Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தாயின் மூட்டு வலிக்கு மருந்து தேடிய அனுபவத்தால் உருவான ‘தாய்வழி இயற்கை உணவகம்’

உணவே மருந்து என எண்ணிய நிலை மாறி, ’மருந்தே உணவு’ எண்ணும் நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இத்தகைய சூழலில் கடந்த 25 வருடங்களாக தாய்வழி இயற்கை உணவகம் மூலம் மக்களுக்கு ஆரோக்கிய உணவு வழங்கி வரும் மாறன் அய்யா பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தாயின் மூட்டு வலிக்கு மருந்து தேடிய அனுபவத்தால் உருவான ‘தாய்வழி இயற்கை உணவகம்’

Thursday October 06, 2022 , 5 min Read

மனிதனின் அடிப்படை தேவைகளுள் ஒன்றான உணவு, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை எத்தனையோ மாற்றங்களைக் கண்டுள்ளது. நாம் உண்ணும் உணவே நம் உடல் நலத்தை தீர்மானிக்கின்றது.

இதை உணர்ந்ததால் தான் ’உணவே மருந்து’ என எண்ணி இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இணைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடித்து உடல் நலத்தையும், மன நலத்தையும் ஆரோக்கியமாய் வைத்து ஆனந்தமாய் வாழ்ந்தார்கள் நம் முன்னோர்கள். 

ஆனால், இன்று சத்துக்காக இல்லாமல் சுவைக்காக உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகமாய் இருக்கிறது. குளிர்சாதன பெட்டிகளில் பதப்படுத்தி அடைத்த ஆய்ந்த உணவு வகைகள், துரித உணவுகள் இன்று நம்மிடையே பழக்கத்திற்கு வந்துள்ளன.

அதனால் நோய்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. உணவே மருந்து என எண்ணிய நிலை மாறி, ’மருந்தே உணவு’ எண்ணும் நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். 

Healthy Foods

இத்தகைய சூழலில் கடந்த 25 வருடங்களாக தாய்வழி இயற்கை உணவகம் மூலம் மக்களுக்கு ஆரோக்கிய உணவு வழங்கி வரும் மாறன் அய்யா பற்றி இக்கட்டுரையில் காண்போம். 

தாய்வழி இயற்கை உணவகம் : 

25 வருடத்திற்கு முன் தனது தாயின் மூட்டு வலிக்கு மருந்து தேடி அலைந்த போது கிடைத்த அனுபவமே, இன்று சிவகாசி மக்களின் ஆரோக்கியத்தின் ஊற்றாய் உருவெடுத்திருக்கிறது ’தாய்வழி இயற்கை உணவகம்’.

மற்ற உணவகம் போல் அல்லாமல் இந்த உணவகத்திற்கு காலை 6 மணியில் இருந்தே வாடிக்கையாளர் வரத் தொடங்கி விடுகின்றனர். 

Thaai Valzhi Unavagam

மாறன், நம்மாழ்வார், மற்றும் சிற்பி

ஆறு வயது சிறுவர் முதல் அறுபது வயது மூத்தோர் வரை, நோய்யுற்றவர் முதல் உடற்பயிற்சி செய்து வரும் இளைஞர் வரை அனைவரும் சங்கமிக்கும் இடமாய் தாய்வழி உணவகம் இருக்கிறது. சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் நம்ம ஊரு டீக்கடை போன்று, ஆனால் சிறு வித்தியாசம் என்னவென்றால் இவர் தரும் நீர் ஆகாரம் முழுக்க முழுக்க ஆரோக்கியம் மிகுந்தது. 

தாய்வழி இயற்கை உணவகத்தின் சிறப்பு : 

இயற்கை உணவு என்பது ஏதோ ஒன்று தனியானது அல்ல, எல்லாம் நமக்கு தெரிந்ததே. ஆம், மூட்டு வலி என்றால் முடக்கத்தான் சூப், இரத்த சோகை என்றால் பீட்ரூட் கீர், அல்சர் என்றால் கற்றாழை ஜூஸ், மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி சூப், கண் பார்வை சரியாக கேரட் கீர், முடி கொட்டாமல் இருக்க கருவேப்பிலை கீர் , டீ, காபி- க்கு பதில் ஆவாரம் பூ, துளசி டீ என மருத்துவ குணங்கள் நிறைந்த நம் வீட்டு பாட்டி வைத்திய உணவுகளை  நல்ல சுவையுடன் வழங்குகிறார் மாறன் அய்யா. 

Herbal Drinks and Healthy Food

அதுமட்டுமின்றி, நிலக்கடலை, சுண்டல், கொள்ளு, கம்பு, வெந்தயம் என முளைகட்டிய தானியங்கள், சிறு தானிய கஞ்சி, களி வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள், என கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட இயற்கை உணவு வகைகளை குறைந்த விலையில் வழங்குகின்றனர். 

Healthy Food
பாட்டி வைத்தியம் என்றாலே வேம்பென கசப்பாய் பார்க்கும் மக்களுக்கு, நல்ல சுவையுடன் சிறிதளவும் ஆரோக்கியம் குறையாத உணவை தருகிறார் மாறன். காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணிக்குள் கிட்டத்தட்ட 400 முதல் 450 நபர் வரை வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். 

தெருவுக்கு தெரு டீ கடை இருப்பது போல், தெருவெங்கும் இவரது பாட்டி வைத்திய முறையிலான உணவகம் இருந்தால் மருத்துவமனை என்றொரு அவசியம் இருக்காது என்றே கூறலாம். 

இயற்கை உணவின் அவசியமும் & அதன் நன்மையும் : 

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 

ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 


விளக்கம்: மாறுபாடு இல்லாத (சமைக்காத) உணவை உண்டால் உடம்பில் நோய் என்பது கிடையாது. என்கிறார் திருவள்ளுவர். 


  • இந்த உலகில் மனித இனத்தைத் தவிர வேறு எந்த உயிரினமும் சமைத்து உண்பதில்லை. அதேபோல், மனித இனத்தைத் தவிர வேறு எந்த உயிரினமும் மருந்து உண்பதும் இல்லை. உணவே மருந்தாக உண்ணுகின்றன. 

  • சமைத்த உணவுகளில் உயிர் இல்லை. உணவை சமைக்கும் போது அதன் உயிர் பிரிந்து விடுகிறது. 

  • சமைத்த உணவுகளால் உடலில் உண்டாகும் கழிவுகளின் (உப்பு, சீனி, மாவுப்பொருள்) தேக்கமே நோய்.

  • சமைக்காத இயற்கை உணவாகிய பழங்கள், முளைகட்டிய தானியங்கள், பச்சை காய்கறிகள், உண்ணும் போது உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறுகிறது, உடலும், மனமும் சுத்தமாகிறது. அதுவே மருத்துவம்
Natural Foods

தாய்வழி உணவக வெற்றிக்கான காரணம் : 

இவரது தாய்வழி உணவகம் இந்த அளவிற்கு வெற்றியைக் கண்டதற்கு முக்கியக் காரணம், இவரது கடின உழைப்பே ஆகும். 

ஆரம்பத்தில் ஒற்றை மிதிவண்டியில் முளைக்கட்டிய தானியங்களை வீடு வீடாய்  கொண்டு சென்று 1 ரூபாய்க்கோ அல்லது இலவசமாய் கொடுத்து இந்த உணவின் சிறப்பை மக்களுக்கு உணரவைத்ததன் விளைவே, இன்று சிவகாசியின் முக்கிய அடையாளமாய் உருவெடுத்ததிருக்கிறது இந்த தாய்வழி இயற்கை உணவகம். 
Maaran Ayya

மாறன் அய்யா, நிறுவனர், தாய் வழி உணவகம்

அதுமட்டுமின்றி இந்த வளர்ச்சிக்கு பின்னால் மாறன் அய்யா அவர்களின் அண்ணன் சிற்பி மற்றும் உணவகத்தில் பணியாற்றும் மக்களின் அசாதாரண உழைப்பும் மிக முக்கியக் காரணம் ஆகும். 

மேலும், தம் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் நோயின்றி வாழ, நீடித்த வாழ்நாளை பெற, கடைபிடிக்க வேண்டிய உணவு முறையை பற்றியும், நமது உடலுக்கு ஏற்ற உணவு எது? ஏற்காத உணவு எது என்பதை பற்றியும் மருத்துவ ஆலோசனைகளை அன்பாய் உரைக்கிறார். 

நோயுற்றவர்கள் பலர் இவர் கூறும் உணவு முறைகளையும், வாழ்வியல் முறையையும் பின்பற்றி குணமடைந்தோர் ஏராளம்.

மாறன் ஐயாவின் காந்திய பொருளாதாரம் : 

வணிக நோக்கிற்காக ஊருக்குள் தாய்வழி உணவகம் போன்று பல கடைகள் வந்திருந்தாலும் சமூகத்தின் மீதும் மனிதர்கள் மீதும் இவர் கொண்டுள்ள அக்கறையும், பேரன்பும் அவர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது.

ஆரம்பத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து கொண்டிருந்தவர், தனது தாயின் மூட்டு வலிக்கு மருந்து தேடி அலைந்த போது கிடைத்த பாட்டி வைத்திய அனுபவம், இன்று சிவகாசியின் முக்கிய அடையாளமாய் மாறியிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் இவரது சமூக சிந்தனையும், இவர் எடுத்துக் கொண்ட காந்திய பொருளாதாரமே எனலாம். 


குறைவான விலையில் ஆரோக்கியமான உணவை வழங்குவதால் தாய்வழி இயற்கை உணவகம் ஏழைகளுக்கு ஓர் வரப்பிரசாதமாய் இருக்கிறது. 

அதுமட்டுமின்றி, நம்மாழ்வார் அய்யாவின் அறிவுரையின் படி, ’மாறா உனது இந்த தாய்வழி இயற்கை உணவகத்தை போல வீதியெங்கும் இருக்கும் டீக்கடைகளுக்கு பதில், வீதியெங்கும் இயற்கை சிற்றுண்டி உணவகங்கள் கொண்டு வர வேண்டும்,’ என்ற சொல்லுக்கு இணங்க மாதம் மாதம் இளைஞர்களுக்கு எளிய வழியில் இயற்கை உணவகம் அமைப்பது எப்படி என்பதை பற்றி பயிற்சி வகுப்பு நடத்துகிறார் மாறன் ஐயா! 

Nature Food training Class

இயற்கை உணவு பயிற்சி

இந்த பயிற்சி வகுப்பின் மூலம் தற்போது 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வணிக நோக்கமற்ற ஆரோக்கியமான இயற்கை உணவகங்கள் தோன்றியுள்ளது! 

மேலும், ஒவ்வொரு மனிதனும் முடிந்த வரை எந்தவொரு நபரையும் எந்தவொரு அரசாங்கத்தையும் சாராமல் தற்சார்புடன் இருப்பது எப்படி என்பது பற்றியும் பயிற்சிக் கொடுக்கிறார். 

தமக்கான காய்கறிகளை தாமே உற்பத்தி செய்யும் வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது பற்றியும், சுத்தமான மழைநீரை சரியாக சேகரித்து எப்படி நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவது என்பதை பற்றியும், மன அழுத்தமில்லாமல் புன்னகையுடன் வாழ உதவும் சிரிப்பு யோகா பயிற்சி முறையை பற்றியும் பயிற்சி வகுப்பு கொடுக்கிறார் மாறன் ஐயா!

மேலும், சிவகாசியில், சிவகாசி இயற்கை வாழ்வியல் சங்கம் அமைத்து, அதன் மூலம் நல்மனிதர்கள் பலரை ஒன்றிணைத்து, ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல செயல்களையும், கருத்துகளையும் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கிறார் இவர்.

Maaran Ayya

Maaran Ayya

இன்றைய இளைஞர்களுக்கு மாறன் ஐயா கூறும் அறிவுரை,

“எங்கோ இருக்கும் ஏதோவொரு கார்பரேட் நிறுவனத்திற்கு பணியாற்றுவதை காட்டிலும், உங்களது சொந்த மண்ணில் சுயமாக தற்சார்புடனும் சமூக சிந்தனையுடனும் செயலாற்ற எல்லா இளைஞர்களும் கற்றுக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு கிராமத்தையும் வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும்,” என்கிறார்.

மேலும், இன்றைய உணவு மற்றும் மருத்துவத் துறையில், வணிக நோக்கிற்காக மட்டுமே செயலாற்றுபவர்கள் ஏறலாம். எனவே, நமது ஆரோக்கியமானது அவர்களது கையை நம்பி இல்லாது, ஆரோக்கிய உணவு பற்றியும் இயற்கை மருத்துவம் பற்றியும் நம் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது மிக மிக அவசியம்.

இப்படி எந்தவொரு ஆர்பாட்டமும் இன்றி எளிமையான தோற்றம் கொண்ட மாறன் ஐயாவின் சிந்தனை பேச்சு, செயல் என அனைத்திலும் சமூக முன்னேற்றம் சார்ந்தே இருக்கிறது. உயர்வான உள்ளம் கொண்டோர் அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வர் என்பதற்கு சான்றாய் திகழ்கிறார். 

"உழை உழை ஊரின் நலன் கருதியே..! 

சுவை யென தலைமுறை அவசர உணவுகளில் ஆழ்ந்து போகவே..!! 

நல்லூழ் பொருட்டு... 

இயற்கை உணவுகளில் இருக்கும் அறுஞ்சுவையும்; 

மாறாத பாட்டி வைத்தியமும் ; தீரா நோய் தீர்க்கும்! 

ஊற்றாக 'தாய்வழி உணவகம்'

உணவே சுகமாய்..! 

எளிமை வாழ்வினில் எத்துணை இன்பம்," உடன் மாறன் ஐயா! 💫


தாய்வழி உணவகம் தொடர்புக்கு : 93674 21787