Stock News: பேரெழுச்சிக்கு பிறகு பங்குச் சந்தையில் தொடங்கிய சரிவு!
இந்தியப் பங்குச் சந்தையில் நேற்று பெரும் எழுச்சியான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவை சந்தித்து வருகின்றன.
இந்தியப் பங்குச் சந்தையில் நேற்று பெரும் எழுச்சியான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் சரிவை சந்தித்து வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையில் நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் உயர்ந்து 82,962 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 470 புள்ளிகள் உயர்ந்து 25,388 ஆகவும் புதிய உச்சம் கண்டன. இதனால், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.467 லட்சம் கோடியாக உயர்ந்து; முதலீட்டாளர்களுக்கு ரூ.6.6 லட்சம் கோடி லாபம் கிட்டியது.
அமெரிக்க பணவீக்கம் சற்றே குறைவதுடன், இம்மாதம் 18ம் தேதி வட்டி விகிதத்தை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் ஓரளவு குறைத்து அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியதால் பங்குச் சந்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், அது இன்று நீடிக்கவில்லை.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (செப்.13) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 200.03 புள்ளிகள் சரிந்து 82,762.68 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 67.5 புள்ளிகள் சரிந்து 25,321.40 ஆக இருந்தது.
அதன்பின், சரிவு நிலை என்பது சற்றே குறையத் தொடங்கினாலும் இந்தியப் பங்குச் சந்தையில் நெகட்டிவ் வைப் தான் படர்ந்துள்ளது.
முற்பகல் 11.50 மணியளவில் சென்செக்ஸ் 43.18 புள்ளிகள் (0.052%) சரிந்து 82,919.53 ஆக இருந்தது. அப்போது, நிஃப்டி 20.85 புள்ளிகள் (0.082%) சரிந்து 25,368.05 ஆக இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றம் நிலவி இருந்தாலும் சியோல், டோக்கியோ, ஹாங்காங் முதலான ஆசிய பங்குச் சந்தைகளில் நிலவும் வீழ்ச்சியின் தாக்கம் தற்போது இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்
டாடா மோட்டார்ஸ்
பவர் கிரிட்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஏசியன் பெயின்ட்ஸ்
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
ஐடிசி
இந்துஸ்தான் யூனிலீவர்
பாரதி ஏர்டெல்
சன் பார்மா
இன்ஃபோசிஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இந்திய ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத் தொடக்கத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து டாலர் ஒன்றுக்கு ரூ.83.91 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan