Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

தையல் நாயகிகளை தொழில் முனைவோராக மேம்படுத்த முனையும் ‘தோழி ஃபேஷன்’ நிறுவனர் வானதி!

தங்களது செயலி மூலம் தென் மாவட்டங்களில் தையல் கலைஞர்கள், ஃபேஷன் டிசைனர்கள், உள்ளூர் ஜவுளி விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை இணைக்கும் செயலி மூலம் பெண்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்கிறார் வானதி.

தையல் நாயகிகளை தொழில் முனைவோராக மேம்படுத்த முனையும் ‘தோழி ஃபேஷன்’ நிறுவனர் வானதி!

Tuesday March 14, 2023 , 4 min Read

பெண்களில் பலருக்கும் தையல் கலை தெரியும். ஆனால், அந்தக் கலையை தங்கள் வீட்டில் உள்ள கிழிந்த துணிகளைத் தைக்கவும், தங்கள் குடும்பத்தினர்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறார்களே தவிர, இதனை ஒரு தொழிலாக முன்னெடுக்க முன்வருவதில்லை.

இந்த நிலைக்கு மாறாக, தையல் கலை - பேஷன் டிசைனிங் இரண்டையும் இணைத்து புதிய பிசினஸ் மாடலுக்கு வித்திட்டு, இ-காமர்ஸ் மூலமாக பெண் தொழில் முனைவோர்களுக்கான ஒரு புதிய பாதையை வகுத்துள்ளார் ‘தோழில் ஃபேஷன்’ (Thozhi Fashion) வானதி அமலன்.

பொறியியல் துறையில் முதுகலை பட்டம் முடித்து, துணைப் பேராசிரியையாக 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வந்த வானதி, தங்கள் பகுதி மக்களின், அதிலும் குறிப்பாக பெண்களின் தொழில் மேம்பாட்டுக்காக தொடங்கியதுதான் ‘தோழி ஃபேஷன் ஆப்’ (THOZHI FASHION APP).

தோழி1

2021-இல் சிறந்த தொழில்முனைவோருக்கான விருது பெற்ற வானதி அமலன்.

அந்தந்த பகுதிகளில் உள்ள தையல் கலைஞர்கள், ஃபேஷன் டிசைனர்கள் மற்றும் உள்ளூர் ஜவுளி விற்பனையாளர்கள் தங்களது மாடல்கள் மற்றும் தயாரிப்புகளை இந்த செயலியில் உள்ளீடு செய்து, இதனைப் பார்த்து ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, யாருக்கு எப்பகுதியில் எந்த மாடல் உடை வேண்டுமோ, அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள குழுவினர் சென்று, அளவெடுத்து, தைத்து, உடனடியாக டெலிவரியும் செய்து வருகின்றனர். இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், இவை அனைத்தையும் செய்வது பெண்கள் குழு மட்டுமே.

“இது ஒரு குறிப்பிட்ட துறையில் பெண் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஆப்” என்கிறார் வானதி. ஆரம்பக்கட்ட நிலையில் இருக்கும் சிறந்த ஸ்டார்ட் அப்களை ஊக்குவிக்க StartupTN மூலம் அரசு வழங்குகிற ரூ.10 லட்சம் நிதி தொகையை பெறும் ரூரல் இம்பாக்ட் ஸ்டார்ட் அப்களுள் ஒன்றாகவும் இது தேர்வாகியுள்ளது.

தனது ஆப் குறித்து அவர் கூறும்போது, “எனது சொந்த ஊர் ராமேஸ்வரம். நான் படித்தது, பணிபுரிந்தது எல்லாம் ராமநாதபுரத்தில்தான். நான் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்தபோது, மாணவர்களுக்கான கேம்பஸ் இன்டர்வியூக்காக பல்வேறு கருத்தரங்களில் கலந்து கொண்டபோது எனக்கு தொழில்முனைவில் ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து, இதுதொடர்பாக நான் பல்வேறு விஷயங்களைத் தேடித்தேடி படித்தேன்.

புதிய கண்டுபிடிப்புகள், தொழில் துறை வளர்ச்சி மட்டுமே நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பதால், தொழில்முனைவோர்களை உருவாக்குவதுதான் முக்கியப் பணி என முடிவெடுத்து, நானும் எனது கணவர் அமலனும் இணைந்து AASVA Technologies India Private Limited என்ற மாணவர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் மென்பொருள் பயிற்சி நிறுவனம் ஓன்றைத் தொடங்கினோம்” என்கிறார்.

தோழி3

வானதி தனது நிறுவனத்தைத் தொடங்கிய சில மாதங்களிலேயே கொரோனா பெருந்தொற்று தொடங்கியதால், தங்களது திறன் மேம்பாடு மற்றும் மென்பொருள் பயிற்சியை ஆன்லைனில் வழங்கத் தொடங்கியுள்ளார். இவரது ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பார்த்து நிறைய கல்லூரிகள், இவரைத் தொடர்பு கொண்டு, தங்கள் மாணவர்களுக்கும் பயிற்சியளிக்க கோரியுள்ளனர். இதனால் ஏராளமான மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலவசமாக ஆன்லைனில் பயிற்சி அளித்துள்ளார்.

“பெருந்தொற்று காலத்தில் ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் முதன்முதலில் ஆன்லைனி்ல் பயிற்சிகள் அளிக்கத் தொடக்கப்புள்ளி வைத்ததே நாங்கள்தான்” என பெருமையாக தெரிவிக்கிறார் வானதி.

“இந்த நேரத்தில் நானும் நிறைய தொழில்முனைவு குறித்த ஆன்லைன் வெப்மினார்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு மேலும் எனது தொழில் தொடர்பான அறிவை பெருக்கிக் கொண்டேன். அப்போதுதான் எங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்து, மொபைல் ஆப்கள், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பில்லிங் சாப்ட்வேர் என பல்வேறு புராஜெக்ட்களை எடுத்து செய்து கொடுக்கத் தொடங்கினேன்.

தோழி

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, என் மனது ஸ்டார்ட் அப் தொடர்பாக நகரத் தொடங்கியது. அப்போது...

எங்கள் பகுதிகளிலேயே தையல் தொழில் தெரிந்த பெண்கள் தங்கள் தொழிலை எப்படி அபிவிருத்தி செய்வது, எவ்வாறு அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது எனத் தெரியாமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் தவித்து வருவதை பார்த்து, இவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றுவதற்கு ஓர் APP உருவாக்கினால் என்ன எனத் தோன்றியதன் விளைவுதான் எனது THOZHI FASHION.

இந்த ஆப் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள தையல் கலைஞர்கள் மற்றும் பேஷன் டிசைனர்களை இணைய வைத்தோம். இதன்மூலம் இவர்கள் தங்களது படைப்புகளை இதில் காட்சிப்படுத்துவார்கள். இதனைப் பார்த்து வாடிக்கையாளர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால், எங்களது தோழி குழுவினர் வாடிக்கையாளரின் வீட்டுக்கே சென்று அளவெடுத்து, பின் தைத்து, மீண்டும் வாடிக்கையாளரிடம் வழங்கி, அவர் அதனை சரிபார்த்து அவருக்கு திருப்தி ஏற்பட்டபின் தான் பணமே வாங்கிக் கொள்வோம். இதுவே எங்களின் சிறப்பம்சம்” என்கிறார் வானதி.

தோழி4

வானதியின் ‘தோழி ஃபேஷன்’ ஆன்லைன் ஆப் தற்போது ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் உள்ள தையல் கலைஞர்கள் மற்றும் பேஷன் டிசைர்களை இணைத்துள்ளது. மேலும், இது அப்பகுதியில் உள்ள பொட்டிக் ஷாப் எனப்படும் உள்ளூர் ஜவுளி விற்பனையாளர்கள் கடைகளையும் இணைக்கிறது. இதன் மூலம் பிரத்யேகமாக ஒரே நாளில் டெலிவரி வசதி உள்ளது.

“நீங்கள் ஒரே நேரத்தில் 15-க்கும் மேற்பட்ட ஆடைகளை ஆர்டர் செய்யலாம். நீங்கள் விரும்புவதை நீங்கள் தேர்வு செய்யலாம், மீதமுள்ள ஆடைகளை நீங்கள் திருப்பித் தரலாம். உடனடி பேமன்ட் வசதியுடன் செயல்படுகிறது. வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே ட்ரையல் செய்யலாம்; அது பொருத்தமாக மற்றும் பிடித்திருந்தால் அந்த உடைகளை வாங்கலாம். ஆர்டர் செய்த 2 மணி நேரத்திற்குள் உங்கள் ஆர்டரை டெலிவரி செய்கிறோம்” என்கிறார்.

தோழி5

“எங்களது செயலி மூலம் ஏராளமான தையல் கலைஞர்கள் மற்றும் துணியை அளவெடுப்பவர், உள்ளூர் ஜவுளி விற்பனையாளர்கள் மற்றும் டெலிவரி என பல பெண்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது.

வானதியின் இந்த ஆப் மூலம் ஏராளமான பெண் தையல் தொழிலாளர்கள் மற்றும் ஃபேஷன் டிசைனர்களுக்கு வெளியுலக தொடர்புகள் பெருகுவதன் மூலம் வருமானம் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு தாங்கள் விரும்பிய உடை சில மணி நேரங்களிலேயே கிடைக்கிறது. மேலும், மகளிர் தங்களை ஒரு தொழில்முனைவோராக சமுதாயத்தில் நிலை நிறுத்திக்கொள்ள முடிகிறது.

‘தோழி ஃபேஷன்’ சேவை விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு, அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களை இணைத்து ஓவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பெண் பொறுப்பாளர் தலைமையில் ஏராளமான தொழில்முனைவோர்களை உருவாக்கி, தையல் தொழிலில் மகளிர் மூலம் ஒரு புரட்சியையை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது எதிர்கால லட்சியம்” என்கிறார் வானதி.

THOZHI FASHION குறித்து +91 8072007306 என்ற எண்ணிலோ, [email protected] என்ற மின்னஞசல் முகவரியிலோ, www.thozhiindia.com என்ற இணையதள பக்கத்திலே சென்று மேலும் கூடுதல் விவரங்களை அறியலாம்.