'India Tomorrow'- பாலியல் தொழிலாளியை முன்வைத்து வளர்ச்சிப் பாதை காட்டும் குறும்படம்
'ஜப் வீ மெட்', 'ஹைவே' உள்ளிட்ட இந்தித் திரைப்படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்த சினிமா படைப்பாளி இம்தியாஸ் அலி. சமூக அக்கறையுடன் அவ்வப்போது சில நிமிட குறும்படங்களை வெளியிடுவது இவரது வழக்கம். அந்தக் குறும்படங்கள் ஒவ்வொன்றும் 'அட' போடவைக்கும் ஆச்சரியங்கள் நிரம்பியவை.
அந்த வகையில் இம்தியாஸ் அலி செவ்வாய்க்கிழமை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட இந்தியா டுமாரோ (India Tomorrow) என்ற 5 நிமிட குறும்படம் இரண்டே நாளில் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் சுமார் 20 ஆயிரம் லைக்குகளையும், 4,500 ஷேர்களையும், நூற்றுக்கணக்கான கருத்துகளையும் பெற்றிருக்கிறது.
நம் நாட்டையும் நம் சமூகத்தையும் வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் அக்கறை உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய படைப்பு. அதிலும் மிகக் குறிப்பாக, எதைப் பற்றியும் அக்கறை இல்லாதவர்கள் பார்த்து சில விஷயங்களை உணரவும் உறுதுணை புரியும் படமும் கூட.
ஓர் இரவு. ஒரு வாடிக்கையாளருடன் பாலியல் தொழிலாளி இருக்கிறார். அப்போது, அந்த நபருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவரது அதிர்ச்சிமிகு பேச்சின் மூலம் அவர் ஒரு பங்குச்சந்தை தரகர் - முதலீட்டாளர் என்பதும், அவர் வசம் உள்ள நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததும் தெரிய வருகிறது. அந்த தொலைபேசி உரையாடலுக்கு இடையே அந்தப் பாலியல் தொழிலாளி அடுத்தடுத்து அடுக்கும் அபார யோசனைகளை அப்படியே ஏற்று, புதியப் பாதையை காண்கிறார் அந்த நபர். வியப்பில் ஆழ்ந்துபோன அந்த நபர் ஆர்வத்துடன் பாலியல் தொழிலாளியை தனிப்பட்ட முறையில் விசாரிக்க, அதை அந்தப் பெண் எதிர்கொள்ளும் விதம் அசத்தல்.
இம்தியாஸ் அலியின் படங்களில் வருகின்ற அறிவுக்கூர்மையும் அசாத்திய துணிச்சலும் மிக்க பெண் கதாபாத்திரங்களைப் போலவே இதில் வரும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரமும் அமைந்துள்ளது.
'கேள்விகள் வெவ்வேறானதாக இருக்கலாம்... கனவு காண்பது மட்டுமே ஒரே பதில்!' என்ற வரிகளுடன் தொடங்கும் இந்தக் குறும்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். 'விண்டோஸ் சீட் ஃபிலிம்ஸ்' தயாரித்துள்ள இந்த அட்டகாசமான குறும்படம், நாளைய இந்தியாவின் மாற்றங்களுக்கும் முன்னேற்றங்களும் நாட்டின் எந்த மூலையில் இருந்தும், விளிம்புநிலை மனிதர்கள் என்று அறியப்படுபவர்களிடம் இருந்தும் அற்புதமான பங்களிப்பு இருக்கும் என்ற விவாதத்தை முன்வைக்கும் இந்தப் படத்தை நீங்களும் பார்த்து ரசித்து பயனடையுங்கள்...
| முக்கியக் குறிப்பு: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கத்தக்க குறும்படம் இது. |
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரை: