'தமிழ்நாட்டில் ஆழ் நுட்பத்துறையில் புதுமையாக்கத்தை உருவாக்குங்கள்' - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
வளர்ந்து வரும் மற்றும் ஆழ் தொழில்நுட்ப பரப்பில் புதுமையாக்கத்தை வளர்த்தெடுப்பதில் வர்த்தக நிறுவனங்களின் பங்கு முக்கியம் என்று சென்னையில் நடைபெற்ற iTNT தொழில் மாநாட்டில் உரை நிகழ்த்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
வளர்ந்து வரும் மற்றும் ஆழ் தொழில்நுட்ப பரப்பில் புதுமையாக்கத்தை வளர்த்தெடுப்பதில் வர்த்தக நிறுவனங்களின் பங்கு முக்கியம், என்று சென்னையில் நடைபெற்ற iTNT தொழில் மாநாட்டில் உரை நிகழ்த்திய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் (IT&DS) துறை கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் iTNT தொழில் மாநாட்டை சென்னையில் செப் 6ம் தேதி நடத்தியது. நிகழ்ச்சியில் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்திரனாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
“தமிழ்நாட்டில் புதுமையாக்கத்தை உருவாக்குங்கள் (IN2TN) என்பதே எங்கள் புதிய தாரக மந்திரம். இது வெறும் முழக்கம் மட்டும் அல்ல, இது செயலாக்கத்திற்கான அழைப்பு. மாநிலத்தில் புதுமையாக்க கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் கொண்டுள்ள ஈடுபாட்டின் அடையாளம்,” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
தமிழ்நாட்டை லட்சம் கோடி பொருளாதாரமாக உருவாக்கும் முதல்வரின் இலக்கை அடைவதில் புதுமையாக்கம் மற்றும் ஸ்டார்ட் அப்கள் முக்கிய பங்கு வகிப்பதகாவும் அமைச்சர் கூறினார்.
இந்த இலக்கை நோக்கிய பயணத்திற்கு உறுதுணையாக தமிழ்நாடு ஆழ் தொழில்நுட்ப கொள்கை நாட்டிலேயே முதல் முறையாக உருவாக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். மாநிலத்தில் புதுமையாக்கத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றும் என குறிப்பிட்ட அமைச்சர், தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்ப மையத்துடன் (iTNT) மேலும் ஆழமாக இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
எதிர்கால புதுமையாக்க சவால் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ரூ.4.5 லட்சம் மதிப்பிலான பரிசுகளை வழங்கினார். இந்த போட்டியில் 500 ஸ்டார்ட் அப், புதுமையாக்கம் மற்றும் ஆழ் நுட்ப ஆர்வலர்கள் குழு பங்கேற்றது. வல்லுனர்கள் குழு இவர்களில் இருந்து பத்து குழுக்களை தேர்வு செய்தது. இக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் வல்லுனர்கள் முன் தங்கள் திட்டங்களை சமர்பித்தனர்.
மருத்துவ நல ஸ்டார்ட் அப் `வியுஹா மெட் டேட்டா` (Vyuhaa Med Data) ஏஐ மற்றும் ஐஓடி சேவைக்காக முதல் பரிசு வென்றது. நீடித்த வளர்ச்சி ஸ்டார்ட் அப் `டைஜோ` (Daijo) நுகர்வு குறைப்பு தொடர்பான தீர்வுக்காக இரண்டாம் பரிசு வென்றது. காலநிலை நுட்ப ஸ்டார்ட் அப் `கிளைமட்குவாண்ட் டெக்` (Climatequant Tech) மூன்றாம் பரிசு வென்றது.
“பரிசு பெற்ற திட்டங்களை ஆழ் நுட்ப நிறுவனங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது,” என்று துறை கூடுதல் தலைமை செயலர் குமார் ஜெயந்த் கூறினார்.
முன்னதாக குமார் ஜெயந்த் தலைமையில், தமிழ்நாடு ஆழ் தொழில்நுட்ப கொள்கை தொடர்பான அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. iTNT சி.இ.ஓ வனிதா வேணுகோபால் துணை தலைவராக இருந்தார். துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றனர்.
Edited by Induja Raghunathan