20,000 ரூபாய்க்குக் குறைவான முதலீட்டில் லாபம் தரக்கூடிய 20 சிறுதொழில்கள்!
நீங்கள் முழுநேர ஊழியராக இருந்தாலும் உங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குறைந்த முதலீட்டில் தொடங்கி வருமானம் ஈட்ட உதவும் 20 சிறுதொழில் யோசனைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
தொழில் செய்யவேண்டும் என்கிற ஆசை பலருக்கு இருக்கும். ஆனால், ஆசைப்படும் அனைவருக்கும் இது சாத்தியமாகிவிடுவதில்லை. இதனால் வழக்கமான அலுவல் பணியையே பலர் தேர்வு செய்கின்றனர். தொழில் முயற்சியை கையில் எடுக்கமுடியாமல் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் பிரதான காரணமாக முதலீட்டை சொல்லலாம்.
தொழில் தொடங்கவேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. ஆனால் அதிக தொகை முதலீடு செய்யமுடியாது. இதுதான் உங்கள் பிரச்சனையா? கவலையை விடுங்கள். மிகக்குறைந்த தொகையாக 20,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கக்கூடிய 20 சிறு தொழில் முயற்சிகளை நாங்கள் உங்களுக்காக தொகுத்திருக்கிறோம்.
ரூ.20,000 முதலீட்டில் தொடங்கக்கூடிய 20 சிறு தொழில் முயற்சிகள்
1. பேப்பர் மாஷ் கலைப்பொருட்கள் (Papier-Mache Crafts)
காகித கிழிசல்களை பசை போன்ற பொருட்களுடன் கலந்தும் பேப்பர்களை அடுக்குகளாக அழுத்தி ஒட்டியும் பேப்பர் மாஷ் கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஈரப்பதத்துடன் இருக்கும்போது தேவையான வடிவம் கொடுக்கப்பட்டு பின்னர் உலர வைக்கப்படும். நன்கு காய்ந்ததும் இவை இறுகிவிடும்.
மிகக்குறைந்த செலவில் தொடங்கக்கூடிய தொழில் இது. இதற்கென பிரத்யேகமாக டூல் எதுவும் தேவைப்படாது. கிரியேடிவ் சிந்தனை கொண்டவராக நீங்கள் இருந்தால் இது உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
பேப்பர் மாஷ் கலை மூலம் பவுல், பென்டென்ட் லைட், அலங்காரப் பூக்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் என ஏராளமானவற்றை தயாரிக்கலாம். விற்பனை செய்ய சமூக வலைதளங்களையும் மின்வணிக தளங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
2. தனித்தேவைக்கேற்ற பரிசுப்பொருட்கள் (Personalised Gifting Items)
இன்று தனித்தேவைக்கேற்ற பரிசுப்பொருட்களுக்கான தேவை அதிகம் உள்ளது. அனைவரும் தங்களுக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் விதவிதமான பரிசுப்பொருட்களைக் கொடுத்து ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
வழக்கமான முழுநேர வேலையை செய்தபடியே இந்தத் தொழிலைத் தொடங்கலாம். அவ்வப்போதைய ட்ரெண்ட் குறித்த புரிதலும் படைப்பாற்றலும் இருந்தால் போதும். மூலப்பொருட்களை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி லாபம் பார்க்கலாம்.
3. சமூக வலைதள மார்க்கெட்டிங் (Social media marketing)
சமூக வலைதளங்களில் செயல்படாமல் போனால் இன்றைய காலகட்டத்தில் தொழிலை தக்கவைத்துக்கொள்ள முடியாது. இதனால் எல்லா வணிகமும் சமூக வலைதளங்களில் தீவிரமாக புரொமோட் செய்து வருகின்றன. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்கள் எப்படி இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
SEO உத்திகளையும் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களிடம் லேப்டாப் இருக்குமானால் 5,000-10,000 ரூபாய் வரை முதலீடு செய்து மார்க்கெட்டிங் டூல்களை வாங்கிக்கொள்ளலாம்.
4. பேக்கிங் (Baking)
உங்களுக்கு பேக்கிங் செய்வதில் ஆர்வம் இருக்கிறதா? சுவையான கேக் தயாரிப்பீர்களா? அப்படியானால் விதவிதமான கேக்குகளை பேக் செய்து விற்பனை செய்யலாம். அதிக வருவாய் ஈட்டும் துறைகளின் பட்டியலில் பேக்கரி துறை மூன்றாம் இடத்தில் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றன.
உங்கள் வீட்டின் சமையலறையிலேயே 20,000 ரூபாய் முதலீட்டில் பேக்கரி தொழிலை ஆரம்பித்து லாபம் ஈட்டலாம்.
5. ஊசி எம்பிராயிடரி (Needle Embroidery)
எம்பிராயிடரி வேலை தெரிந்தவர்கள் இந்தத் தொழில் தொடங்கலாம். வீட்டிலேயே சிறிய அளவில் தொடங்கலாம். இதற்கான தேவை எப்போதும் குறைவதில்லை. ஃபேஷன் துறை எப்போதும் முக்கியத்துவம் பெற்று வருவதால் அது சார்ந்த எம்பிராயிடரி பிரிவிற்கான தேவையும் எப்போதும் இருந்து வருகிறது.
14,000 முதல் 16,000 ரூபாய் வரை முதலீடு செய்து ஊசி எம்பிராயிடரி இயந்திரம் வாங்கிவிட்டால் போதும். உங்கள் கிரியேடிவிட்டி கொண்டு விதவிதமான டிசைன்களை உருவாக்கி சம்பாதிக்கலாம்.
6. துணிகளில் ஹேண்ட் பெயிண்டிங் (Hand-painted linen)
வரைவதில் ஆர்வம் இருப்பவர்கள் பகுதி நேரமாக லினென், ஸ்டோல், ஷால் போன்ற துணிகளில் கைகளால் பெயிண்ட் செய்யும் வேலையைத் தொடங்கலாம். எளிதாக வீட்டிலிருந்தே இந்த வேலையை செய்து வருமானம் ஈட்டலாம். கிரியேடிவ் யோசனைகள் இருந்தால் போதும் இளைஞர்களைக் கவரும் வகையில் பெயிண்டிங் செய்து லாபம் ஈட்டமுடியும்.
கைகளால் வரையப்பட்ட தயாரிப்புகளை சமூக வலைதளங்கள் அல்லது மின்வணிக தளங்களில் பட்டியலிட்டு விற்பனை செய்யலாம்.
7. அழகியல் சேவை (Grooming)
மேக் அப், ஹேர்டிரஸ்ஸிங், சருமப் பராமரிப்பு சிகிச்சை என அழகியல் சேவை பிரிவில் ஏராளமான பகுதிகள் உள்ளன. உங்கள் வீட்டிலேயே இந்த வேலையைத் தொடங்கலாம். அல்லது வாடகைக்கு இடம் எடுத்தும் தொடங்கலாம்.
குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில் இது. வளர்ச்சியடைய விரும்புவோர் பியூட்டி பிராண்டுகளுடன் இணைந்தும் செயல்படலாம்.
8. நகை விற்பனை (Jewellery Selling)
அதிக ரிஸ்க் இல்லாத தொழிலில் ஈடுபட விரும்புவோர் செயற்கை நகை விற்பனை தொழிலில் களமிறங்கலாம். தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி வரும் நிலையில் பலர் தங்க நகைகளை அணிந்து செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மாறாக அதிக விலையில்லாத செயற்கை நகைகள் பெண்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
மிகக்குறைந்த தொகையாக 10,000 முதல் 20,000 ரூபாய் முதலீடு செய்து ஹேண்ட்மேட் ஜுவல்லரி வணிகத்தைத் தொடங்கலாம். இடைத்தரகர்களைத் தவிர்த்துவிட்டு நேரடியாக மொத்த விற்பனையாளர்களிடம் வாங்கி விற்பனை செய்யலாம்.
9. ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் (Freelance Writing)
எழுதுவதில் ஆர்வம் இருப்பவர்கள் ஃப்ரீலான்ஸ் எழுத்தாளராக பணியாற்றலாம். ஃப்ரீலான்ஸிங் வலைதளங்களில் ப்ரொஃபைல் உருவாக்கிக்கொள்ளலாம். முதலில் உங்களுக்கு பிடித்தமான பிரிவை நீங்கள் தேர்வு செய்துகொள்ளவேண்டும். இதற்கு முதலீடு என்று எதுவும் தேவைப்படாது.
10. பாப்-அப் ஷாப் (Pop-Up Shops)
கடந்த சில ஆண்டுகளாகவே பாப்-அப் ஸ்டோர்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவோருக்கு பாப்-அப் ஸ்டோர் சரியான தொழில் யோசனையாக இருக்கும். குறைந்த செலவில் சிறு இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தொடங்கலாம்.
துணிகள், ஸ்டேஷனரி, பொம்மைகள், அழகு சாதனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவற்றை பாப்-அப் ஸ்டோரில் காட்சிப்படுத்தலாம்.
11. ஈவென்ட் பிளானிங் (Event Planning)
பெரியளவில் நடைபெறும் திருமணம் முதல் சிறியளவில் நடத்தப்படும் பார்ட்டி, கார்ப்பரேட் ஈவெண்ட்ஸ் வரை பல்வேறு பார்ட்டிகளுக்கு ஈவெண்ட் பிளானிங் செய்யப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்த ஏற்பாடுகளுக்குத் தேவையான பொருட்களை வாடகை முறையில் எடுத்து தொழில் செய்யத் தொடங்கலாம். தொழிலில் நன்றாக காலூன்றிய பிறகு தேவையான பொருட்களில் முதலீடு செய்து பெரியளவில் கொண்டு செல்லலாம்.
12. ப்ரூஃப்ரீடிங் (Proof-reading)
எழுத்து, இலக்கணம், டைப் செய்யப்பட்ட உள்ளடக்கம் போன்றவற்றில் பிழை இருக்கிறதா என சரிபார்க்கவேண்டும். வெளியீட்டாளர்கள், நியூஸ்பேப்பர் நிறுவனங்கள் போன்றவை ப்ரூஃப்ரீரட்களை பணியமர்த்துகின்றன.
திறமையைப் பொருத்து வருமானமும் ஈட்டமுடியும். இதற்கென பிரத்யேகமாக முதலீடு செய்யவேண்டிய அவசியமில்லை.
13. செல்லப்பிராணிகளுக்கான உணவு (Pet Food)
செல்லப்பிராணிகளுக்கான உணவு வணிகத்தைத் தொடங்க உரிமம் பெறவேண்டியது அவசியம். மற்ற டாக்குமெண்டேஷன் வேலைகளும் அவசியம். சிறியளவில் தொடங்க நினைப்பவர்கள் உரிமம் பெற்ற தயாரிப்பாளர்களுடன் இணைந்து வர்த்தகம் செய்யலாம்.
செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அவற்றை வீட்டின் ஒரு உறுப்பினராகவே கருதுகிறார்கள். செல்லப்பிராணிகளின் உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இதனால் செல்லப்பிராணிகளுக்கான உணவு வணிகத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சமூக வலைதளங்களின் உதவியுடன் விற்பனையைத் தொடங்கி படிப்படியாக விரிவுபடுத்தலாம்.
14. செல்லப்பிராணிகளுக்கான ஆக்சசரீஸ் (Pet Accessories)
செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அவற்றிற்கு வண்ணமயமான ஆக்சசரீஸ் பயன்படுத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். செல்லப்பிராணிகளுக்கு பயன்படுத்தும் ஆக்சரீஸ் வணிகம் தொடங்கி நேரடியாக தயாரிப்பாளர்களிடம் வாங்கி லாபம் ஈட்டலாம். இந்த வணிகத்தில் குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் பெறமுடியும்.
15. மொபைல் கவர் (Mobile Covers)
இன்று ஸ்மார்ட்போன் இல்லாதவர்களைப் பார்ப்பது அரிது. எல்லோரிடமும் மொபைல் இருப்பதால் மொபைல் ஆக்சசரீஸ் தேவையும் அதிகமுள்ளது. அதிக லாபம் கொடுக்கும் தொழில் இது.
சந்தையில் பல விதமான மொபைல் கவர்கள் கிடைப்பதால் நீங்கள் விரும்பும் வகைகளைத் தேர்வு செய்து தொடங்கலாம். 20,000-க்கும் குறைவான முதலீட்டில் இந்த வணிகத்தில் நல்ல லாபம் பார்க்கமுடியும்.
16. டயரி மற்றும் நோட்புக் (Diaries and Notebooks)
இன்றைய டிஜிட்டல் காலத்திலும் டயரி, ஆர்கனைசர், ஜர்னல், பிளானர் போன்றவற்றிகான தேவை இருப்பதைப் பார்க்கமுடிகிறது. இவற்றை தயாரிப்பவர்களிடமே நேரடியாக மொத்தமாக வாங்கி மறுவிற்பனை செய்யலாம். அதிக முதலீடு தேவைப்படாத தொழில் இது.
17. வெப் டிசைனிங் (Web Designing)
இன்று கிட்டத்தட்ட எல்லா வணிகமும் ஆன்லைனில் செயல்படுகின்றன. போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில், மற்ற வலைதளங்களில் இருந்து மாறுபட்டு, பார்ப்பவர்களைக் கவரும் வகையில் வெப்சைட்களை உருவாக்குவதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். வெப் டிசைனிங் பிரிவில் உங்களுக்கு திறமையும் ஆர்வமும் இருக்குமானால், இது உங்களுக்கு சரியான தேர்வாக அமையும். ஒரு கம்ப்யூட்டரும் சாஃப்ட்வேர் டூல்களும் இருந்தால் போதுமானது.
18. மண்பாண்டம் தொழில் (Pottery)
மண்பாண்டங்கள் செய்வது சுவாரஸ்யமாக இருக்கும். வார இறுதி நாட்களில் ஓய்வாக இந்த வேலையில் ஈடுபடலாம். நல்ல வணிக வாய்ப்பும் உள்ளது. கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி விற்பனை செய்யலாம். சமூக வலைதளங்களிலும் மின்வணிக தளங்களிலும் விற்பனை செய்யலாம்.
19. கேட்டரிங் (Catering)
உணவு வணிகத்திற்கு எப்போதும் தேவை இருந்துகொண்டே இருக்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் இன்றைய காலகட்டத்தில் வீட்டில் சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் சுவையான உணவுகளை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள்.
20,000 ரூபாய்க்குள் முதலீடு செய்தால் போதும் டிஃபன் சர்வீஸ் தொடங்கிவிடலாம். ஆரம்பத்தில் விளம்பரம் செய்தால் போதும் படிப்படியாக வாடிக்கையாளர்களே மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்வார்கள்.
20. பயிற்சி (Tutoring)
நீங்கள் எந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறீர்களோ அது தொடர்பாக மற்றவர்களுக்கு பயிற்சியளிக்கலாம். பாடங்கள், அழகுக்கலை, விளையாட்டு, டிசைனிங் இப்படி எந்தத் துறையில் உங்களுக்கு நிபுணத்துவம் இருக்கிறதோ அதில் பயிற்சியளித்து வருமானம் ஈட்டலாம்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா
Business Idea: குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டக் கூடிய 35 வணிகங்கள்!