உங்கள் பேராசைக்காக 660 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதா? - Freshworks நிறுவனத்தை சாடிய ஸ்ரீதர் வேம்பு!
பங்குதாரர்கள் பங்குகளை வாங்குவதன் மீது அதீத கவனம் செலுத்தும் பணக்கார நிறுவனம், ஊழியர்களிடமிருந்து மட்டும் விசுவாசத்தை எதிர்பார்க்கலாமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
660 ஊழியர்களை வேலையை விட்டு வீட்டுக்கு அனுப்பிய Saas நிறுவனமான Freshworks-இன் செயலை அந்த நிறுவனத்தின் பெயரைச் சொல்லாமல் ஜோஹோ கார்ப்பரேஷன் சி.இ.ஓ. ஸ்ரீதர் வேம்பு கடும் விமர்சனம் செய்துள்ளார்.
பங்குதாரர்கள் பங்குகளை வாங்குவதன் மீது அதீத கவனம் செலுத்தும் பணக்கார நிறுவனம் ஊழியர்களிடமிருந்து மட்டும் விசுவாசத்தை எதிர்பார்க்கலாமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது:
“ஒரு பில்லியன் டாலர்களை ரொக்கமாக வைத்திருக்கும் நிறுவனம், அதாவது, அதன் ஆண்டு வருவாயைக் காட்டிலும் 1.5 மடங்கு அதிகம் ரொக்கம் வைத்திருக்கும் ஒரு நிறுவனம், 20% வளர்ச்சி கண்டு வரும் அதே நிறுவனம் ரொக்க லாபம் ஈட்டி வரும் நிறுவனம் தங்களது ஊழியர்களில் 12-13% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது என்றால் அந்நிறுவனம் ஊழியர்களிடமிருந்து ஒரு போதும் விசுவாசத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதுவும் 400 மில்லியன் டாலர்களுக்கு சந்தையிலிருந்து தனது பங்குகளையே வாங்கும் நிறுவனம் ஊழியர்களை நீக்குவது வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவதாகும். நிறுவனம் தடுமாறுகிறது, வர்த்தகம் சரியில்லை, வர்த்தகச் சரிவினால் லாபம் இல்லை என்னும் போது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்நிறுவனத்தைப் பொறுத்தவரை நிலைமை அதுவல்ல. நேரடியான பேராசை என்பதைத் தவிர வேறில்லை,” என்று கடுமையாக சாடியுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு ஃபிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடாமலேயே சூசகமாக அந்நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கையை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீதர் வேம்பு கூறுவது போல், ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம் தன் பங்குகளையே சந்தையிலிருந்து மீண்டும் வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே சந்தையில் உள்ள பங்குகளின் விலையும் மதிப்பும் உயரும். இதன் மூலம் பங்குதாரர்களுக்கு இன்னும் லாபம் கிடைக்கும். எதிர்கால டிவிடெண்ட்களில் அதிக லாபம் கிடைக்கும்.
இங்குதான் ஸ்ரீதர் வேம்பு எழுப்பும் கேள்வி முக்கியமானது.
“நிறுவனத்தின் தலைமைக்கு ஒரு நெருக்கடியான கேள்வியை எழுப்புகிறேன். பங்கு மறுகொள்முதலில் முதலீடு செய்த 400 மில்லியன் டாலர்கள் தொகையை மற்றொரு வணிகத்தில் முதலீடு செய்து நீக்கப்பட்ட ஊழியர்களைத் தக்க வைத்திருக்க முடியாதா என்பதே என் கேள்வி. தொழில்நுட்பத் துறையில் இத்தகைய வாய்ப்புகள் இல்லையா என்ன? தொலைநோக்கு, கற்பனை வளம் இல்லையா உங்களிடம்? இவ்வளவு இரக்கமில்லாமலா இருப்பீர்கள்?” என்று சாடியுள்ளார்.
அமெரிக்க பெருநிறுவனங்கள் ஊழியர்களின் நல்வாழ்வை விட பங்குதாரர் மதிப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு குறித்து கவலை தெரிவித்த அவர், இந்தியாவும் அதே அணுகுமுறையை பின்பற்றும் அபாயத்தில் உள்ளது என்று எச்சரித்தார்.
“இந்த நடத்தை, துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்க கார்ப்பரேட் உலகில் இது மிகவும் பொதுவானதாகிவிட்டது, நாமும் அதே அணுகுமுறையை இந்தியாவில் இறக்குமதி செய்கிறோம். இதனால்தான் அமெரிக்காவில் ஊழியர்கள் பெருமளவில் அதிருப்தியும் வெறுப்பும் அடைகின்றனர், அதையும் நாம் இங்கு இறக்குமதி செய்து வருகிறோம். நாம் அதனால்தான் வாடிக்கையாளர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம், பங்குதாரர்கள் கடைசிபட்சம்தான்,” என்று ஸ்ரீதர் வேம்பு கடும் விமர்சனம் செய்துள்ளார்.