தீப்பெட்டிக்குள் அடங்கும் சேலை; தெலுங்கானா நெசவாளர் அசத்தல் சாதனை!
தெலுங்கானாவைச் சேர்ந்த நெசவாளர் ஒருவர் தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் மெல்லிய சேலையை நெய்து சாதனை படைத்துள்ளார்.
தெலுங்கானாவைச் சேர்ந்த நெசவாளர் ஒருவர் தீப்பெட்டிக்குள் அடங்கும் வகையில் மெல்லிய சேலையை நெய்து சாதனை படைத்துள்ளார்.
கைத்தறி புடவைகளை பாரம்பரிய நேர்த்தியுடன் கண்கவர் வேலைப்பாடுகளைச் சேர்த்து நெய்து அசத்தும் நெசவாளர்கள் பலரைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தெலுங்கானாவைச் சேர்ந்த நல்லா விஜய் என்ற நெசவாளர் தீப்பெட்டிக்குள் அடங்கும் விதமான சேலையை நெய்து சாதனை படைத்திருக்கிறார்.
யார் இந்த நல்லா விஜய்?
அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமாவின் மனைவிக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் விதமாக பட்டு சேலையை நெய்து பரிசளித்தவர் நல்லா விஜய். 2015ம் ஆண்டு டெல்லி வந்த அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா-விற்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் படியான சால்வையையும், அவர் மனைவி மிஷலுக்கு தீப்பெட்டிக்குள் அடங்கும் பட்டுச் சேலையையும் பரிசாக கொடுத்து இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இப்படித்தான் தெலுங்கானா மாநிலம் சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த பட்டுச்சேலை கைத்தறி நெசவாளரான நல்லா விஜய் புதுமைகளுக்கு பெயர் போனவர். தற்போது 2022ம் ஆண்டில் தீப்பெட்டிக்குள் அடங்கிவிடும் வகையிலான சேலை ஒன்றை நெய்து மீண்டும் சோசியல் மீடியாவின் வைரல் கன்டென்டாக மாறியுள்ளார்.
தீப்பெட்டிக்குள் சேலை; மிரள வைக்கும் சாதனை:
கைத்தறி நெசவளாரான நல்லா விஜய் எப்போதுமே தனது திறமையை நிரூபிக்கக் கூடிய விஷயங்களை செய்து வருகிறார். தற்போது, தான் நெய்த வித்தியாசமான சேலையை காட்சிப்படுத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில அமைச்சர்கள் கே.டி. ரமா ராவ், பி. சபிதா இந்திரா ரெட்டி, வி. ஸ்ரீனிவாஸ் கவுட் மற்றும் எர்ரபள்ளி தயாகர் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மிகவும் மெல்லிய சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புடவையை நல்லா விஜய், அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து நெசவாளர் நல்லா விஜய் கூறுகையில்,
“தீப்பெட்டிக்குள் அடங்கி விடும் வகையிலான இந்த சேலையை கையால் நெய்ய 6 நாட்கள் ஆனதாகவும், அதுவே தறி மூலமாக நெய்வதாக இருந்தால் 2 நாட்கள் ஆகும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
தீப்பெட்டிக்குள் அடங்கக் கூடிய சேலையா? அப்போது மிகவும் சிறியதாக தான் இருக்கும் என நினைக்காதீர்கள். இது பெண்கள் அணிந்து அழகு பார்க்க கூடிய நீளம் மற்றும் அகலத்துடன் சரியான அளவில்லது என்பது கூடுதல் தகவல்.
தொகுப்பு: கனிமொழி