வேலை தேடி வீதிகளில் அலைந்தவர், இன்று 1000 பேருக்கு மேல் வேலை வழங்கிய அட்சயப் பாத்திரம்!
கையில் குழந்தையுடன் கணவரால் வீதியில் தள்ளப்பட்ட காரைக்குடியைச் சேர்ந்த உமையாள் இனி தன்னைப் போல் வேலை தேடி எவரும் கஷ்டப்படக்கூடாது என ஜாப் கன்சல்டன்சி நிறுவன்ம் தொடங்கினார்.
மண்ணில் விழுந்தால் மக்கிப்போய் விடுவேன் என்று நினைத்தாயா, விதையாய் வீரிட்டு எழுந்து, விருட்சமாவேன் என தன் வாழ்க்கையிடம் போட்டிபோட்டு வென்றவர்தான் உமையாள் சாத்தப்பன். வேலை தேடி வீதிவீதியாய் அலைந்து, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தும் வேலை கிடைக்காமல் துன்பத்தில் உழன்றவர், இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாங்கிக் கொடுத்து வருகிறார் என்பது அதிசயம் தானே.
வாழ்க்கை நம்மை புரட்டிப்போட்டு துவம்சம் செய்யும்போது, அதை எதிர்த்து நின்று போராடி வென்று, மற்றவர்களுக்கும் ஓர் முன்னுதாரணமாய் மாறி வாழவேண்டும் என்பதே வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்த பாடம் எனக் கூறும் உமையாள், காரைக்குடி பகுதியைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரி.
இவர் தனது வாழ்க்கையில் போராடி வென்றது குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:
காரைக்குடி பகுதியைச் சேர்ந்த எனக்கு எம்பிஏ முடித்தவுடன் சீரும்சிறப்புமாக திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் கோவையில் வசித்து வந்தேன். ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து என்ற வங்கியில் நல்ல ஊதியத்தில் வேலை என கொஞ்ச காலம் வாழ்க்கை நன்றாகத்தான் போனது. திடீரென என் வாழ்க்கையில் சூறாவளி வீசியது.
“என் கணவர் என்னை கர்ப்பிணி என்றும் பாராமல் பல்வேறு விதங்களில் அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். செய்து கொண்டிருந்த வங்கி வேலையையும் விட வேண்டிய சூழல். பிரச்னை முற்றி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு என திரும்பிய பக்கமெல்லாம் பிரச்னை. ஓர் கட்டத்தில் திக்குமுக்காடிப் போனேன்,” என்றார்.
கணவரின் ஆதரவின்மை, கையில் குழந்தை, வருமானமில்லை. வேலை தேடிச் செல்லலாம் என்றால் சான்றிதழ்கள் இல்லை என பிரச்னைகள் கடல் போல் சூழ்ந்து நிற்க தனித்தீவாக நின்றேன். வயதான என் பெற்றோருக்கு பாரமாய் இருப்பதையும் விரும்பவில்லை எனவே மீண்டும் ஓர் நல்ல வேலை தேடிக் கொள்ள விரும்பி, தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களை அணுகினேன்.
“சான்றிதழ்கள் இல்லாததால் நிறைய பணம் செலவாகும் எனக் கூறி, என்னிடம் இருந்து சுமார் ரூ. 5 லட்சம் வரை பெற்ற அவர்கள் கடைசிவரை வேலை மட்டும் வாங்கித்தரவேயில்லை.”
மாலை முதல் மறுநாள் காலை வரை கால்சென்டரில் மிகக் குறைந்த ஊதியத்தில் 12 மணி நேர வேலை. வீட்டுக்கு வந்தாலும், ஓய்வு எடுக்காமல் மீண்டும் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகங்களைத் தேடி ஓடினேன். கால்கள் வலித்தது, காசு கரைந்தது, ஆனால் நான் எதிர்பார்த்தது போல வேலை மட்டும் கிடைக்கவில்லை என மூச்சுவிடாமல் தான் பட்ட கஷ்டங்களை நம்மிடம் பகிர்ந்தார் உமையாள்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இழுபறியாக, நீதிபதியிடமே பேசி, என் கணவரிடம் இருந்து சான்றிதழ்களையாவது பெற்றுக் கொடுங்கள் எனக் கெஞ்சி, போராடி, சான்றிதழ்களை மட்டும் பெற்றேன். இனி நாம் வேலை தேடி அலைந்ததுபோல யாரும் அலையக்கூடாது என முடிவெடுத்தேன். திட்டமிட்டேன்.
“நானே சொந்தமாக ஓர் கன்சல்டன்ஸியைத் தொடங்கினேன். அன்றுமுதல் இன்றுவரை வேலைதேடி வரும் யாரிடமும் ஓர் பைசா கூட பணம் பெறாமல் வேலை வாங்கிக் கொடுத்துக் கொண்டு வருகிறேன்,” என்கிறார்.
Adwaith Ventures என்ற பெயரில் இவர் நடத்தி வரும் தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை மையத்தின் மூலம் இதுவரை சுமார் 1,300 நபர்களுக்கு மேல் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மேலும், இவரது நிறுவனத்தில் கணவரை இழந்த, கணவரால் கைவிடப்பட்ட, மாற்றுத் திறன் படைத்த பெண்களை பணிக்கு அமர்த்தி, அவர்கள் மூலம் தன்னிடம் பணி கேட்டு விண்ணப்பிப்பவர்களை ஆய்வு செய்து, நேர்காணல் நடத்தி, தேவை இருக்கும் நிறுவனங்களுக்கு பணிக்கு அனுப்புகிறார்.
இவரது ஊழியர்களான பெண்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்துக் கொண்டு, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருவது கூடுதல் சிறப்பாகும். இதற்கென இவர் தனது பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். உமையாள் தனது நிறுவனத்தின் மூலம் அனைத்து விதமான கல்வித் தகுதியுடைய, கல்வித் தகுதியற்ற அனைவருக்கும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேலை வாங்கித் தந்திருக்கிறார். குறிப்பாக இவர் பணிக்கு அனுப்பிய நபர்கள் குறித்து இதுவரை யாரும் இவரிடம் ஓர் குறைகூட சொன்னதில்லை என்பது கூடுதல் சிறப்பு.
இவ்வளவு பேருக்கு பணமே வாங்காமல் எப்படி உங்களால் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர முடிந்தது, இதனால் உங்களுக்கு என்ன லாபம்? என நாம் கேட்டபோது,
“நான் பணத்துக்காக இப்பணியைச் செய்யவில்லை. என்னைப் போல யாரும் பணத்தை இழந்து, வேலை கிடைக்காமல் அவதிப்படக் கூடாது என்பதே எனது குறிக்கோள். குறிப்பாக பெண்களுக்கு வேலை மட்டுமன்றி என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்கிறேன்.”
சில நிறுவனங்கள் என்னிடம் இத்தனை ஊழியர்கள், இந்த கல்வித் தகுதியில் தங்களுக்கு வேண்டும் என விடுக்கும் வேண்டுகோளுக்கிணங்க, நான் எனது கைவசம் உள்ள வேலை தேடுபவர்களில் இருந்து அப்பணிக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்து, அவர்களை நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தி, ஆவணங்களைச் சரி பார்த்து, பின்புலத்தை விசாரித்து, குறிப்பாக போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித குற்றப் பின்னணியும் இல்லை என நான் முழுமையாக திருப்தியடைந்த பின்னரே அவர்களை பணியில் சேர்த்துவிடுவேன்.
இதனால்தான் இதுவரை ஓர் சிறு குறை கூட யாரும் சொல்ல முடியாத அளவில் நான் எனது பணியினை மேற்கொண்டு வருகிறேன். இதற்காக நான் அந்த நிறுவனங்களிடம் இருந்து பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணம் பெற்றுக் கொள்வேன். இதனால் வேலை தேடி வருபவர்களிடம் நான் ஓர் பைசா கூட பெறுவதில்லை என்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு தனியார் வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் நடத்தி வரும் இவர், இதற்கென தனியாக ஓர் அலுவலகம் கூட அமைக்கவில்லை. தனது வீட்டின் மாடியையே அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். மேலும், இவர் தனது நிறுவனம் குறித்து இதுவரை எவ்வித விளம்பரமும் செய்ததில்லை. செவி வழிச் செய்தியாகவே இவரிடம் வேலை கேட்டு வருபவர்கள் இவரை அணுகுகின்றனர். உமையாள் தொழிலில் மிகச் சரியாக இருப்பதால் இவரைத் தேடி பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கான நபர்களைத் தேர்வு செய்து தரக் கோரி தேடி வருகின்றனர்.
நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது கூட எனக்கு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் கணவரால் பாதிக்கப்பட்ட, உடல் ஊனமுற்ற 12 பேருக்கு நான் வேலையளித்ததுதான் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது, என்கிறார்.
விரைவில் 100 பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, தன்னாலும் யார் துணையும் இன்றி தனித்து வாழ முடியும் என்ற நம்பிக்கையை மகளிர் மத்தியில் விதைக்கவேண்டும் என்பதே எனது அடுத்த குறிக்கோளாக உள்ளது என்கிறார் உமையாள்.
7 வயது மகனுடன் வசித்து வரும் இவர், சமூக மேம்பாடு மற்றும் பெண்கள் நலனுக்காக பாடுபடுவதற்காக women empowerment Award, சுயசக்தி விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்த விருதுகளைவிட பல மகளிர்களுக்கு பணி வாய்ப்பு ஏற்படுத்தித் தர முடிந்துள்ளதே என்பதே இவருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் உமையாள்.
இன்று பல நூறு பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கித் தரும் இவரால் வருங்காலத்தில் லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர சாத்தியமுள்ளது. தனி ஒருத்தியாய் நின்று தரணியில் சாதிக்கும் இவரைப் போன்ற பெண்கள்தான் எதிர்கால இந்தியப் பெண்களுக்கான விடிவெள்ளி போன்ற வழிகாட்டிகள் என்பதில் ஐயமில்லை.