல் நிர்ணயிக்கும் வசதி இருக்கிறது. வாடிக்கையாளர்களும் இதற்கு சம்மதித்து ஆட்டோ புக் செய்து கொள்ளும் வசதி என்பதால், இது மற்ற ஆப்’களை விட கேன்சலேசன் குறைவாக செயல்படும் என்றும் தெரிவித்தனர்.
”நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியும் கொடுக்கவில்லை, அதேபோல ஓட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையும் கொடுக்கவில்லை. வாடிக்கையாளர்கள் கொடுக்கும் தொகை அப்படியே ஓட்டுநர்களுக்கு கிடைக்கும், நாங்கள் எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை,” எனக் கூறினார்.
அதேபோல, ட்ராபிக் அல்லது தேவை அதிகமாக இருக்கும் சூழலில் வாடிக்கையாளர்கள் கூடுதல் டிப்ஸ் வழங்குவதற்கு ஏதுவாக டெக்னாலஜி வடிமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் டிப்ஸ்க்கு ஒப்புக்கொள்ளும் டிரைவர்கள் உடனடியாக வருவார்கள். இதனால் பேரம் பேசுவது, ஆட்டோவில் செல்லும் அனுபவத்தை சிறப்பானதாக மாற்ற முடியும் என கூறினார்.
இருந்தாலும் சில சிக்கல்கள் வரலாம். இதனை நாம் சமூகமாகதான் மாற்ற முடியும். இந்த செயலி ஆட்டோவில் செல்லும் அனுபவத்தை மாற்றும் எனக் கூறினார்.
சென்னையில் ‘நம்ம யாத்ரி’
தற்போதைக்கு சென்னையில் 10,000 ஆட்டோ ஓட்டுனர்கள் ‘நம்ம யாத்ரி’ ஆப்-இல் இணைந்திருக்கிறார்கள். இன்னும் 6 மாதத்தில் ஒரு லட்சம் ஆட்டோகள் இணையும் என்று எதிர்ப்பார்ப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த செயல்பாட்டு மாடலில், நிறுவனத்துக்கு என்ன வருமானம் என்னும் கேள்விக்கு,
“ஒரு நாளைக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சப்கிரிப்சனாக ரூ.25 மட்டும் செலுத்தினால் போதும், அதுவும் முதல் சவாரி முழுமை அடைந்த பிறகு செலுத்தினால் போதும். இல்லையெனில் ஒவ்வொரு சவாரிக்கும் ரூ.3.50 மட்டுமே செலுத்தினால் போதும். மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இந்தத் தொகை மிக மிக குறைவு என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் இந்த செயலியில் இதுவரை 2 லட்சம் டிரைவர்கள், 40 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதுவரை 2.5 கோடி பயணங்கள் நடந்ததாகவும் ரூ.360 கோடி எந்தவிதமான பிடித்தமும் இல்லாமல் ஆட்டோ டிரைவர்களுக்கு சென்றதாகவும் நிறுவனம் தெரிவித்தது.
விரைவில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தனர்.