பிளைவுட் தயாரிப்பின் முக்கிய மூலப்பொருள் – விவசாயிகளை ஈர்க்கும் பாப்லர் மர வளர்ப்பு!
வேகமாக வளரக்கூடிய பாப்லர் மரங்கள் பிளைவுட், பென்சில், விளையாட்டுப் பொருட்கள், தீக்குச்சிகள் என ஏராளமான பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால் உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதன் தேவை அதிகரித்துள்ளது.
மற்ற துறைகளைப் போன்றே விவசாயத் துறையிலும் எத்தனையோ மாற்றங்கள் புகுந்துவிட்டன. விவசாயிகள் நெல், சோளம், கோதுமை போன்ற பாரம்பரிய தானியங்களை மட்டுமே சார்ந்திருந்த நிலை மாறிவிட்டது.
இன்றைய காலகட்டத்தின் தேவைகளைப் புரிந்துகொண்டு விவசாயிகளும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக சந்தை தேவைக்கேற்றபடி விவசாயம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் பாப்லர் மர வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த வகை மரம் வேகமாக வளரக்கூடியது.
ஏராளமான துறைகளில் பாப்லர் மரம் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதற்கான தேவை அதிகரித்துள்ளன. இதனால் பாப்லர் மர வளர்ப்பு நல்ல லாபம் தரக்கூடிய தொழிலாக கருதப்படுகின்றன.
பாப்லர் மரத்தின் பயன்பாடுகள்
அனைத்து வகையான பிளைவுட் தயாரிப்பிற்கும் பாப்லர் மரம் பயன்படுத்தப்படுகிறது.
மரத்தினால் ஏராளமான அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் பொருட்களைத் தயாரிக்க பாப்லர் மரம் உதவுகிறது.
பென்சில், தீக்குச்சிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவை தயாரிக்கவும் பாப்லர் மரம் பயன்படுகிறது.
பாப்லர் மர வளர்ப்பு
பால்பர் மர வளர்ப்பைப் பொருத்தவரை இவற்றை வேரோடு அகற்றி மறுநடவு செய்வது மிகவும் முக்கியம். 18 முதல் 20 டிகிரி வரை இருக்கும் வெப்பநிலையில் இந்த மரங்கள் மறுநடவு செய்யப்படவேண்டும். மண் வளம் நன்றாக இருக்கவேண்டியது அவசியம். மண்ணின் pH அளவு 6-8 இருக்கவேண்டும்.
பாப்லர் மரங்களை நடுவதற்கு மழைக்காலம் ஏற்றதாக இருக்கும். இந்த பருவத்தின் ஈரப்பதம் செடியின் வளர்ச்சிக்கு உதவும். இருப்பினும், 5 டிகிரி முதல் 45 டிகிரி செல்ஷியஸ் வரையிலான தட்பவெப்ப நிலைகளில் பாப்லர் மரம் செழித்து வளரும்.
செடிகளை நடுவதற்கு முன்பு நிலத்தை குறைந்தது இரண்டு முறையாவது நன்கு உழவேண்டும். பிறகு தண்ணீர் தெளிக்கவேண்டும். இந்த நீர் வறண்டதும் இரண்டு அல்லது மூன்று முறை சுழல் கலப்பை கொண்டு உழுவது பலனளிக்கும். இப்படி செய்வதால் மறுநடவு செய்யப்படும் செடி எளிதாக வளரமுடியும்.
5-5 மீட்டர் இடைவெளியில் பாப்லர் செடிகள் நடப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் 475 செடிகள் நடமுடியும். செடிகளை நடுவதற்கு முன்பு நிலத்தில் தேவையான அளவு மாட்டு சாணத்தை இடவேண்டும். இதனால் செடிகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். வெப்பம் அதிகமிருக்கும் நாட்களில் 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும். குளிர் காலத்தில் 20 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.
கரும்பு நிலத்தின் பக்கத்தில் பாப்லர் மரங்களை நட்டால் செடிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. அதேசமயம் கோதுமை, சோளம் போன்ற பயிர்களுக்கு பக்கத்தில் நடவு செய்தால் பயிர் இழப்பு அதிகமிருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.