Netflix-ல் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி சம்பள வேலையை உதறித் தள்ளிய சாப்ட்வேர் இன்ஜினியர்: ஏன் தெரியுமா?
அமெரிக்காவில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் நெட்ஃபிளிக்ஸில் ஆண்டுக்கு $4,50,000 டாலர்கள், அதாவது ஆண்டுக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து வந்த மூத்த மென்பொருள் பொறியாளராகப் வேலையை உதறித் தள்ளிவிட்டு வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் நெட்ஃபிளிக்ஸில் ஆண்டுக்கு $4,50,000 டாலர்கள், அதாவது 3.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து வந்த மூத்த மென்பொருள் பொறியாளராகப் வேலையை உதறித் தள்ளிவிட்டு வந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் வசித்து வரும் மைக்கேல் லின், அமேசான் நிறுவனத்தில் இருந்து வெளியேறி 2017ல் நெட்ஃபிளிக்ஸில் பணிக்குச் சேர்ந்தார். நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தில் லின் சேர்ந்த முதல் இரண்டு வருடங்கள் எல்லாம் சரியாக இருந்தது, அவருக்கு ஆண்டு சம்பளமாக 3.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால், மே 2021-ல் அவர் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். 2021ம் ஆண்டு கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த சமயத்தில் மைக்கேல் லின் இவ்வாறு செய்தது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மைக்கேல் லின் தற்போது தனது லிங்கிடுஇன் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில்,
"உங்களுக்கு மிச்சமிருப்பது வேலை மட்டுமே. எனவே உங்களுக்கு வேலை இல்லை என்றால், உங்களிடம் இருந்ததெல்லாம் காணாமல் போகும். கொரோனா சமயத்தில் இந்த உண்மை 10 மடங்கு அதிகமாக உரைத்தது. எப்போதுமே எனது வேலையை நான் ரசித்தது இல்லை,” என பதிவிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் அமேசானை விட நெட்ஃபிளிக்ஸில் வேலை பார்க்கும் சூழ்நிலை லின்னுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆனால், நாளாக நாளாக அவர் அந்த வேலையில் ஒருவித சலிப்பு ஏற்படுவதை உணர ஆரம்பித்தார்.
"அமேசானில் எல்லா விஷயங்களும் ஏதோ ரகசியம் போல் மறைக்கப்பட்டிருந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸில் ஒவ்வொரு தயாரிப்பு தொடர்பான குறிப்புகளும் அனைத்து ஊழியர்களும் படிக்கும்படி வெளிப்படையாகக் கிடைத்தது. இது எனக்கு ஏதோ எம்பிஏ படிக்க மாதத் உதவித்தொகை பெறுவது போல் இருந்தது.”
ஆனால், நெட்ஃபிளிக்ஸில் கிட்டதட்ட 5 ஆண்டுகள் பணியாற்றிய போது தினந்தோறும் ஒரே மாதிரியான வேலையை காப்பி - பேஸ்ட் போல் செய்து வருவதாக மைக்கேல் லின் உணர்ந்துள்ளார்.
"புதிய மைக்ரோ சர்வீஸை உருவாக்க வேண்டுமா? - பழையதை நகலெடுத்து ஒட்டவும், பிசினஸ் லாஜிக்கை மாற்றவும், நீங்கள் முடித்துவிட்டீர்கள். புதிய A/B சோதனை? - பழையதை நகலெடுத்து ஒட்டவும், சோதனை மாறுபாடுகளில் சிலவற்றை மாற்றவும், நீங்கள் முடித்துவிட்டீர்கள். புதிய மின்னஞ்சல் சோதனை? - பழையதை நகலெடுத்து ஒட்டவும் - உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..." எனப் பதிவிட்டுள்ளார்.
அதாவது, சீனியர் சாப்ட்வேர் இன்ஜினியரான மைக்கேல் லின் தினந்தோறும் பழைய புரோகிராம் கோடிங்கை காப்பி செய்து அதில் சில திருந்தங்களை மேற்கொண்டு, அதேமாதிரி புதிதாக ஒன்றை உருவாக்கும் வேலையை செய்து வந்ததாகக் கூறுகிறார். சாப்ட்வேர் இன்ஜினியரான அவருக்கு புதிதாக எதையும் உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை, பதிலாக பழைய விஷயங்களை எடுத்து பட்டி, டிங்கரிங் பார்க்கும் வேலையை தான் செய்து வந்துள்ளார்.
லின் திடீரென இன்ஜினிரியங்கில் இருந்து தயாரிப்பு நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இந்தத் துறையில் பணியாற்றியுள்ளார். முடிந்தவரை அது குறித்து சிறப்பாக ஆராய்ந்தார். வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு மற்றும் பலவற்றை நிர்வகிக்க உதவுவதற்காக தனது சொந்த குழுவில் ஒரு பதவியை உருவாக்க பரிந்துரைத்தார், ஆனால் அதனை நிர்வாகம் ஏற்கவில்லை.
"எனது வேலையில் நான் தோல்வியுற்றதை உணர்ந்தேன். அதிக சம்பளத்துடன் கூடிய மோசமான வேலைக்கான ஒப்பந்தமாக உணர்ந்தேன். தொழில் சம்பந்தமான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு பதிலாக, சம்பாதிக்க மட்டுமே எனது அறிவை பயன்படுத்துவதை புரிந்துகொண்டேன்.”
இதனால் லின் தனது வேலையில் கவனத்தை இழந்துள்ளார். ஒருவித மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளார். வேலையில் சரியாக கவனம் செலுத்தாவிட்டால் இதனை இழக்க நேரிடும் என மேலாளரும் அவரை எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து, ஊதிய உயர்வு மற்றும் ஆளுமை தொடர்பாக சுமார் 2 மணி நேரம் நடந்த பகுப்பாய்வு கூட்டத்தில் பங்கேற்ற லின், அன்றைய தினமே வேலையை விட்டு வெளியேறுவது என முடிவெடுத்தார். இவ்வளவு அதிக சம்பளம் தரக்கூடிய வேலையை விட்டு லின் வெளியேற நினைப்பது முட்டாள்தனமானது என அவருடைய சக ஊழியர்கள் நினைக்க ஆரம்பித்தனர். ஏன் சீனா இருந்து வந்த லின்னின் பெற்றோர்கள் கூட அவரை வேலையை தொடர்ந்து செய்யும் படி கட்டாயப்படுத்தியுள்ளனர்.
"கோவிட் நோயால் லட்சக்கணக்கான மக்கள் இறப்பதைப் பார்த்து, நாளை உறுதி இல்லை என்பதை நான் உணர்ந்தேன். உங்கள் கனவுகள் எதுவும் நனவாகும் முன்பே நீங்கள் கோவிட் நோயால் இறக்கலாம். மேலும் நீங்கள் ஒரு கனவை எவ்வளவு காலம் தள்ளிப் போடுகிறீர்களோ, அவ்வளவு பெரிய ஆபத்து அது நடக்காது. அதனால், நீங்கள் விரும்பினால், நீங்கள் இப்போதே செல்ல வேண்டும். இனி அடுத்த முறை இல்லை. இப்போது நேரம் வந்துவிட்டது..." எனத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் தனது வேலையை ராஜினாமா செய்த லின், சில மாதங்கள் நியூயார்க் நகரில் நாட்களை கழிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், உட்டா மற்றும் அரிசோனா வழியாக சாலைப் பயணம் மேற்கொண்டு, வாழ்க்கையை ரசித்து வாழ ஆரம்பித்துள்ளார்.
தகவல் உதவி - linkedin, தி எக்னாமிக் டைம்ஸ் | தமிழில் - கனிமொழி