கிராமப்புற குழந்தைகளுக்காக நூலகம் தொடங்கியுள்ள 19 வயது இளம் பெண்!
19 வயது சாடியா ஷாயிக் கிராமப்புற ஏழை மாணவர்கள் பயனடையும் வகையில் நூலகம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
19 வயது சாதியா ஷாயிக் மும்பையில் வசிக்கிறார். இவரது சொந்த ஊர் பீகாரில் உள்ள டியோரா. 2020ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு குடும்பத்துடன் டியோரா செல்லத் தீர்மானித்தார்.
டியோரா பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஜேல் பிளாக்கில் இருக்கும் சிறு கிராமம். 631 வீடுகள் கொண்ட இந்தக் கிராமத்தில் மொத்தம் 3,446 பேர் வசிக்கின்றனர். மொத்த கிராமத்தின் கல்வியறிவு 40.9 சதவீதமாக இருக்கும் நிலையில் இங்குள்ள பெண்கள் கல்வியறிவு விகிதம் வெறும் 18.6 சதவீதம் மட்டுமே.
வசதியாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றுவிட்ட நிலையில் மற்றவர்கள் அங்கேயே தங்கிவிட்டனர். சாதியா அங்கு சென்றபோது இதைக் கவனித்தார்.
நன்றாக படிக்கவேண்டும் என்பதற்காகவும் நல்ல வேலை தேடியும் சாதியாவின் குடும்பத்தினர் அவருக்கு நான்கு வயதிருக்கையில் மும்பைக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.
“ஏழ்மை நிலையில் இருக்கும் எத்தனையோ குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதைப் பார்க்கமுடிந்தது. பல குடும்பங்களில் நோட்டுப் புத்தகங்கள், புத்தகங்கள், சீருடை போன்றவற்றை வாங்க முடியாததால் பள்ளிப் படிப்பையே கைவிட்டதைப் பார்க்கமுடிந்தது,” என்கிறார் சாதியா.
சாதியா, பாந்த்ராவில் உள்ள ரிஸ்வா கல்லூரியில் சோஷியாலஜி மற்றும் ஆங்கிலம் இளங்கலை மாணவி. இவர் சிறந்த பேச்சாளர். கல்லூரிகளுக்கிடையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கல்வி உரிமை, பெண்களுக்கு சக்தியளித்தல், வேலை வாய்ப்பின்மை போன்ற பல்வேறு தலைப்புகளில் பேசியிருக்கிறார்.
இதுபோன்ற சமூகப் பிரச்சனைகள் குறித்து அவர் பேசியிருந்தபோதும் டியோராவிற்கு நேரடியாகச் சென்றிருந்தபோது அவரது பார்வை மேலும் விரிவடைந்தது. சமூகப் பிரச்சனைகளைக் கண்ணெதிரே பார்த்து உணரமுடிந்தது.
கல்வியறிவு இல்லாமை
டியாராவில் உள்ள மாணவர்கள் படிப்பை நிறுத்திக்கொண்டு நிலங்களில் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
”பல கிராமங்களில் அடுத்தடுத்த தலைமுறையினர் படிப்பைக் கைவிடவேண்டிய சூழல் இருந்ததை கவனித்தேன். இதன் காரணமாக இவர்களது சமூக-பொருளாதார நிலை மேம்படவில்லை,” என்கிறார் சாதியா.
இதுதவிர கிராமங்களில் குழந்தைத் திருமணங்களும் நடைபெற்று வந்தன. சிறுமிகளின் படிப்பு தடைபட இதுவும் முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
இதுகுறித்து சாதியா ஆய்வு செய்தார். குடும்பத்தினருடன் கலந்து பேசினார். நூலகம் ஒன்றைத் தொடங்கலாம் என்கிற யோசனையைத் தன் குடும்பத்தினரிடம் முன்வைத்துள்ளார். ஆனால், அனைவரும் இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. பலர் மறுப்பு தெரிவித்தனர். நேரம் வீணாகும் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.
சமூக மாற்றம் ஏற்படவேண்டுமானால், வரியவர்களின் நிலை மேம்பட வேண்டுமானால், சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் படித்தவர்கள் களமிறங்கி அவர்களுக்குக் கைகொடுக்கவேண்டும்,” என்று சாதியா கருதினார்.
நூலகம் அமைத்தார்
இளம் தலைமுறையினரை ஒன்றிணைப்பதே சாதியாவின் நோக்கம். இவ்வாறு செய்வதன் மூலம் அந்தந்த இடங்களின் நிலை மேம்படும் என்பது அவரது திடமான நம்பிக்கை.
அதே நம்பிக்கையுடன் சாதியா தன் குடும்பத்தினரை சம்மதிக்க வைத்தார். உறவினர் ஒருவரின் கெஸ்ட் ஹவுஸைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி பெற்றார். தனக்கு பரிசாகக் கிடைத்தத் தொகையை சேமித்து வைத்திருந்த்தால் 5,000 ரூபாய் செலவு செய்து அந்த இடத்தைப் புதுப்பித்தார்.
புதிதாக பெயிண்ட் செய்தார்; புத்தகங்களுக்கான அலமாரி பொருத்தப்பட்டு மேஜைகளும் நாற்காலிகளும் போடப்பட்டன.
மாமா அக்பர் சித்திக், உறவினர் நவாஸ் ரஹ்மான் ஆகியோர் இவரது முயற்சிக்கு உதவினார்கள். உடற்கூறுகள், போக்குவரத்து, சுதந்திரப் போராட்ட வீரர்கள் என வெவ்வேறு தலைப்புகளில் சார்ட் உருவாக்கப்பட்டு சுவர்கள் அலங்கரிக்கப்பட்டன.
இந்தியாவின் மத்திய கல்வி அமைச்சர் பெயரில் ‘மவுலானா ஆசாத் நூலகம்' என இந்த நூலகத்திற்குப் பெயரிடப்பட்டது. இங்கு நூற்றுக்கணக்கான பாடப்புத்தகங்கள் இருக்கின்றன. புதிய புத்தகங்கள் மட்டுமல்லாமல் பயன்படுத்தப்பட்ட புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. நன்கொடை பெறப்பட்டும் நிதி திரட்டப்பட்டும் இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கிராமத்தில் உள்ள மாணவர்கள் இவற்றை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கலரிங் புத்தகங்கள், காமிக்ஸ், கதை புத்தகங்கள் போன்றவை உள்ளன. இந்தி மற்றும் உருது செய்தித்தாள்களுக்கும் சாதியா சப்ஸ்கிரைப் செய்துள்ளார்.
கூடுதலாக குழந்தைகளிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வரலாறு, இலக்கியம் போன்ற மற்ற பிரிவுகளிலும் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், போட்டித் தேர்வுகளுக்கு உதவும் புத்தகங்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
தினமும் 200-க்கும் மேற்பட்டோர் இந்த நூலகத்திற்கு வந்து செல்வதாக சாதியா தெரிவிக்கிறார்.
வருங்காலத் திட்டங்கள்
கிராமப்புற குழந்தைகள் எளிதாக இணைய வசதியையும் கணிணியையும் அணுகும் வகையில் நூலகத்தில் இவற்றை ஏற்பாடு செய்ய சாதியா விரும்புகிறார்.
சாதியா மும்பை திரும்பியுள்ள நிலையில் உறவினர் மூலமாக அங்கு நடப்பவற்றைத் தொடர்ந்து தெரிந்துகொள்கிறார். குழந்தைகளுக்கு வழிகாட்ட ஒரு ஆலோசகரும் ஆசிரியரும் நூலகத்தில் இருக்கின்றனர்.
டியோராவில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறார். வரும் நாட்களில் தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அருகிலுள்ள கிராமங்களிலும் இதுபோன்ற நூலகம் திறக்க திட்டமிட்டுள்ளார்.
ஆங்கில கட்டுரையாளர்: அபூர்வா பி | தமிழில்: ஸ்ரீவித்யா