ஒற்றைக் கையை உயர்த்தி பிடித்து விண்ணைத் தொடும் நம்பிக்கை நட்சத்திரம்!
ஹரியானாவைச் சேர்ந்த தின்கேஷ் கௌஷிக் சிறு வயதில் ஏற்பட்ட விபத்தினால் ஒரு கை, இரண்டு கால்களை இழந்தபோதும், மனம் தளர்ந்து போகாமல் ஃபிட்னெஸ் ட்ரெயினர், பஞ்சி ஜம்பிங் சாதனை என மற்றவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
தின்கேஷ் கௌஷிக் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு என்ன தெரியுமா? பட்டம் விடுவது.
2002ம் ஆண்டு ஒருநாள் வழக்கமான மாலை நேரம். தின்கேஷ் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார். பட்டம் விட்டார். உயரப் பறந்துகொண்டிருந்த இவரது பட்டம் திடீரென்று ஹை-டென்ஷன் வயரில் மாட்டிக்கொண்டது.
சிறு குழந்தைகள் பயம் அறியாது என்பது உண்மைதான். அப்போது அவருக்கு ஒன்பது வயது. மின்சாரம் பாயும் என்பது தெரியவில்லை. அவர் யோசித்ததெல்லாம் ஒன்றுதான். எப்படியாவது அந்தப் பட்டத்தை எடுத்துவிடவேண்டும்.
உடனே அதை எடுக்கப் போனார். அவ்வளவுதான். பதினோறாயிரம் வாட்ஸ் மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. தூக்கிவீசப்பட்டார்.
இந்த விபத்தில் அவர் உயிர் பிழைத்ததே மறுபிறப்பு என்று சொல்லலாம். ஆனால், இந்த அசம்பாவிதமான சம்பவத்தால் ஒரு கை, இரண்டு கால்களை இழக்க நேரிட்டது.
இடது கையையும் இரண்டு கால்களையும் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்க வேண்டியிருந்தது. உயிர் பிழைக்கவே மாட்டார் என மருத்துவர்கள் நம்பிக்கையிழந்துவிட்டனர்.
“என் பெற்றோர்தான் என்னோட மிகப்பெரிய பலம். அவங்களோட மனோதிடத்தை நினைச்சாலே ஆச்சரியமா இருக்கு. அதுதான் என்னை உயிர் பிழைக்க வெச்சுது,” என்கிறார் தின்கேஷ்.
தின்கேஷ் அன்றாட வேலைகளை தானே செய்துகொள்ளும் அளவிற்கு அவரைத் தயார்படுத்தினார்கள் அவரது பெற்றோர்.
”மூணு வருஷம் தொடர்ந்து சிகிச்சை நடந்துது. ஸ்கூலுக்கு எங்கம்மாதான் என்னைத் தூக்கிட்டு போவாங்க. ஸ்கூல்ல மத்த பசங்க எல்லாரும் ஓடி விளையாடுவாங்க. வெளியில நடப்பாங்க. ஆனா நான் மட்டும் உட்கார்ந்திருந்த இடத்திலேயே நாள் முழுசும் இருப்பேன். ஆனா எனக்கு நல்ல அப்பா, அம்மா கிடைச்ச மாதிரியே நல்ல நண்பர்களும் கிடைச்சாங்க. அவங்க என்கூட இருந்தாங்க. அதுவே சந்தோஷமா இருந்துது,” என்கிறார்.
இப்படியே ஒரே இடத்தில் இருந்து வந்த திக்னேஷ், 2012ம் ஆண்டு இருந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்ல ஆரம்பித்தார். 2012ம் ஆண்டில் அவரது பெற்றோர் அவருக்கு செயற்கைக் கால் பொருத்தினார்கள். அவ்வளவு தொகை கொடுத்து செயற்கைக் கால் வாங்கக்கூடிய நிலைமையில் அவர்கள் இல்லை. இருந்தபோதும் நிலைமையை சமாளித்து வாங்கிக் கொடுத்தனர்.
”ரொம்ப கஷ்டமான உடல் வேலைகளை எல்லாம் செய்யமுடியாது. ஆனாலும் நானே காலேஜுக்குத் தனியா போக ஆரம்பிச்சேன்,” என்கிறார்.
2015ம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தார். வேலை தேடி அலைந்தார். ஆனால், வேலை கிடைக்கவில்லை. உடல் உழைப்பு இல்லாமல் போனதால் உடல் எடை கூடியது. இதை நினைத்து கவலைப்பட்டார்.
”அப்பதான் உடம்பை ஃபிட்டா வெச்சுக்கணும்னு யோசிச்சேன். சுத்தியிருந்தவங்க நம்பிக்கை இழக்கற மாதிரியே பேசினாங்க. இடத்தை விட்டு நகராம உடம்பை எப்படி குறைக்கமுடியும்னு சொன்னாங்க. நான் அதையெல்லாம் கண்டுக்கலை. எப்படி உடற்பயிற்சி செய்யலாம்னு மட்டும்தான் யோசிச்சேன். அதுலயே முழு கவனம் செலுத்தினேன்,” என்கிறார்.
தின்கேஷ் காந்தி ஜெயந்தியின்போது இரண்டு கிலோமீட்டர் மாரத்தானில் பங்கேற்றிருந்தார். இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். செயற்கைக் கால்கள் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆதித்யா மேத்தா ஃபவுண்டேஷன் இவருக்கு செயற்கை கால்கள் வழங்கி உதவியது. இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு சேர்த்தது.
தின்கேஷ் நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி போன்றவற்றைத் தொடங்கினார். படிப்படியாக உடற்பயிற்சிகளை அதிகரித்துக் கொண்டே போனார்.
ஒரு கட்டத்தில் சைக்ளிங் போட்டியில் பாராலிம்பிக்ஸில் பங்கேற்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. ஆனால், அதற்கு அதிகம் செலவாகும் என்பதால் அந்தக் கனவு நிறைவேறாமல் போனது.
“அந்த நேரத்துலதான் புனேல இருக்கற FITTR பத்தி தெரியவந்தது. எப்படியாவது ஃபிட்னெஸ் டிரெய்னர் ஆகணும்னு முடிவு பண்ணேன். அங்க இருக்கற கோச்கிட்ட பயிற்சியை ஆரம்பிச்சேன். என்னோட நோக்கம் நிறைவேற அவங்க உறுதுணையா இருந்தாங்க,” என்கிறார்.
தின்கேஷின் முழங்காலிலும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார். அந்த நேரத்திலும் அவருக்குப் பயிற்சியளித்த பயிற்சியாளர்கள் நம்பிக்கையளித்து ஊக்குவித்துள்ளனர்.
“அவங்க கொடுத்த நம்பிக்கைதான் என்னை முடங்கிடாம தொடர வெச்சுது. FITTR ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சேலஞ்ச்ல மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு அறிமுகம் பண்ணியிருக்காங்க. அதுல கலந்துகிட்டேன், நிறைய பேர் அதுல கலந்துக்கிட்டத்தைப் பார்க்கும்போது நம்பிக்கை இன்னும் அதிகமாச்சு,” என்கிறார்.
தின்கேஷ் ICN India அத்லெட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஃபிட்னெஸில் கவனம் செலுத்தி வருகிறார்.
”ஜூன் மாசம் லடாக் போகப்போறேன். என்னோட வாழ்க்கையில கிடைச்ச அனுபவங்களை மத்த மாற்றுத்திறனாளிங்ககூட பகிர்ந்துக்கப்போறேன். ஆஸ்திரேலியால மலையேற்றம் செய்யணும்னு ஆசை இருக்கு,” என்கிறார்.
ஒரு கையை மட்டுமே கொண்டு எப்படி பயிற்சி செய்வது என தின்கேஷின் பயிற்சியாளர் கமல் ஷர்மா விளக்கியிருக்கிறார். அதுதொடர்பான வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
“எங்கம்மாதான் என்னோட முதல் இன்ஸ்பிரேஷன். அடுத்து என்னோட கோச் கமல் ஷர்மா. அவர் என் மேல வெச்ச அசைக்கமுடியாத நம்பிக்கைதான் எனக்குத் தொடர்ந்து உற்சாகம் கொடுத்துது,” என்கிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஃபிட்னெஸ் வசதிகள் அதிகம் இல்லை என்று கவலை தெரிவிக்கிறார் தின்கேஷ். இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டால் பல மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக இருக்கும் என வலியுறுத்துகிறார்.
“வீல்சேர்ல இருக்கறவங்களோ, கை, கால்கள் நீக்கப்பட்டவங்களோ பயிற்சிக்கு வர தயாரா இருந்தாலும் அவங்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்கள் முன்வரமாட்டேங்கறாங்க. அதேமாதிரி மாற்றுத்திறனாளிங்க பயிற்சி செய்யறதுக்கு ஏத்த மாதிரியான வசதிகள் ஜிம்லயும் இருக்கறதில்லை. புனேல போன மாசம் ஒரு ஜிம்முக்கு போனேன். ஆனா அவங்க என்னை உள்ள விடலை. இதுதான் நிலைமை,” என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.
நேபாலில் Canyon Swing-ல் பஞ்சி ஜம்ப் செய்த முதல் ஆசிய நபர் என்கிற சாதனையை தின்கேஷ் படைத்திருக்கிறார். அதாவது ஒரு கை, இரண்டு கால்கள் என் உடலின் மூன்று பாகங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த சாதனை படைத்த முதல் நபர் என்கிற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்ல ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஆகவேண்டும் என்கிற அவரது கனவும் நனவாகியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல மற்றவர்களுக்கும் பயிற்சியளித்து வருகிறார்.
தின்கேஷ் தனக்கு முன் தோன்றிய சிறு வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளத் தவறவில்லை.
தின்கேஷ் கோர விபத்தால் கை, கால்களை இழந்து தவித்தபோதும் நம்பிக்கை நிறைந்த பெற்றோர், அன்பான நட்புவட்டம், ஆதரவான பயிற்சியாளர் ஆகியோர் உதவியுடன் சவால்களைத் துணிந்து எதிர்கொண்டு சாதித்து வருகிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: தியா கோஷி ஜார்ஜ் | தமிழில்: ஸ்ரீவித்யா