சிறு தொழில் நிறுவனங்கள் துவங்க PMEGP திட்டத்தை பயன்படுத்திக் கொள்வது எப்படி?
மக்கள் சொந்த தொழில் துவங்கி வேலைவாய்ப்பை உருவாகக் வழி செய்ய உதவும் கடன், மானியம் சார்ந்த திட்டமாக PMEGP விளங்குகிறது.
இந்திய அரசு, பிரதம மந்திரி ரோஜ்கர் யோஜனா ( பிஎம்.ஆர்.ஒய்) மற்றும் கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் ( ஆர்.இ.ஜி.பி) ஆகியவற்றை குறும் நிறுவனங்கள் துவக்க உதவுவதன் மூலம் வேலை வாய்ப்பை பெருக்க 2008 வரை செயல்படுத்தி வந்தது. பின் இந்த இரண்டும் திட்டங்களும் இணைக்கப்பட்டு 'பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம்' ( பி.எம்.இ.ஜி.பி) Prime Ministers Employment Generation Programme, (PMEGP)
ஆக மாற்றப்பட்டது.
பி.எம்.இ.ஜி.பி, சுய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான கடனுடன் இணைந்த மானிய திட்டமாகும். பி.எம்.ஆர்.ஒய் மற்றும் ஆர்.இ.ஜி.பி ஆகிய திட்டங்கள் போலவே இதுவும் செயல்படுகிறது. இந்த திட்டம், மக்கள் சொந்த வர்த்தகத்தை துவக்கி, வேலைவாய்ப்பை உருவாக்க வழி செய்கிறது.
இந்த திட்டம் பற்றிய முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளும் வருமாறு:
பி.எம்.இ.ஜி.பி
சிறு தொழில் நிறுவனங்களை அமைப்பதன் மூலம், இந்தத் திட்டம் நாடு முழுவதும் சீரான வேலைவாய்ப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி அமைப்புகள் கடன் வழங்குவதை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம்.
இந்தத் திட்டத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் நிர்வகிக்கிறது. காதி மற்றும் கிராமப்புறத்துறை தொழில்கள் கமிஷன் (கே.வி.ஐ.சி) இதை தேசிய அளவில் அமல் செய்கிறது. மாநில அளவில், கே.வி.ஐ.சி இயக்குனரகங்கள், மாநில காதி மற்றும் கிராமப்புற தொழில் வாரியங்கள் மற்றும் மாநில தொழில் மையங்கள், வங்கிகளால் செயல்படுத்தப்படுகிறது.
இத்துறை அமைச்சரான நிடின் கட்காரி, 2018-19 ல், பி.எம்.இ.ஜி.பி 5.87 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாக அண்மையில் தெரிவித்தார்.
ஜம்மூ காஷ்மீர் ( 60,232) மகாராஷ்டிரா ( 45,136) உத்திர பிரதேசம் ( 41,944) மற்றும் தமிழ்நாடு (41,480) ஆகிய மாநிலங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் கீழ், 2014-15 ஆண்டில் 3.58 லட்சம், 2015-16 ஆண்டில் 3.23 லட்சம், 2016-17 ஆண்டில் 4.08 லட்சம் மற்றும் 2017-18 ஆண்டில் 3.87 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதாக கட்காரி மேலும் தெரிவித்தார்.
பி.எம்.இ.ஜி.பி/முத்ரா திட்ட நிறுவனங்கள் விரிவாக்கத்திற்கு இந்த திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நிதியுதவியும் அளிக்கப்படுகிறது. உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.1 கோடி வரை மற்றும் சேவை நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை நிதி உதவி கிடைக்கும். வடகிழக்கு அல்லாத பகுதிகளுக்கு 15 சதவீத மானியம் மற்றும் வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி இடங்களுக்கு 20 சதவீத மானியமும் உண்டு.
தகுதி, மானியம்
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், உற்பத்தி பிரிவில் ரூ. 10 லட்சம் மேல் மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் சேவை/ வர்த்தக துறையில் ரூ.5 லட்சம் மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கு கடன் பெற குறைந்தது 8வது படித்திருக்க வேண்டும்.
வர்த்தகத் திட்டம் புதிதாக இருக்க வேண்டும் மற்றும் சுய உதவிக் குழுக்கள், சொசைட்டி பதிவு சட்டம் கீழ் பதிவான கழகங்கள், உற்பத்தி கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அறக்கட்டளையும் இதன் கீழ் பயன்பெறலாம்.
ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் (பி.எம்.ஆர்.ஒய், ஆர்.இ.ஜி.பி அல்லது மற்ற அரசு திட்டங்கள் கீழ் வருபவை) மற்றும் மத்திய, மாநில அரசுகளின் மற்ற திட்டங்கள் கீழ் மானியம் பெற்ற நிறுவனங்கள் இதில் பயன்பெற முடியாது.
உற்பத்தித் துறையில் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்படும் அதிகபட்ச தொகை ரூ.25 லட்சம். வர்த்தகம்/ சேவை பிரிவில் இது ரூ.10 லட்சம் ஆகும்.
மானியத் தொகை, பொது பிரிவில், நகரங்களில் திட்ட செலவில் 15 சதவீதம் மற்றும் கிராமப்புறங்களில் 25 சதவீதம். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள், சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு நகரங்களில் 35 சதவீதம் மற்றும் கிராமங்களில் 35 சதவீதம்.
மொத்தத் திட்ட செலவில் எஞ்சிய தொகை வங்கிகளால் கடன் மற்றும் செயல் மூலதனமாக அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறை
கே.வி.ஐ.சி மாநில அல்லது மண்டல இயக்குனர்களால், கே.வி.ஐபி மற்றும் மாநில தொழில் இயக்குனர்கள் ஆலோசனையின் பேரில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான நிறுவனங்கள் துவக்க விரும்புகிறவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை கோரும் விளம்பர, வெளியிடப்படுகிறது.
https://www.kviconline.gov.in/pmegpeportal/pmegphome/index.jsp ஆன்லைனில் விண்ணப்பம் சமர்பித்து, பின்னர் அதை அச்சிட்டு, விரிவான திட்ட அறிக்கையுடன் தொடர்புடைய அலுவலகங்களில் சமர்பிக்கலம்.
தொடர்புக்கு
மாநில இயக்குனர், KVIC
முகவரி http://www.kviconline.gov.in
துணை சி.இ.ஓ (PMEGP), KVIC, மும்பை
போன்: 022-26711017
இமெயில்: [email protected]
திட்டம் பற்றி மேலும் விவரங்களுக்கு: